×

காட்பாடி சன்பீம் பள்ளி மைதானத்தில் 3 தாலுகாக்களில் இயக்கும் 47 பள்ளிகளின் 387 வாகனங்கள் ஆய்வு

*கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலர் பங்கேற்பு

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார்.2024-25ம் கல்வி ஆண்டு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஆய்வு செய்யும் பணியை காட்பாடி சன்பீம் பள்ளி மைதானத்தில் நேற்று காலை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, பள்ளி வாகனங்களில் அவசரகால வழி சரியான முறையில் இயங்குகிறதா எனவும், வாகனத்தில் தீயணைப்பு கருவிகள் சரியான நிலையில் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். மேலும் வாகனத்தில் முதலுதவி பெட்டி, ஓட்டுனர் அமரும் இடம் பள்ளி குழந்தைகள் ஓட்டுனரை நெருங்காத வகையில் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா என்பதையும், வாகனத்தின் தரை தளம் பள்ளிக்குழந்தைகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளதா எனவும், ஆய்வு மேற்கொண்டார்.

அத்துடன் வாகனத்தில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குழந்தைகள் கைகள் மற்றும் தலையை வெளியே நீட்டாமல் தடுக்கும் வகையில் பக்கவாட்டில் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். மேலும் வாகனத்திலிருந்து இறங்கும்பொழுது படிக்கட்டுகளுக்கும், தரைதளத்திற்கும் இடையேயான இடைவெளி 300 மிமீ இருப்பதை உறுதி செய்து கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

தொடர்ந்து வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு தாலுகாக்களில் இயங்கும் 47 பள்ளிகளிலிருந்து 387 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. நாளை 9ம் தேதி குடியாத்தம், கே.வி.குப்பம் மற்றும் பேரணாம்பட்டு தாலுகாக்களில் 32 தனியார் பள்ளிகளின் 223 வாகனங்கள் குடியாத்தம் ராஜகோபால் அரசு நிதியுதவி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வின்போது வேலூர் ஆர்டிஓ கவிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத், தாசில்தார் சரவணன், போக்குவரத்து ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேஷ் கண்ணா, சிவராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு உட்பட பலர் இருந்தனர்.

The post காட்பாடி சன்பீம் பள்ளி மைதானத்தில் 3 தாலுகாக்களில் இயக்கும் 47 பள்ளிகளின் 387 வாகனங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Gadbadi ,Sunbeam School ,Vellore ,Collector ,Subbulakshmi ,Vellore district ,Gadpadi Sunbeam ,Dinakaran ,
× RELATED ரயில்கள் மீது கல்லெறிந்தால் கடும்...