×

ங போல் வளை – யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

ஒளியில் துலங்கும் முழுமை

உலகம் முழுவதுமுள்ள கதைகளில், புராணங்களில் அசுரர்கள், தேவர்கள் என இரண்டு வகையானவர்களை நாம் காணமுடியும். அதில் அசுரர்கள் அழிக்கப்படுவதும், எதிர்மறை தன்மையுடன் இருப்பதுமாக ஏன் சித்தரிக்கப்படுகிறது?

ஏனெனில், இந்தப் பிரபஞ்ச இயக்கத்தைக் குலைக்க விரும்பும் எந்த ஆற்றலுமே, எதிர்மறையானது என நாம் கருதுகிறோம். பிறப்பு இறப்பு என்பது இங்குள்ள இயக்கத்தின் மிக முக்கியமான சுழற்சி. அசுரர்கள் இதைக் கலைக்க விரும்புகின்றனர். ஆகவே, சாகாவரம் என்பது அவர்களுடைய முதல் கோரிக்கையாக இருக்கிறது.சாகாவரம் என்பது இங்கேயே நிலையாக தங்கிவிடுதல். எதன் மூலமாகவும் அழிக்க முடியாத நிலை.

இப்படி ஒரு வரம் பெற்ற பின்னர், அவர்களுடைய ஆணவம் தூண்டப்பட்டு, தான் நினைக்கும் விதத்தில் இந்த இயக்கத்தை ஆட்டிப்படைக்க முடிவெடுக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக மற்ற அனைத்து படைப்புகளின் இயக்கம் முடங்குகிறது. இப்படி அச்சுறுத்துதலும், சாகாவரத்துடன் தேங்கி நின்றுவிடுதலும், தமோ குணத்தின் அம்சங்கள் என்கின்றன உலகப் புராணங்கள்.

தமோ குணம் உச்சத்தை அடையும் பொழுது அது அழிக்கப்பட வேண்டிய சக்தியாக மாறுகிறது. தெய்வ அவதாரங்கள் தோன்றி அப்பணியைச் செய்கிறது. இது ஏதோ அசுர-தேவர்களுக்கான கதைகள் எனப் புரிந்துகொள்ளாமல், நம்முடைய வாழ்வில் தோன்றும் இது போன்ற குணங்கள் பற்றியும் அதன் மூலம் நாம் அடைவது பற்றியும் யோகம் மிகவிரிவாகப் பேசுகிறது.

தங்குதல், தேங்கி நிற்றல், செயலின்மை போன்ற குணங்களை தமோ குணம் எனப் பார்த்தோம். அதிலிருந்து மேலெழ தீவிர முயற்சியும் பயிற்சியும் இங்கே சொல்லப்படுகின்றன. அப்படியான பயிற்சிகள் ஒருவரை ரஜோ குணம் நோக்கி நகர்த்தும், அங்கிருந்து மட்டுமே ஒருவர் சத்வ குணம் எனும் ஆனந்தமான, சமநிலையான, அமைதியும் மகிழ்வும் பெறமுடியும். எனினும் யோக மரபு மூன்று குணங்களையும், ‘குண விருத்தி’ என்றே குறிப்பிடுகிறது. ஒரு யோகியானவன், எதிர்மறை, நேர்மறை, சமநிலை எனும் மூன்று குணங்களையும் கடந்தவனாக வேண்டும்.

அமைதியும் சமநிலையும், ஆனந்தமும் கொண்ட நம் நாட்களை ‘சாந்த விருத்தி’ என்றும், ஆசைகளும், லட்சியங்களும், தீவிரமும், கோபமும் அதை நோக்கிய செயலும் கொண்ட நாட்களை ‘கோர விருத்தி’ என்றும், செயலின்மையும், சோம்பலும், தேக்கமும் கொண்ட நாட்களை ‘மூட விருத்தி’ என்றும்
வகைப்படுத்துகிறது.

