×

ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டம்: அடுத்த மாதம் ஜப்பான் குழுவுடன் முக்கிய ஆலோசனை

சென்னை: ஜப்பான் நாட்டுடன் இணைந்து சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அடுத்த மாதம் தமிழகமற்றும் ஜப்பான் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர் என தெரியவந்துள்ளது. சென்னையில் கடந்த 2015 மற்றும் 2023-ம் ஆண்டு கனமழை கொட்டியதால் சென்னை மாநகரில் பெருமளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில், வருங்காலத்தில் சென்னை மாநகரை வெள்ளபாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவுமுகமை உதவியுடன் சென்னை யில் வெள்ளத் தடுப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நீர்வளத்துறை, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், நிலத்தடி சுரங்கங்கள், சைஃபோன் குழாய்கள், நீர் படுகைகளை விரிவுபடுத்தி ஒரு நீர்நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலைக்கு அனுப்புதல் உள்ளிட்ட சில ஜப்பான் நாட்டு தொழில்நுட்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சென்னையின் நிலப்பரப்புக்கு ஏற்ப, விரிவான ஆய்வுக்குப் பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையின் பேரிடர் அபாயத்தைக் குறைக்கவும் சென்னையில் உள்ள ஆற்றுப் படுகைகளில் விரிவான வெள்ள தடுப்பு திட்டத்தை உருவாக்கவும் தமிழ்நாடு பேரிடர் கட்டுப்பாட்டு நிறுவனம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநில நீர்வளத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியன ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையுடன் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்டபெருநகரங்களில் ஒன்றானடோக்கியோவில் செயல்படுத்தப்படும் வெள்ள தடுப்பு திட்டங்கள், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கும் பொருந்தும் என்பதால், அங்குள்ள திட்டங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கெனவே பார்வையிட்டனர்.

இதையடுத்து, முதற்கட்டமாக கடந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் இத்திட்டம் தொடர்பான பயிற்சிக்காக தமிழக அதிகாரிகள் சென்றனர். இந்நிலையில், சென்னையில் அடுத்த மாதம் (ஜூன்) ஜப்பான் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் இத்திட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். பின்னர் வரும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் வெள்ள தடுப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டம்: அடுத்த மாதம் ஜப்பான் குழுவுடன் முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,JAPAN ,JAPAN GROUP ,Dinakaran ,
× RELATED வீரர் மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம்...