×

தென் மாவட்ட வெள்ளத்தால் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.1000 கோடி பாதிப்பு: துண்டிக்கப்பட்ட சாலைகளை துரித நடவடிக்கையால் சீரமைத்தது பொதுப்பணித்துறை

குமரிக் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 16 முதல் 18ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இந்த 4 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தது. இதில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் மின்சாரம், போக்குவரத்து அடியோடு ரத்தாகி அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க இயலாத நிலை ஏற்பட்டது. தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

எங்கு பார்த்தாலும் தண்ணீரால் சூழப்பட்டதால் மீட்பு பணிகளிலும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பல பகுதிகளில் 5 முதல் 6 நாட்கள் வரை மின்சாரம் இல்லாத நிலை தொடர்ந்தது. பலரும் தங்களது வீடுகளை இழந்து உண்ண உணவும், தங்குவதற்கு இடமும் இல்லாமல் அடிப்படை வாழ்வாதரத்தை இழந்து தவித்தனர். இதன் காரணமாக, தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறை, இந்திய ராணுவம், காவல் துறை என பலரும் ஒன்றிணைந்து பணியாற்றினர்.

தமிழ்நாடு அரசின் தீவிர மீட்பு பணிகளால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமின்றி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் ரூ.6,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே தூத்துக்குடி மாநகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. தூத்துக்குடியிலிருந்து தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு, சில பகுதிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

மழை ஓய்ந்ததை தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மழையில் பாதித்த பகுதிகளில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை குழுக்கள் பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினர்.

அதேபோல் பல்வேறு பிரிவுகளாக பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை நியமித்து மீட்பு பணிகள், சாலைகள் சீரமைப்பு பணிகள் நடந்தது. அதனை தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில் 76 சதவீதம் சேதமடைந்த தரைப்பாலங்கள், சாலை, பாலங்கள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.
இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சாலைகளை பொறுத்தவரையில் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள், மாவட்ட இதர சாலைகள் போன்றவற்றை செப்பனிட 4 கண்காணிப்புப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடந்தது.

சாலைப்பணிகளை தற்காலிகமாக சீர்செய்கின்ற பணிகள், நிரந்தரமாக சீர்செய்ய வேண்டிய பணிகள் என இரு பிரிவுகளாகப் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படியே போக்குவரத்து 75% சீரடைந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 98 இடங்களில் சாலைகள் பழுதடைந்த நிலையில் ஒரேநாளில் 65 இடங்களில் சாலைகள் சீர்செய்யப்பட்டன. திருச்செந்தூர்- பாளையங்கோட்டை செல்லும் சாலைகளில் 3 இடங்களில் மிகவும் மோசமாகவும் 3 மீட்டர் நீளத்திற்கு உடைப்புகள் ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையை பொறுத்தவரையில் சாலைகள் ரூ.1000 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

* திருநெல்வேலியில் 46 சாலைகள், தூத்துக்குடியில் 113 சாலைகள், விருதுநகர், தென்காசியில் தலா 13 சாலைகள், நாகர்கோவிலில் 5 சாலைகள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

* ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சூழ்ந்திருந்த மழைநீர் அகற்றப்பட்டு உடனடியாக 300 நோயாளிகள் பயனடைந்தனர்.

* திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் திருச்செந்தூரையும், பாளையங்கோட்டையும் இணைக்கின்ற தரைப்பாலம் உடைந்ததால், தற்காலிகமாக 40 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சாலை போடப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்த வேண்டும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 1,127 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படுகிறது. இதில், இந்த தரைப்பாலமும் அடங்கும். இந்த தரைப்பாலத்தை, உயர்மட்ட பாலமாக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

* 5 தலைமை பொறியாளர்கள், 6 கண்காணிப்புப் பொறியாளர்கள், 10 கோட்டப்பொறியாளர்கள், 30 உதவிக் கோட்டப் பொறியாளர்கள், 5 உதவிப் பொறியாளர்கள், 75 சாலை ஆய்வாளர்கள், 1150 பல்வேறு கோட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சாலை பணியார்கள், 2000 அன்றாட பணிகளுக்காக பணியாளர்கள் மற்றும் 106 ஜேசிபி, 20 கிட்டாச்சி இயந்திரங்கள், 223 லாரிகள் மூலம் சாலைகள் இரவு பகலாக சீரமைக்கப்பட்டுள்ளது.

The post தென் மாவட்ட வெள்ளத்தால் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.1000 கோடி பாதிப்பு: துண்டிக்கப்பட்ட சாலைகளை துரித நடவடிக்கையால் சீரமைத்தது பொதுப்பணித்துறை appeared first on Dinakaran.

Tags : South ,Public Works Department ,Tirunelveli ,Tuthukudi ,Tenkasi ,Kanyakumari ,Kumarik Sea ,Southern District ,Dinakaran ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்