எனினும் வாழ்வை இனிமையாக்கிக்கொள்ள நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். உயிரின் இயல்பு ஆனந்தம். மனம் எனும் ஒரே ஒரு கருவி, நம்மை மகிழ்விலிருந்து ஒவ்வொரு முறையும்
சிதறடித்துக்கொண்டே இருக்கிறது. மனதையும், நம் இருப்பையும் மகிழ்வில் கட்டி நிறுத்தும் பொழுது நம்மில் மேலோங்கி இருப்பது ‘சத்வ குணமே’ எனவே, சத்வ குணம் மேலெழ இங்கே ஒரு பாடத்திட்டம் உள்ளது.

அது ரஜோ குணத்திலிருந்து படிப்படியாக ஏறி வரவேண்டியுள்ளது. சத்வம் என்பது ஏதோ துறவியருக்கோ, முதியவருக்கோ, ஞானியருக்கோ மட்டுமான ஒரு குணமன்று. அன்றாடத்தில் இருக்கும் நாம் அனைவருமே ஏதேனும் ஒருவகையில் இங்கே அந்த ஒரு துளி தேனை அருந்தவே செய்கிறோம். ஒரு குழந்தையுடன் மகிழ்ந்து விளையாடும்பொழுது, மன நிறைவாக ஒன்றை கூர்ந்து செய்யும் பொழுது, பல்வேறு வடிவங்களில் சத்வ குணத்துடன் பொருத்திக்கொள்கிறோம். எனினும் அந்த மகிழ்ச்சியும் நிறைவும் நீடிப்பதில்லை. அப்படி நீட்டித்துக் கொண்டவர்களையே நாம் ரிஷிகள், சூஃபி ஞானிகள், சாதகர்கள், யோகிகள் என்கிறோம்.

யோக மரபில் பிராணனும் சத்வ குணமும் ஒன்றை ஒன்று நிரப்பும் இரண்டு பாத்திரங்களாக முன்வைக்கப்படுகின்றன. ஒரு யோகப் பயிற்சி செய்யும் சாதகன் பிராணனை அடைகிறான். பிராணன் அவனை நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைக்கிறது. இவை மூன்றும் சத்வ குணத்தின் பிரதிபலிப்பு.அதே போல மகிழ்ச்சியை, உற்சாகத்தை, மன நிறைவைப் பெருக்கிக்கொள்ளும் ஒருவன், இந்த வாழ்வில் ஐந்து கோசங்களிலும் பிராணனை நிரப்புகிறான். பிராணன் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை முன்னரே பார்த்தோம்.

ஆக யோக சாதகன் ஒருவன் மகிழ்ச்சியாக இருப்பது என்பதே இதன் அடிப் படையாகிறது. ஆயுர்வேதம் மனதை சத்வம் என்றே குறிப்பிடுகிறது. சரகர், ஞானம், ஒழி, பிரகாசம், தியானம், சுகம் என அனைத்தையும் சத்வ நிலையாகக் கொள்கிறார். வாக் பட்டர் தனது, ‘அஷ்டாங்க ஹிருதயம்‘ எனும் நூலில், சுத்தமானவன், நம்பிக்கையாளன், தேர்ந்த ருசியுடையவன், மதி நுட்பமானவன், நேர்மையின் மீது நம்பிக்கை கொண்டவன் என ஐவரையும் சத்வ குணத்திற்கானவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.

சுவாமி சிவானந்தர் கூறுகையில் ‘பிரகாசம்’ எனும் நிலையை சத்வ குணத்துடன் குறிக்கிறார். ஒருவர் உள்ளும் வெளியும் தூய, மற்றும் ஒளிமிக்க நிலையில் இருக்கும் பொழுது, சத்வ
நிலையில் இருக்கிறார்.எனில், இவ்வளவு மேன்மைகளைக் கொண்ட சத்வ குணத்தை அடைவதற்கோ, நீட்டித்துக்கொள்வதற்கோ, ஏதேனும் பாதைகள் இருக்கிறதா? என்கிற கேள்விக்கு, பதஞ்சலியிடமிருந்தே விடை காண்கிறார்.பதஞ்சலி யோக சூத்திரத்தில் சொல்லப்படும் ‘அப்பியாசம்’ வைராக்யம் எனும் இரண்டு கருவிகளைக் கொண்டு ஒருவர் தாமச குணத்திலிருந்து, ரஜோ குணத்துக்கும், அங்கிருந்து சத்வ நிலைக்கும், அங்கே நீடித்து நிற்பதற்கும் யோக மரபில் சில பாடத்திட்டங்கள் சொல்லப்படுகின்றன.

