×

மகளை கேட்டு தொல்லை கொடுத்ததால் திருநங்கையாக மாறிய கணவனை ரவுடிகளை ஏவி கொன்ற ஆசிரியை

*தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை : தெலங்கானாவில் கணவன் திருநங்கையாக மாறிய நிலையில, மகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு தொல்லை கொடுத்ததால், ஆத்திரமடைந்த ஆசிரியை ரவுடிகள் ஏவி தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டம் பொய்கல்லியை சேர்ந்தவர் வேதஸ்ரீ, தனியார் பள்ளி ஆசிரியை.

இவருக்கும், நசர்புரா தெருவை சேர்ந்த தாரிபள்ளி வெங்கடேஷ்(33) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை வெங்கடேஷ் துன்புறுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெங்கடேஷின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் இரு காதுகளை குத்தி கம்மல் போட்டுக்கொண்டும், மூக்கு குத்தி கொண்டும், பெண்களின் ஆடைகளை இரவில் அணிய தொடங்கி உள்ளார். பின்னர் அவர் 2019ல் திருநங்கையாக மாறி தனது பெயரை ரோஜா என்றும் மாற்றி கொண்டார்.

திடீரென கணவர் திருநங்கையாக மாற தொடங்கியதால், வேதஸ்ரீ கடந்த 7 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் வெங்கடேஷ் தனது மகளை தனக்கு கொடுக்குமாறு மனைவியிடம் தொல்லை செய்து வந்துள்ளார். பலமுறை வேதஸ்ரீ ஆசிரியையாக பணிபுரியும் தனியார் பள்ளிக்கு வெங்கடேஷ் சென்று தொந்தரவு செய்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை வேலையை வீட்டு நீக்கியது.

வேறு பள்ளியில் சேர்ந்தாலும் இதே நிலை தொடர்ந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த போயினி ரமேஷ் என்பவருடன், வேதஸ்ரீ பழக தொடங்கினார். ரமேஷூடன் சேர்ந்து, வெங்கடேஷை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதையடுத்து, வேதஸ்ரீ ரமேஷூடன் இணைந்து அந்த ஊரில் உள்ள செருப்பு வியாபாரியான மற்றொரு ரமேஷ் என்பவருடன் சேர்ந்து ரூ.18 லட்சம் கொடுத்து ரவுடிகளை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதற்காக 2 தவணைகளில் ரூ.4.60 லட்சம் பணத்தை வேதஸ்ரீ வழங்கினார். இதனையடுத்து ரமேஷின் நண்பரான செருப்பு கடை ரமேஷ், நாங்குனூர் மண்டலம் நாகராஜுபள்ளியைச் சேர்ந்த ரவுடி இப்பலா சேகர் என்பவர் கொலை செய்வது குறித்து கூறியுள்ளார்.

அதன்படி அனைவரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்பலா சேகரை, வேதஸ்ரீயின் கணவர் வெங்கடேஷூடன் அறிமுகம் செய்ய வைத்தனர். பின்னர், வெங்கடேஷை அவர் அவ்வப்போது சந்தித்து வந்தார். வெங்கடேஷை நம்ப வைத்த இப்பலா சேகர் வாரங்கலில் இருந்து சித்திப்பேட்டைக்கு போன் செய்து வரவழைத்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி நசரபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த வெங்கடேஷ் உடன் சேர்ந்து சேகர் மது அருந்தினார்.

பின்னர், போதையில் இருந்த வெங்கடேஷை மேலும் இருவர் உதவியுடன் தலையணையால் முகத்தில் அழுத்தி மூச்சுத்திணறவைத்து கொன்று அங்கிருந்து தப்பி ஓடினர். இதுதொடர்பாக சித்திப்பேட்டை முதலாவது நகர இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில் வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டதால், விசாரணையின் ஒரு பகுதியாக போலீசார் தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்தனர்.

இந்த கொலையில் வேதஸ்ரீயுடன் மேலும் 5 பேர் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து வேதஸ்ரீ, போயினி ரமேஷ், இப்பலா சேகர் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மகளை கேட்டு தொல்லை கொடுத்ததால் திருநங்கையாக மாறிய கணவனை ரவுடிகளை ஏவி கொன்ற ஆசிரியை appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,
× RELATED தாய் அருகே விளையாடிக்...