×

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு: ஜன.15 வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்தது

திருவனந்தபுரம்: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மகர விளக்கு பூஜை நடைபெறும் 15ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு, கடந்த 27ம் தேதி நடைபெற்ற மண்டல பூஜையுடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடைந்தது. அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. 2 நாள் இடைவெளிக்கு பிறகு மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை ேநற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார். அதன் பிறகு பக்தர்கள் நெய் தேங்காய்களை எரிக்கும் 18ம்படிக்கு முன் உள்ள ஆழியில் மேல்சாந்தி தீ மூட்டினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை சாத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஜனவரி 15ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று 26 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அதிக அளவில் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆன்லைன் முன்பதிவு முடிந்தது: கொரோனா பரவலுக்கு பிறகு சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. மண்டல காலத்தில் தினசரி முன்பதிவு எண்ணிக்கை 90 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் 16 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டியது இருந்ததால் தினசரி முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி முன்பதிவு 80 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் மகரவிளக்கு பூஜை நடைபெறும் ஜனவரி 15ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிந்து விட்டதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

The post மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு: ஜன.15 வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்தது appeared first on Dinakaran.

Tags : Sabarimala Temple Walk ,Makaravilakku Pujas ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan temple walk ,Makaravilakku ,Makar Lampu Pooja ,Kaala Pujas… ,Sabarimala Temple Walk Opening ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு