×

தென்மாவட்டங்களை புரட்டி போட்ட பெருமழை: நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள 792 உடைப்புகளை தற்காலிகமாக சரி செய்ய ரூ.100 கோடி தேவை; ஆய்வு நடத்திய அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிப்பு

* சிறப்பு செய்தி
தென்மாவட்டங்களை புரட்டி போட்ட பெருமழையால், நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள 792 உடைப்புகளை தற்காலிகமாக சரி செய்ய ரூ.100 கோடி தேவைப்படுகிறது என்று ஆய்வு நடத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மிக்ஜாம் புயல் வெள்ளம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி போட்டது. சென்னையில் பெய்த பெருமழையால் வெள்ள நீரில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது. மூழ்கிய வீடுகளில் மக்கள் தவித்தனர். அவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால் பெரும் பாதிப்புகளில் இருந்து சென்னை ஓரிரு நாட்களில் மீண்டது.

இந்நிலையில், அடுத்த இரண்டு வாரத்தில் வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் யாரும் எதிர்பாராத வகையில் பெய்த பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளானது. குறிப்பாக காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 93 செ.மீ. மழை பெய்தது. இதனால் அந்த பகுதியே மூழ்கும் நிலைக்கு சென்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாளில் அதிகனமழை பெய்து, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள், நீர்தேக்கங்கள் நிரம்பியது.

எனவே, போர்க்கால நடவடிக்கையாக தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகாமையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசு உரிய எச்சரிக்கை அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இருப்பினும் காட்டாற்று வெள்ளத்தால் ஏரிகளின் கரைகள் உடைப்பு, சாலைகள் துண்டிப்பு, வீடுகள் இடிந்து விழுந்து சேதம், விவசாய நிலங்கள் பாதிப்பு என பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டது.

அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆங்காங்கே முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். குறிப்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் எந்தெந்த பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் குளங்களில் உடைப்புகள் ஏற்பட்டதோ அங்கு உடனடியாக சென்று தற்காலிகமாக அடைப்புகள் ஏற்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் காரணமாக தற்போது தென்மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் வெள்ளப் பெருக்கில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்கள் குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் ஆற்று கரைகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

அதன்படி, துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான முதன்மைத் தலைமைப் பொறியாளர் குழுக்கள் பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று வெள்ள நீர் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நீர்த்தேங்கங்கள் மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அவற்றை எல்லாம் சீரமைக்க எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து அறிக்கை தயார் செய்து தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: மழை, வெள்ளத்தால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆறு மற்றும் குளங்களில் 792 உடைப்புகள் ஏற்பட்டு உள்ளன. இவை எல்லாவற்றையும் சரிசெய்வதற்கு போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு தலைமை பொறியாளர் முருகன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு தலைமை பொறியாளர் முத்தையா, சிறப்பு தலைமை பொறியாளர் பாண்டியன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடந்தது.

அதேபோன்று நீர்வளத் துறையின் மதுரை, திருச்சி மற்றும் கோவை மண்டலங்களில் இருந்து 2 சிறப்பு தலைமை பொறியாளர்கள் தலைமையில் 22 செயற்பொறியாளர்கள் கொண்ட, 213 பொறியாளர் குழுக்கள் குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளை சரிசெய்தனர். மேலும் குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளை 23,70,145 மணல் மூட்டைகள், 55,405 சவுக்கு கட்டை, 1905 ஜே.சி.பி, 440 பொக்லைன் மற்றும் 43,022 இதர பணியாளர்களை கொண்டு 92 சதவீத பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டது. மீதமுள்ள பணிகளை ஓரிரு நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான கோரம்பள்ளம், கூம்பன் குளம், கெல்லம்பரம்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சான்குளம், குத்துப்பாறை, உண்டாணிகுளம் ஆகிய நீர்தேக்கங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது.

கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தால்தான் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும்போது அதன்மூலம் இந்த குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப முடியும். அதன் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கும். அதேபோல் உடைப்பு ஏற்பட்ட குளங்கள் சீர் செய்யப்பட்ட காரணத்தால் உபரி நீர்வரத்தினை கொண்டு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறையை பொறுத்தவரையில் நீர்தேக்கங்களில் ஏற்பட்ட 792 உடைப்புகளை தற்காலிகமாக சரிசெய்வதற்காக தோராயமாக ரூ.91.26 கோடி தேவைப்படுவதாக தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* புதிய பள்ளங்கள் உருவாகியது: குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளிலிருந்து சுழற்சி முறையில் நீர் வெளியேறியது. அதனால் உடைப்புகளுக்கு அருகில் பெரிய அளவிளான பள்ளங்கள் உண்டானது.
* உடைப்பு ஏற்பட்ட குளங்கள் உடனடியாக சீர் செய்யப்பட்ட காரணத்தால் உபரி நீர்வரத்தினை கொண்டு 40% முதல் 60% வரை நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
* குளங்களில் உடைப்பு ஏற்பட்டு மணல்கள் சேகரமாகியுள்ளதால் அதனை சீரமைக்க குறைந்தது 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகும். மேலும் தற்காலிக அடைப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் உபரி நீர் முழுமையாக கடலில் சென்றடைவது தவிர்க்கப்பட்டு நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

நீர்தேங்களில் ஏற்பட்ட உடைப்புகளின் விவரங்கள்
உடைப்புகள் முடிவுற்ற பணிகள் நடைபெறும் பணிகள் மீதமுள்ள பணிகள்
குளங்கள் 344 324 16 4
கால்வாய்கள் 2 2 – –
ஆற்றுபாசன வாய்கால் 446 402 21 23

தென்மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு பிறகு நீர்வளத்துறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரங்கள்
மாவட்டங்கள் நீர்தேக்கங்களில் ஏற்பட்ட
உடைப்புகள் தற்காலிக
சீரமைப்பு பணிக்கு (லட்சத்தில்)
திருநெல்வேலி 386 ரூ.2213.11
தென்காசி 106 ரூ.172.10
தூத்துக்குடி 256 ரூ.6635.26
கன்னியாகுமரி 18 ரூ.71.80
விருதுநகர் 15 ரூ.22.75
ராமநாதபுரம் 11 ரூ.11.25
மொத்தம் 792 ரூ.9126.27

The post தென்மாவட்டங்களை புரட்டி போட்ட பெருமழை: நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள 792 உடைப்புகளை தற்காலிகமாக சரி செய்ய ரூ.100 கோடி தேவை; ஆய்வு நடத்திய அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : southern districts ,Special News Water Department ,Tamil Nadu government ,southern ,MIKJAM STORM FLOOD ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...