×

கல்லல் பகுதி கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்: கிராமமக்கள் வலியுறுத்தல்

 

சிவகங்கை, ஜன.6: கல்லல் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லல் ஒன்றியத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுற்றுப்புற கிராமத்தினர் அனைவரும் அனைத்து பொருட்கள் வாங்குவது, அரசு அலுவலகங்கள் செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் கல்லல் சென்று வருகின்றனர். கல்லல் மட்டுமே இப்பகுதியில் நகர்ப்புறமாக உள்ளது. இந்நிலையில் இங்குள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது.

கல்லலில் இருந்து தேவகோட்டை, காரைக்குடி, மதகுபட்டி, பாகனேரி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்கள் வழியே டவுன் பஸ் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் செல்லும். ஆனால் இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஒரே பஸ்சே வெவ்வேறு நேரங்களில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. பல்வேறு கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பஸ் வந்து செல்லும் நிலை உள்ளது.

விவசாயிகள் அதிகமுள்ள இப்பகுதியில் போதிய பஸ் வசதி இல்லாததால் உரம் உள்ளிட்ட விவசாயப்பொருள்கள் ஏற்றிவர கூடுதல் கட்டணம் செலவழித்து தனியார் வாகனங்களில் ஏற்றிவர வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இலவச பஸ்பாஸ் சலுகையை பயன்படுத்த முடியாமல் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் பல கிலோமீட்டர் பயணம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், பள்ளி நேரங்களில் காலையும் மாலையும் மாணவர்களுக்கு பயனுள்ள நேரங்களில் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். போதிய பஸ்வசதி இல்லாததால் மாணவிகள் பள்ளி செல்வதற்கு பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே ஒரு நளைக்கு ஒரு முறை மட்டுமே பஸ் செல்லும் கிராமங்கள், மேலும் பஸ் வசதியே இல்லாத கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் பஸ்விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post கல்லல் பகுதி கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்: கிராமமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kallal ,Sivagangai ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்