×

காசி தமிழ் சங்கமம் தமிழக கலாச்சார இணைப்பு

இந்தியாவின் புராதன நகரமாகவும், புனித நகரமாகவும் விளங்குகிறது வாரணாசி. தங்கள் பாவங்கள் கழிய வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கோயில் நகரமாக விளங்கும் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் பண்டைய காலம் தொட்டே தொடர்பு இருப்பது சங்க கால இலக்கிய குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. எட்டுத்தொகை நூலில் ஒன்றான கலித்தொகையில் கபிலர் எழுதிய 60வது பாடலில் தலைவி, தனது தோழியிடம் உரைப்பது போன்ற பாடலில் வாரணாசி செல்வோர்க்கெல்லாம் முக்தி கிடைப்பது போல என்ற உவமை கையாளப்பட்டிருக்கிறது. அதே போன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் காசி பயணம் மேற்கொண்ட விவரத்தை சேக்கிழாரின் பெரியபுராணம் மூலம் அறிய முடிகிறது.

இதே போல் திருஞானசம்பந்தர், சிவவாக்கிய சித்தர் ஆகியோரும் வாரணாசி தல சிறப்பை குறிப்பிட்டுள்ளனர். திருப்புகழில் முருகன் புகழ் குறித்து பாடிய அருணகிரிநாதர் காசியில் முதன்மையாக அமர்ந்திருக்கும் சிவனும், பார்வதியும் பெற்றெடுத்த மகன் என்று குறிப்பிடுகிறார். இதே போன்று தமிழகத்தில் காசி விசுவநாதர் கோயில் என்ற பெயரில் பல சிவன்கோயில்கள் உள்ளன. சிவகாசி, தென்காசி போன்ற நகரங்கள் காசியுடனான வரலாற்று தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. காசிக்கும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்துக்கும் வணிக ரீதியிலான ஆழமான தொடர்பு இருப்பது அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் வாரணாசியில் உள்ள அனுமான் காட் என்ற இடம் குட்டி தமிழகமாகவே விளங்குகிறது. இந்த அனுமான் காட் பகுதியில் தான் மகாகவி பாரதியார் நான்கு ஆண்டுகள் வசித்தார் என்பது கூடுதல் பெருமை. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த வீட்டை தமிழக அரசு புனரமைத்து பராமரித்து வருகிறது. காசிக்கு பெருமை சேர்ப்பது கங்கா நதி. இந்த நதிக்கரையோரம் 78 ஒருங்கிணைந்த படித்துறைகள் அமைந்துள்ளன. வருணா காட் முதல் அஸ்ஸி காட் வரை உள்ள படித்துறையை வைத்தே வாரணாசி என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கங்கை நதி படித்துறைகள் அனைத்தையும் படகு மூலம் சென்று பார்த்து ரசிக்கலாம்.

இரவில் சிறிய விளக்குகள் கங்கை நதியில் ஒளிர்வது அமைதியான அந்நதியின் அழகை மேலும் மெருகூட்டுகிறது. அதே போல் கங்கை நதிக்கு மரியாதை செய்யும் வகையில் தினமும் அஸ்ஸி காட்டில் கங்கா ஆரத்தி என்னும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கி அரை மணி நேரம் நீடிக்கிறது. இதை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் குவிகின்றனர். சிறிய விளக்கில் தொடங்கி, ராஜ தீபம், நாக தீபம் என்று பல விளக்குகள் ஏற்றி பண்டிதர்கள் கங்கையை ஆராதிக்கின்றனர். இதன் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. இப்படி பல சிறப்புகள் கொண்ட வாரணாசி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியாகும்.

காசிக்கும், தமிழகத்துக்கும் பண்டைய காலம் தொட்டுள்ள பண்பாடு, கலாச்சார தொடர்பை கவுரவிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை கடந்த ஆண்டு முதல் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அதன்படி இரண்டாவது ஆண்டாக தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிச.17ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் தமிழக மக்களை பல குழுக்களாக அழைத்து செல்கிறார்கள். இவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்படுகின்றன. காசியில் உள்ள நமோ காட்டில் இந்த ஆண்டு தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் என்று களைகட்டியது.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து செல்லப்படும் குழுக்களை வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோயில், அன்னபூர்ணா கோயில், விசாலாட்சி கோயில், காலபைரவர் கோயிலுக்கு அழைத்து சென்று தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அதன்பிறகு சாரநாத், அலகாபாத், அயோத்தி ஆகிய நகரங்களுக்கும் அழைத்து செல்கின்றனர். இது தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்று தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். காசி என்பது ஜீவன் முக்தி ஸ்தலம் என்று நம்பப்படுகிறது. இதனால் முன்ேனார்களுக்கு அங்கு சென்று திதி கொடுப்பதை அனைவரும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மூத்த குடிமக்கள் பலர் தங்கள் உயிர் காசியில் தான் பிரிய வேண்டும் என்பதற்காக அங்கு சென்று நிரந்தரமாகவும் தங்கி விடுகின்றனர். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் எப்படி புனித இடமாக கருதப்படுகிறதோ அதே போல் வடக்கில் காசியும் விளங்குகிறது. காசியில் இறப்பவர்களின் உடலை தகனம் செய்வதற்கு பல இடங்கள் இருந்தாலும் அரிசந்திரன் தனது அரச பதவியிழந்து சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்ததை குறிக்கும் வகையில் அவரது பெயரில் விளங்கும் அரிசந்திரா காட் மற்றும் விசுவநாதர் கோயில் அருகே கங்கை படித்துறை அருகே அமைந்துள்ள மனிகர்னிகா காட் ஆகிய இடங்கள் பிரபலமான பகுதியாக விளங்குகிறது.

இந்த இரு இடங்களிலும் சடலங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை அனைத்தையும் வரிசையாக வைத்து தகனம் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த மணிகர்னிகா என்ற இடத்தில் கங்கையில் மூழ்கி நீராடினால் புண்ணியம் என்று சொல்கிறார்கள். இந்த சுடுகாட்டில் தான் அகோரி என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் சடலங்கள் தகனம் செய்யப்படும் போது அதற்கு அருகில் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். அதே போல் கங்கையின் மறுகரையும் அகோரிகளுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கு நள்ளிரவில் படகில் செல்லும் இவர்கள் பூஜை, தியானம் போன்ற நடைமுறைகளை கடைபிடிக்கிறார்கள். மறுகரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் யாருக்கும் அனுமதி கிடையாது.

இவர்கள் நள்ளிரவில் எழுப்பும் மேளசத்தம், உடுக்கை சத்தம் ஆகியன இந்த பக்க கரையில் இருந்தே கேட்க முடிகிறது. ஆனால் தற்போது காசியில் உள்ள அகோரிகள் அனைவரும் அதற்கான முயற்சியில் இருப்பவர்கள் தான் என்றும் உண்மையான அகோரி ஒருவரே இருக்கிறார் என்றும் அங்கு விறகு விற்பனை செய்யும் நபர் தெரிவிக்கிறார். உண்மையான அகோரிகள் யாரிடமும் பேசமாட்டார்கள். அப்படியே பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் தான் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. அகோரிகளில் ஐந்து வகையானவர்கள் இருக்கிறார்கள். இதில் நாகா வகை அகோரிகள் தான் அகிம்சை, அன்பை கடைபிடிப்பவர்கள் என்றும் தெரியவருகிறது.