முதலில் அப்பியாசம் எனப்படும் ‘பயிற்சி’ அதில் ஆசனப் பிராணாயாமங்கள் மற்றும் பிரத்யாஹார பயிற்சிகள், தமோ நிலையில் இருக்கும் ஒருவருக்கும் ரஜோ நிலையில் தத்தளிக்கும் ஒருவருக்கும் முன் வைக்கப்படும் கருவிகள், நீண்ட காலம் ஒருவர் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமாக மட்டுமே, குண சமநிலையும் , குணங்களைக் கடக்கும் ஆற்றலும் அமையும். ஆக, உங்களுக்கே உங்களுக்கான பயிற்சி திட்டத்தைத் தேர்ந்தெடுத்தல், அதை ஒவ்வொரு நாளும் பயிலுதல். எனும் முதல் நிலை.

அடுத்ததாக, வைராக்கியம். அப்பியாசம் எனப்படும் பயிற்சிகள்கூட ஒருவருக்கு அமைந்துவிடலாம். ஆனால், வைராக்கியம் இல்லாமல் ஒருவரால் அதைத் தொடரவோ, தன் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தவோ முடியாது. ஏனெனில், ரஜோ குணம் நம்மை உந்தித் தள்ளி பயிற்சிகள் செய்ய வைத்து விடும். ஆனால், எந்த குணமும் நீண்ட காலம் தனித்து நீடிக்காது என்பதால், சில காலம் பயிற்சி செய்துவிட்டு, பின்னர் சிறிய அளவில் சலிப்பும், தடையும் வரும்பொழுது, மொத்தமாக நாம் தமோ குணம் நோக்கி சென்று விடவே இங்கே வாய்ப்புகள் அதிகம்.

பயிற்சிகளைக் கைவிடுவோம் அல்லது வேறு வேறு விஷயங்களின் மீது நாட்டம் கொள்வோம். இந்த கையறு நிலையிலிருந்து மீள ஒருவருக்கு வைராக்யமே ஒரே கருவி, வறட்டு வீராப்பு என்பதை சிலர் வைராக்யம் எனத் தவறுதலாகப் புரிந்து கொண்டு, இருபது முப்பது வருடங்களை வீணடிப்பதுண்டு. யோக மரபு சொல்லும் வைராக்யம் என்பது எந்தச் சூழலிலும், தன் சாதனாவை கைவிடாத மனோபாவம். இது நம்மை படிப்படியாக சத்வ குணம் நோக்கி அழைத்துச் செல்வதற்கும், ஆனந்த மய கோசத்தில் அமைவதற்கும் வழிவகுக்கும்.

உபவிஷ்ட கோணாசனம்

இந்தப் பகுதியில் நாம் ‘‘உபவிஷ்ட கோணாசனம்’’ எனும் பயிற்சியைப் பார்க்கலாம். கால்கள் இரண்டும் நீட்டி பரப்பிய நிலையில் அமர்ந்து மைய நிலையில் மூச்சை உள்ளிழுத்து, மூச்சை வெளியே விடும்பொழுது முன்புறமாகக் குனிந்து நெற்றியில் தரையைத் தொட முயலலாம். அதே வேளையில் மூட்டுப்பகுதியை மடிக்கக் கூடாது. இறுக்கமான தொடைகளும், பெண்களுக்கான மாதவிடாய் சார்ந்து பிரச்னைகளும் இருப்பவர்களும் செய்து பயனடையலாம்.

The post ங போல் வளை – யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Selandararajan.ji ,Puranas ,
× RELATED டூர் போறீங்களா?