×

சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டு 27 பேருக்கு குண்டாஸ்

சிவகங்கை, ஜன.5: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 27 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 49 போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை உள்பட ஐந்து சப் டிவிசன்களாக இந்த போலீஸ் ஸ்டேசன்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களாக சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை சப் டிவிசன்கள் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டில் 16 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது. 2022ம் ஆண்டில் 52பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

2023ம் ஆண்டில் 27பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதம் காரைக்குடியில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட வந்தவரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது. மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேசன்களில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்னை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள், மது விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமை வழக்கு, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என மொத்தம் 27பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது. 2022ம் ஆண்டு கடந்த ஆண்டு முழுவதும் 52 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 27 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளிலேயே 2022ம் ஆண்டில்தான் கூடுதல் எண்ணிக்கையில் குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டது. தொடர் குண்டர் தடுப்புச்சட்ட கைதுகள் குற்றவாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேசன்களிலும் சமூக விரோதிகள், ரவுடி லிஸ்டில் உள்ளவர்கள், கூடுதல் வழக்கு உள்ளவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர்.

தற்போது போக்சோ பிரிவில் கைது செய்யப்படுபவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்படுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்படுகிறது. இவர்கள் தவிர பிற வழக்குகளில் ஒவ்வொருவர் மீதும் குறைந்தபட்சம் 5வழக்குகளுக்கு மேல் உள்ளவர்களும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர் என்றனர்.

The post சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டு 27 பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Sivagangai district ,Sivagangai ,Manamadurai ,Karaikudi ,Tirupattur ,Devakot ,
× RELATED மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய...