×

பழமை வாய்ந்த குன்னம் பாறைகளை பாதுகாக்க வேண்டும் ஆட்சியரிடம் வலியுறுத்தல்

விழுப்புரம், ஜன. 6: பலகோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த குன்னம் பாறைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் வானுர் அருகே குன்னம் கிராமத்தில் கிடைத்துவரும் கருப்புநிற கிரானைட் பாறைகள் உலகத்தரம் வாய்ந்தவை. அக்கினிப் பாறைகள் என்றும் இவை அழைக்கப்படும். 2,600 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள். உலகின் தொன்மையானப் பாறைகளில் குன்னம் பாறைகளும் குறிப்பிடத்தக்கவை. நல்ல கருப்பு நிறம், உறுதி, அடர்த்தி இவற்றின் காரணமாகவும் குன்னம் பாறைகள் உலகப்புகழ் வாய்ந்தவையாக இருக்கின்றன. குன்னம் பகுதியில் கிரானைட் பாறைகளை வெட்டியெடுக்க 1970களில் அரசு அனுமதி வழங்கியதால் பெரும்பாலான கிரானைட் பாறைகள் வெட்டியெடுக்கப்பட்டுவிட்டன. இப்பகுதியில் மேலும் பல இடங்களில் இத்தகைய கிரானைட் பாறைகள் கிடைக்கலாம் எனத்தெரிகிறது. இத்தகையப் பாறைகள் மேலும் வெட்டி எடுக்கப்படாமல் இருக்கவும், பாதுகாக்கவும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பழமை வாய்ந்த குன்னம் பாறைகளை பாதுகாக்க வேண்டும் ஆட்சியரிடம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Gunnam ,Villupuram ,Senguttuvan ,Villupuram district ,Vanur ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...