பழனி ஆண்டவர் பேரில் சத்ரு சங்கார வேலர் பதிகம்
பழனி ஆண்டவர் பேரில் பாடப்பட்ட ‘‘சத்ரு சங்கார வேல் பதிகம்’’ ஒன்றும் உள்ளது. இதில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேற்குறித்த நூலில் உள்ளதைப் போலவே இந்த விருத்தப் பாடல்கள் ஒவ்வொன்றின் இறுதி மூன்று அடிகளும் சரவணனை நம்பினவர் மேல் தர்க்கமுடன் நாடினரை மிக்க எதிராடி வரு சத்ரு சங்கரா வேலனே என்பதாக உள்ளது. இதில் முருகனின் வீரதீரப் பிரதாபங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
பஞ்சவேல் பரமேஸ்வரர்
கொங்கு மாவட்டத்தில் ஐந்து வேல்களை நட்டு அலங்கரித்து பரமசிவமூர்த்தியாக வழிபடும் வழக்கம் உள்ளது. இவற்றில் சிறப்புப் பெற்ற கோயில் கப்பளாங்கரை எனுமிடத்தில் உள்ளது. இங்கு கொங்குவேளாளர் சமுதாயத்தில் மாடகுலத்தில் தோன்றிய கந்தசாமிக் கவுண்டர் என்னும் அன்பர் சிவபெருமான் ஆணைப்படி ஐந்துவேல்களை நட்டு கோயிலை அமைத்து தொடர்ந்து வழிபாடுகள் நடத்திவர வகை செய்துள்ளார். இக்கோயில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. இவ்வட்டாரத்தில் ஏறத்தாழ 21 ஊர்களில் தனித்தோப்பில் இத்தகைய பஞ்சவேல் பரமேஸ்வரர் ஆலயங்கள் உள்ளன.
அஷ்டசக்தி வேலாயுதங்கள்
அந்தகாசூரனை வதைக்க சிவபெருமானால் உண்டாக்கப்பட்ட யுத்த சக்திகள் அஷ்ட மாதர்கள் ஆவார். இவர்களின் பெயர்கள் முறையே பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டி, யோகேசுவரி என்பதாகும். அவனை வதைத்த பின் இவர்கள் சிவனைத் தொழுது மேன்மை பெற்றனர். இம்மாதர்கள் போர்க்களத்தில் வேலேந்திப் போரிடுகின்றார்கள். இவர்கள் ஏந்தும் வேல்களின் பெயர்கள் ஞானவேல், சக்திவேல், லட்சுமிவேல், இரத்தினவேல், வஜ்ரவேல், குமரவேல், சம்ஹாரவேல், யோகவேல் என்பனவாகும். இந்த எட்டு வேல்களையும் அஷ்ட வேலாயுதங்கள் என்றழைக்கின்றனர்.
108 கோமுகங்கள்
இமயமலைச் சாரலில் முத்திநாத் என்கின்ற வைணவத்தலம் உள்ளது. இங்கு ஆலயத்தைச் சுற்றிலும் அமைந்த மதிலின் உச்சியில் நான்கு புறமும் குறிப்பிட்ட இடைவெளியில் பசுவின் முகத்தைப் போன்று செய்யப்பட்ட 108 கோமுகங்கள் உள்ளன. இதிலிருந்து நீர் விழுந்த வண்ணமாக உள்ளது. அன்பர்கள் வரிசையாக வந்து நீராடி மகிழ்கின்றனர். கோபூஜை, தினமும் காலையில் பசுவை கன்றுடன் பூசிப்பது வழக்கம். பசுவை நீராட்டி மஞ்சள் குங்குமம் இட்டு மலர்சூட்டி மணியடித்தவாறு மும்முறை வலம் வந்து வணங்கி, அது உண்ண பழங்கள், புல், அரிசி, தவிடு, தந்து மலர் தூவி வழிபடுவதே கோபூஜையாகும். யானையின் முகத்திலும் குதிரையின் முதுகிலும் பசுவின் புட்டப்பகுதியிலும் லட்சுமி உறைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதனால் பசுவின் பின் பகுதியை மலரிட்டு வணங்கி வாலை நீவி விடுவது வழக்கம்.
சிவசாரூபியம் பெற்ற திருமால்
திருமால் சிவசாரூபியம் பெற இத்தலத்தில் தவம் இருந்தார். அப்போது ஈசன் திருமாலிடம் ‘கலியுகத்தில் என் புகழ்பாடும் தொண்டர் ஒருவர் அவதரிக்கும் போது தங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும்’ என்று அருளினார். அதே போன்று ஞானசம்பந்தர் இத்தலம் வந்து ஈசனைப்பாட திருமால் சிவாசாரூபியம் பெற்றார் என தலபுராணம் கூறுகிறது. அப்போது உருகிய திருமாலின் எஞ்சிய பாதங்கள், இங்குள்ள ஓதவுகீசர் முன் உள்ளது. இறைவன் மேற்றளிநாதர், காமாட்சியம்மையுடன் அருள்கிறார். தலம்: திருக்கச்சி மேற்றளவி, காஞ்சிபுரம்.
தொகுப்பு: ஜெயசெல்வி
The post ஆன்மிகம் பிட்ஸ்: பழனி ஆண்டவர் பேரில் சத்ரு சங்கார வேலர் பதிகம் appeared first on Dinakaran.