நன்றி குங்குமம் தோழி
“நீ நிழலாக நான் நிஜமாக”, “தீராமொழிகள்”, “சிறகில் ஒளிரும் காடு” என மூன்று கவிதை புத்தகங்களை எழுதி வெளியிட்டு இருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த கவிஞர் சக்திஸ்ரீ ஒரு வீல்சேர் யூஸர். தன்னம்பிக்கையோடு நான் வெளியில் வருவதே எனக்கான பலம் என்றவர், தைரியமாக எனது கால்களில் நிற்கும் அளவுக்கு என்னை வளர்த்துக்கொண்டேன் என புன்முறுவலோடு நம்மிடம் பேச ஆரம்பித்தவர், எம்.காம். பட்டப் படிப்பை பொள்ளாச்சி கல்லூரியில் முடித்திருக்கிறாராம்.
‘‘குழந்தையில் எனக்கு செரிபிரல் பால்ஸி (cerebral palsy) எனப்படுகிற மூளை முடக்குவாத பாதிப்பு என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து பெற்றோரிடத்தில் சொன்னபோது, கண்டிப்பாக அவர்கள் என்னை நினைத்து வேதனைப்பட்டு இருப்பார்கள்தான்’’ என்கிற சக்திஸ்ரீ, “சாய்சக்தி சர்வி” என்கிற புனைப்பெயரில் மூன்று கவிதைப் புத்தகங்களை அடுத்தடுத்து எழுதி வெளியிட்டு இருப்பதையும், அவ்வப்போது தன்னை பாதிக்கும் விஷயங்களை சிறுசிறு கதைகளாக எழுதியிருப்பதையும் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.
‘‘அம்மா சாந்தாதேவி. ரிட்டயர்ட் டெபுடி கலெக்டர். அப்பா சரவணன், தாசில்தார். ஆனால் அப்பா இறந்து 10 வருடம் ஆயிடுச்சு. தனி மனுஷியா அம்மா வேலைக்கும் சென்று, மாற்றுத்திறனாளியான என்னையும் கவனிக்க முடியாது என்பதால், என்னை மட்டுமே கவனித்துக்கொள்ள ஒரு அக்காவை நியமித்திருந்தார். அவர்தான் என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, மீண்டும் என்னை வீட்டுக்கு அழைத்து வருவதென என் கூடவே இருந்தார்.
அப்பா வழி பாட்டியும் வீட்டில் என்னோடு கூடவே இருந்து, என்னை ரொம்பவே அன்பாக கவனித்துக்கொண்டார்.4ம் வகுப்புவரை பள்ளிக்கு சென்றுதான் படித்து வந்தேன். இந்த நிலையில் எனது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து பிஸியோதெரபியும் எடுக்க வேண்டியிருந்தது. எனவே, எனது பள்ளிப் படிப்பை வீட்டில் இருந்தே படிக்க வேண்டிய நிலை உருவானது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக டியூசன் ஆசிரியர்களை நியமித்து வீட்டில் இருந்தே அம்மா என்னை தொடர்ந்து படிக்க வைத்தார். என் வீட்டுக்கே வந்து, ஆசிரியர்கள் பாடங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தனர். டாக்டர்ஸ், பிஸியோ தெரபிஸ்ட், அக்குபிரஷர் டிரீட்மென்ட் என அனைவருமே வீட்டிற்கே வந்து என்னை நல்ல முறையில் கவனித்துக் கொண்டனர்.
இத்தனை டிரீட்மென்டிற்கும் இடையில்தான் எனது கல்வியும் நகர்ந்தது. +2 முடித்த பிறகு, பி.காம்., படிப்பை அழகப்பா பல்கலைக் கழகத்தில் இணைந்து அஞ்சல் வழியாகப் படித்தேன். சிறைப்பறவையாய் வீட்டில் இருந்தே படிப்பது கல்வி மீதான ஆர்வத்தை குறைத்துவிடக் கூடாது என்பதற்காக, எம்.காம்., படிப்பை எனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த கல்லூரியில் சேர்ந்து ரெகுலரில் படித்தேன். என் முதுகலை கல்விக்கான முழு ஒத்துழைப்பையும் கல்லூரி நிர்வாகம் முழுமையாக எனக்கு வழங்கியது.