காசியின் பெருமை குறித்து விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் ஒரே தமிழ் நிர்வாகியாக விளங்கும் வெங்கட்ராமன் கூறுகையில், ‘காசியில் பஞ்ச கங்கா காட், அஸ்ஸி காட் ஆகிய இடங்களில் கங்கையில் நீராடுகின்றனர். ஆனால் மணிகர்னிகா காட் துறையில் நீராடுவது புண்ணியம் நிறைந்தது. ஏனென்றால் இங்கு மகாவிஷ்ணு சக்கரத்துடன் தியானம் செய்த இடம். இதை பார்த்து சிவன் தலையசைக்க அவரது காதில் இருந்து குண்டலம் விழுந்த இடம் தான் மணிகர்னிகா என்று அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் நீராடினால் கர்மாக்கள் தொலையும். காசி என்பது பூலோகத்தில் விளங்கும் ஞானப்பிரகாசம்.

அதனால் தான் அனைத்து தேவர்களும் இங்கு நிரந்தரமாக வாசம் செய்கின்றனர். இந்த காசி மாநகரம் விசுவநாதருக்கு சொந்தமானது. இங்கு அவரது அருளை மட்டுமே பக்தர்கள் பெற்று செல்ல வேண்டும். தீர்த்தமோ, மண்ணோ எடுத்து செல்ல கூடாது. பிரயாக் இருந்து தான் காசி தீர்த்தம் எடுத்து செல்ல வேண்டும்’ என்றார். தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் பண்டைய கால தொடர்பு இருப்பது போன்று மற்றொரு பெருமை வாரணாசி மாவட்ட கலெக்டராக தமிழர் ஒருவர் பதவி வகிப்பதாகும். தமிழ்நாட்டின் கடையநல்லூரை சேர்ந்த ராஜலிங்கம் வாரணாசி நகர வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றி வருகிறார்.

காசி தமிழ் சங்கமம் மற்றும் வாரணாசி நகர வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலெக்டர் ராஜலிங்கம் கூறியதாவது, ‘காசி தமிழ்சங்கமம் கடந்த ஆண்டு தொடங்கும் போது தான் கலெக்டராக இங்கு நியமிக்கப்பட்டேன். அப்போது முதலே தமிழ்நாட்டில் இருந்து வரும் பயண குழுக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர தொடங்கினேன். தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் உள்ள கலாச்சார வரலாற்று தொடர்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனால் வாரணாசி நகரம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. காசி பழமையான நகரம் என்பதால் குறுகலான சாலைகள் அதிகம். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வெளி வட்டசாலைகள் அமைப்பது, நகரத்தின் மையப்பகுதியை வேறு இடத்துக்கு மாற்றுவது போன்ற திட்டங்களை வகுத்துவைத்துள்ளோம். நடைபாதை கடைகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்வது என்பது சாத்தியமில்லை. இது இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை நம்பித்தான் அனைத்து வணிகமும் நடக்கிறது. கங்கை நதிக்கரையோரம் படித்துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையடைந்துவிட்டது. இன்னும் 7 படித்துறைகள் மட்டுமே பாக்கியுள்ளது.

கங்கா நதியில் கலக்கும் கழிவுகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு கழிவுநிரை சுத்திகரிப்பு செய்யும் பிளாண்ட் அமைத்து அதற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையும் காசியும் புதியதாக இணைக்க முயற்சிக்கவில்லை. ஏற்கனவே கலாச்சார தொடர்பு இருப்பதால் எளிதாக இப்பணியை செய்ய முடிந்தது. காசியில் சங்கரமடத்தில் தொடங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து மடங்களும் இருப்பதே தமிழகத்துக்கும் காசிக்கும் உள்ள ஆன்மிக தொடர்புக்கு சான்று. காசி தமிழ் சங்கமம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்நகரம் பொருளாதார ரீதியில் மேம்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி டிசம்பர் 30ம் தேதியுடன் நிறைவு பெற்றது’’ என்றார்.

The post காசி தமிழ் சங்கமம் தமிழக கலாச்சார இணைப்பு appeared first on Dinakaran.

Tags : Kashi Tamil Society ,Cultural Link ,Varanasi ,India ,Hindus ,Khasi ,Tamil Nadu ,Kashi Tamil Society Tamil Culture Link ,
× RELATED வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து...