×

சேலத்தில் நடைபயணம் சென்றபோது எடப்பாடி பற்றி வாய் திறக்காத அண்ணாமலை: உள்ளூர் பாஜவினர் ‘அப்செட்’

சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது ஓரு இடத்தில் கூட அதிமுக பற்றியும், எடப்பாடி பற்றியும் பேசாமல் வாய்மூடி இருந்ததால் உள்ளூர் பாஜவினர் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 3 நாட்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அவர் சென்றார். பாத யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, ஒன்றிய அரசின் திட்டங்கள், எதிர்க்கட்சிகள் பற்றி பேசியுள்ளார். இதற்கு முன் பாதயாத்திரை சென்ற இடங்களில் கூட அதிமுகவை பற்றி அண்ணாமலை பேசினார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் ஓரு இடத்தில் கூட அதிமுக பற்றியோ, எடப்பாடி பழனிசாமி பற்றியோ வாய் திறக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ‘‘பாஜவுடனான கூட்டணி முறிவு முறிவுதான். இனி அவர்களுடன் கூட்டணி கிடையாது,’’ என பகிரங்கமாக எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், தமிழ்நாட்டை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய பாஜ அரசு நடத்துகிறது. அதனால், உடனடியாக வெள்ள பாதிப்பிற்கு அரசு கேட்கும் நிதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இப்படி பாஜ பற்றியும், ஒன்றிய அரசை பற்றியும் எடப்பாடி பழனிசாமி பேசியதால், அவருக்கு அவரது சொந்த ஊரான சேலத்தில் வைத்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுப்பார் என கட்சியினர் நம்பியிருந்தனர்.

ஆனால், ஒரு இடத்தில் கூட அதிமுக பற்றியும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வாய் திறக்காமல் அண்ணாமலை மவுனமாக இருந்தார். இதனால் உள்ளூர் கட்சிக்காரர்கள் என்னவாக இருக்கும் என பெரிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் சிலர் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலிடம் போட்ட திடீர் உத்தரவின் காரணமாக அதிமுக, எடப்பாடி பழனிசாமி பற்றி தலைவர் பேசவில்லை என சில முக்கிய நிர்வாகிகள் கீழ்மட்ட தொண்டர்களிடம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வெளிப்படையாக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என இருவரும் கூறி வந்தாலும், உள்ளுக்குள் ஒரு உடன்படிக்கை போட்டுக்கொள்ள ரகசிய திட்டம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, அதிமுக போட்டியிடும் இடங்களில் பாஜ கூட்டணியினரும், பாஜ கூட்டணியினர் போடும் இடங்களில் அதிமுகவும் போட்டியிடாமல் இருக்க ஒரு தொகுதி பிரிப்பு உடன்படிக்கை போட இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான், சேலம் மாவட்டத்தில், ஏன் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான இடைப்பாடியில் கூட அவரை பற்றியும், அவர் மீது ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறும் குற்றச்சாட்டுகள் பற்றியும் வாய் திறக்காமல் அண்ணாமலை பேசி வந்திருக்கிறார் என்பது பாஜகவினரின் குமுறல்.

The post சேலத்தில் நடைபயணம் சென்றபோது எடப்பாடி பற்றி வாய் திறக்காத அண்ணாமலை: உள்ளூர் பாஜவினர் ‘அப்செட்’ appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Edappadi ,Salem ,BJP ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Tamil Nadu… ,
× RELATED சேலம் சமூக ஆர்வலர் புகார்: பாஜ தலைவர்...