×

சுரானா நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: சிறப்பு நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்ட சுரானா நிறுவனம், ஐடிபிஐ, எஸ்.பி.ஐ. வங்கிகளிடம் இருந்து ரூ.4,000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல், பல்வேறு போலி நிறுவனங்களின் பெயரில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, சுரானா குழுமத்தை சேர்ந்த 3 நிறுவனங்கள், இயக்குநர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் காவல் நீட்டிப்பை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும், தினேஷ் சந்த் சுரானா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர்மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, விசாரணை முடியாத காரணத்தால் ஜாமீன் வழங்க வேண்டும் அல்லது வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என தினேஷ் சந்த் சுரானா தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில், புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், விசாரணை முடியவில்லை எனக் கூற முடியாது எனவும், குற்றத்தின் மூலம் பெற்ற பணத்தை வேறு எங்கெல்லாம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என மேல் விசாரணை நடந்து வருவதாகவும் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், காவல் நீட்டிப்பை ரத்து செய்யவும், ஜாமீன் வழங்கவும் மறுத்து, தினேஷ் சந்த் சுரானா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தனர். வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இந்த வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்கும்படி, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

The post சுரானா நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: சிறப்பு நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Surana ,CHENNAI ,Surana Company ,IDBI ,SBI ,Surana Group ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம்...