×

சென்னை புத்தக வாசிப்பாளர்களின் திருவிழா 47வது சென்னை புத்தக காட்சி தொடக்கம்:  19 நாட்கள் நடக்கிறது  எப்29 ஸ்டாலில் சூரியன் பதிப்பகம்

சென்னை, ஜன.4: 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கி வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த புத்தகக் காட்சி வரும் 21ம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடக்கிறது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) உறுப்பினர்களை தவிர உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் இந்த ஆண்டு 150க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தலா ஒரு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ரூ.10 பெறப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். குடிநீர் வசதி, உணவு கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆப் புத்தா, தடாகம், திருநங்கை பிரஸ் எல்எல்பி ஆகிய அமைப்புகளும் அரங்குகள் அமைத்துள்ளன. மேலும் அனைத்து விதமான தலைப்புகளிலும் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள், கதை, சிறுகதை, கவிதை தொகுப்பு, அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழ் ஆளுமைகள் எழுதிய நூல்கள், சிறுவர்களுக்கான புத்தகங்கள், அறிவியல், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள் என அனைத்து விதமாக புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இயங்கும் தமிழ் பதிப்பகமும், உலக அளவில் புகழ்பெற்ற பதிப்பகங்களான பென்குயின் ரேண்டம் ஹவுஸ், பிரிட்டிஷ் கவுன்சில், ஹார்ப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ், நிறுவனங்களும் பங்கேற்றன. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் கருத்தரங்கங்கள் நடக்கிறது. இந்த புத்தகக் காட்சியில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், புத்தகக் காட்சியில் தினகரன்- சூரியன் பதிப்பகத்தின் புத்தக அரங்கு எப் 29 என்ற எண்ணில் அமைந்துள்ளது. இந்த அரங்கில் கர்ணனின் கவசம், தல புராணம், பேசும் சித்திரங்கள், மருதம் மீட்போம், உங்களுக்கு நீங்களே டாக்டர், மகளிர் மருத்துவம், உயிர் பாதை உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மட்டுமல்லாது, மாணவர்களுக்கான புத்தகங்கள், மருத்துவம் சார்ந்த புத்தகம், பெண்களுக்கான சிறுகதைகள், சமையல் புத்தகம், ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள் உள்ளன. 164 சி அரங்கில் தினகரன் நாளிதழின் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தினகரன் நாளிதழில் இருந்து வெளியிடப்படும் குங்குமம், தோழி, டாக்டர், தினகரன் ஆன்மிகம், விவசாயம், கிச்சன் ஆகிய இதழ்கள் உள்ளன. கடந்த ஆண்டு 17 நாட்கள் நடந்த புத்தகக் காட்சியில் 15 லட்சம் வாசகர்கள் வந்தனர். ரூ.16 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. இந்த ஆண்டை கடந்த ஆண்டை விட கூடுதலாக 10 சதவீதம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கைவினைப் பொருட்களுக்கு சிறப்பு அரங்கம்
தமிழ்நாடு கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு அவர்களின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட சிறப்புத்தன்மை வாய்ந்த கைத்திறப் பொருட்களை உலகம் முழுதிலிருந்தும் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் பூம்புகார் சார்பில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 2000 சதுர அடியில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைவாசிகளுக்கு…
கடந்த ஆண்டு சிறைத்துறை சார்பில் சிறைவாசிகளுக்கு புத்தக தானம் வழங்க அரங்கு அமைக்கப்பட்டது. இந்த அரங்கு வாயிலாக கடந்த ஆண்டு 50,000 புத்தகங்கள் தானமாக பெறப்பட்டது. இந்த புத்தகங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த ஆண்டும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அறநிலையத்துறைக்கு…
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரியில் இந்து சமய அறநிலையத்துறையால் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த அனைத்து புத்தகங்களும் அரங்கில் உள்ளது. இந்த அரங்கு புத்தகக் காட்சி வளாகத்தில் சூரியன் பதிக்கம் அரங்கு (எப் 29) அருகில் உள்ளது.

The post சென்னை புத்தக வாசிப்பாளர்களின் திருவிழா 47வது சென்னை புத்தக காட்சி தொடக்கம்:  19 நாட்கள் நடக்கிறது  எப்29 ஸ்டாலில் சூரியன் பதிப்பகம் appeared first on Dinakaran.

Tags : Chennai Book Readers Festival 47th Chennai Book Show ,F29 stall Sooryan Publishing House ,Chennai ,Chennai Book Fair ,Chennai Nandanam ,Y. M. ,Minister ,Udayanidhi Stalin ,Polchchchhi Awards ,Babasi Awards ,Subramanian ,F29 Stall ,Sun Publishing ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...