சின்ன வயதில் இருந்தே தமிழின் மீது தீராத காதல் இருந்ததால், சின்னச்சின்ன கவிதைகளை நோட்டில் எழுதி எனக்குள் வைத்துக்கொள்வேன். நண்பர்களிடம் எனது கவிதையை காட்டியபோது, சிறப்பாக நான் எழுதியிருப்பதாகத் தெரிவித்து என்னை மேலும் ஊக்கப்படுத்தினர். வீட்டிலும் எனது கவிதை ஆர்வத்தை வெகுவாகப் பாராட்டி வரவேற்றனர்.
நான் எழுதிய கவிதைகளை புத்தகமாய் தொகுத்து வெளியிட நினைத்தபோது, எனது கல்லூரி நிர்வாகமே முன்வந்து, கவிதை வெளியீட்டு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ததுடன்,
கல்லூரி முதல்வரே முன் நின்று, என் முதல் கவிதை நூலான, “நீ நிழலாக நான் நிஜமாக” புத்தகத்தை வெளியிட்டு என்னை வாழ்த்தினார். தினம் தினம் நமது வாழ்க்கையில் சந்திக்கிற சின்னச் சின்ன நிகழ்வுகளை இதில் எளிய கவிதைகளாக எழுதியிருந்தேன்.
என்னுடைய இரண்டாவது கவிதை நூல் “தீரா மொழிகள்”. பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலமாக இந்த நூல் வெளியானது. சமுதாயம் சார்ந்த விஷயங்களை இதில் கவிதையாக்கியிருந்தேன். என்னுடைய அடுத்த கவிதை நூல் “சிறகில் ஒளிரும் காடு” இதுவும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலமாகவே வெளியானது. சமூக ஊடகங்களிலும் எழுத்தாளர்கள் வட்டத்துடன் நட்பு விரிவடைந்தது.
கொரோனா காலகட்டத்தில் வெளி உலகத் தொடர்பற்று வீட்டுக்குள் முடங்கிய நேரம் அது. கவிதைப் போட்டி குறித்த அறிவிப்பு ஒன்றை எனது நண்பர்கள் வட்டம் எனக்குத் தெரியப்படுத்த, நானும் அதில் பங்கேற்பாளரானேன். என் எழுத்தைப் பாராட்டி எனக்கு கிடைத்த முதல் விருது மகிழ்ச்சியை கொடுக்க, தொடர்ந்து அடுத்தடுத்த விருதுகளுக்கும் தேர்வானேன் ‘‘ என்கிற சக்தி, செந்தமிழ் செல்வர் விருது, பல்திறன் சாதனையாளர் விருது, பெஸ்ட் ரைட்டர் ஆஃப் த இயர் விருது, இந்தியன் நோபிள் விருது, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது, இன்ஸ்பியரிங் ஐகான் ஆஃப் த இயர் விருது, ஹை ரேஞ்ச் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட், ஆரஞ்ச் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட், ஐகானிக் மிஸ் இந்தியா விருது என பல்வேறு விருதுகளையும் வாங்கியிருக்கிறார். ‘‘விருதுகளை என்னால் மேடையேறி வாங்க முடியாது என்பதால், என் முகவரி தேடி விருதுகள் வீட்டுக்கே வந்துவிடுகிறது’’ என்றவர், ‘‘இதுதான் நான். இந்த இடர்பாடுகளையெல்லாம் மீறிதான் வெளியில் வந்திருக்கிறேன்’’ எனப் புன்னகைத்தவாறு விடைபெற்றார்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
The post எழுத்துதான் என் பலம் appeared first on Dinakaran.