×

ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள்.. பலி 30 ஆக உயர்வு..சுனாமி எச்சரிக்கை வாபஸ்; முழு வீச்சில் மீட்புப் பணிகள்!!

டோக்கியோ: ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தின் கடற்கரை பகுதியை மையமாகக் கொண்டு, நேற்று மாலை 4 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 என பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் இஷிகாவா மட்டுமின்றி அதனை ஒட்டி உள்ள மற்ற மாகாணங்களும் கடுமையாக குலுங்கின. அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.பல பகுதிகளில் சாலைகள் பெயர்ந்து உடைந்தன. மின்கம்பங்கள் உடைந்து சரிந்தன. சூப்பர் மார்கெட்களில் பல பொருட்கள் கீழே விழுந்து உடைந்து சிதறின. இதனால் மக்கள் பீதி அடைந்து, கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலையில் குவிந்தனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 21 முறை நில அதிர்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் கடும் பீதி நிலவியது.

அதோடு, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் மக்கள் பதற்றமடைந்தனர். எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களில் ஜப்பானின் மேற்கு கடற்பகுதிகளை 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கின. பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இந்த கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வஜிமாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின. நிலக்கத்தால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஜிமா துறைமுகத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.மேலும் நேற்று முதல் 155 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாகவும் ஜப்பான் வானிலை ஏஜென்சி தெரிவித்துள்ளது. அனைத்து சுனாமி எச்சரிக்கைகளையும் அந்நாட்டு வானிலை மையம் திரும்ப பெற்றுள்ளது. இருப்பினும் அடுத்த 2 நாட்களுக்கு கடலில் அலைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவும் உயரமாகவும் எழும்பும் என்பதால் மக்கள் கடலோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

The post ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள்.. பலி 30 ஆக உயர்வு..சுனாமி எச்சரிக்கை வாபஸ்; முழு வீச்சில் மீட்புப் பணிகள்!! appeared first on Dinakaran.

Tags : Japan ,Tsunami ,Tokyo ,Ishikawa Prefecture, Japan ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத்...