×

பாக். தேர்தல் களத்தை கலக்கும் இந்து பெண் யார் இந்த சவீரா பிரகாஷ்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண்ணான சவீரா பிரகாஷுக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.  பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தலும், 4 மாகாண சட்டப்பேரவை தேர்தல்களும் நடக்க உள்ளன. இதில், முன்னாள் பிரதமர்கள் இம்ரான் கானின் பிடிஐ கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தல்களில் போட்டியிட மனுதாக்கல் செய்தவர்களின் 22,711 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கு மொத்தம் 7,473 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 6,449 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் 6,094 பேர் ஆண்கள், 355 பேர் பெண்கள். இதில், பிபிபி கட்சி சார்பில் மனுதாக்கல் செய்துள்ள 25 வயது இந்து பெண் சவீரா பிரகாஷ், தேர்தல் களத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் என்ற பெருமையை பெற்றுள்ள இவர், கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் புனேர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

கடந்த ஆண்டு அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற சவீதா, பிபிபி கட்சியின் புனேர் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளராக உள்ளார். இவரது தந்தை ஓம் பிரகாஷ், பிபிபி கட்சியின் மருத்துவ பிரிவு தலைவராக கடந்த 35 ஆண்டாக கட்சிப் பணியாற்றிவர். தந்தை வழியில் தானும் அரசியலில் நுழைந்து மக்கள் பணியாற்ற வந்திருப்பதாக சவீரா கூறி உள்ளார். இவரது தாய் ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர் யெலீனா பிரகாஷ்.  சவீரா கூறுகையில், ‘‘பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் சிறுபான்மையின பெண் என்பதில் நான் பெருமை அடைகிறேன்.

மனுதாக்கல் செய்த நாள் முதல் எனக்கு மக்கள் பேராதரவு தருகின்றனர். என்னை இந்து பெண்ணாக யாரும் இங்கு பார்ப்பதில்லை, ‘புனேரின் மகள்’ என எந்த பாகுபாடும் இல்லாமல் பார்க்கின்றனர். நானும் ஹிஜாப் அணிகிறேன். அது எனது விருப்பம். பல சமயங்களில் ஹிஜாப்பை நான் அணிவதில்லை. அதனால் எந்த பிரச்னையையும் சந்தித்ததில்லை. மதத்தால் பிளவுபடுத்திய காலம் மலையேறி விட்டது.

நாம் முன்னேற வேண்டும். நான் வெற்றி பெற்றால், இந்தியா, பாகிஸ்தானை இணைக்கும் பாலமாக இருப்பேன். பாகிஸ்தானில் பெண்களுக்கு வலுவான, உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டுமென்பதே எனது லட்சியம். சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உழைப்பேன்’’ என்றார். பாகிஸ்தான் மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும் இவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்துவது குறிப்பிடத்தக்கது.

The post பாக். தேர்தல் களத்தை கலக்கும் இந்து பெண் யார் இந்த சவீரா பிரகாஷ்? appeared first on Dinakaran.

Tags : Saviera Prakash ,ISLAMABAD ,Savira Prakash ,Pakistan ,prime ministers ,Imran ,Dinakaran ,
× RELATED என்கவுன்டரில் 23 தீவிரவாதிகள் பலி: 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு