×

தர்மபுரியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் வீடு புகுந்து பெண்களை தாக்கி நகை, பணம் துணிகர கொள்ளை

*எஸ்பி நேரில் விசாரணை; சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு

தர்மபுரி : தர்மபுரி அருகே முகமூடி கொள்ளையர்கள் அதிகாலையில் வீடு புகுந்து பெண்களை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் விசாரணை நடத்தினார். சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்படுகிறது. தர்மபுரி அருகே பிடமனேரி மொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (48). சோகத்தூர் டாஸ்மாக் கடை சேல்ஸ்மேன். இவரது மனைவி சாந்தி(40). இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.

மகன்கள் கோவையில் படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு தர்மபுரியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சின்னசாமி வேலை முடிந்து, பெற்றோர் வீட்டில் இரவு தங்கிவிட்டார். மனைவி சாந்தி மட்டும் வீட்டில் தூங்கினார். நேற்று அதிகாலை எழுந்து வீட்டின் அருகேயுள்ள தோட்டத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். பின்னர் வீட்டிற்குள் செல்லாமல் வெளிப்புறமாக தாழ்பால் போட்டுவிட்டு, வராண்டாவில் கட்டலில் படுத்து தூங்கிவிட்டார்.

அப்போது முகமூடி அணிந்து 4 கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்தனர். 2பேர் வெளியே காவல் காக்கவும், 2பேர் 6 அடி உயரமான காம்பவுண்ட் சுவரில் ஏறி வளாகத்திற்குள் இருந்து வீட்டிற்குள் சென்றனர். பின்னர் பீரோ சாவியை எடுத்து திறந்து, உள்ளே இருந்த லாக்கரை உடைத்து பணம் ₹47 ஆயிரம், அரைபவுன் தங்க மோதிரத்தை கொள்ளையடித்து சென்றனர். பீரோவில் வேறு நகை, பணம் இல்லாததால், பொருட்களை சிதறி வீசினர். பின்னர் வெளியே வந்தனர். அங்கு வராண்டாவின் ஒருபகுதியில் கட்டலில் தூங்கிகொண்டிருந்த சாந்தியின் கழுத்தை இறுக்கி ஒருவர் பிடித்துக்கொள்ள, மற்றொருவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டார். கூச்சலிட்ட அவரை கொள்ளையர்கள் தாக்கினர். பின்னர் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து தப்பினர்.

இதேபோல், தர்மபுரி நந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (44). இவர் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேவதி (38). நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவில் கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை ராஜீவ் காந்தி திறந்தார். அப்போது இருளில் மறைந்திருந்த 4 முகமூடி கொள்ளையர்கள் கல்லால் ராஜீவ்காந்தியை தாக்கினர்.

பின்னர் அவரது மனைவி ரேவதியின் கழுத்தில் கிடந்த, தங்க செயினை பறிக்க முயற்சி செய்தனர். ரேவதி செயினை இருக்க பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இச்சத்தை கேட்டு அக்கம், பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு கொள்ளையர்கள் ஓடிவிட்டனர். காயம் அடைந்த ராஜீகாந்தியை, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டது. சாந்தி, ரேவதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டனர். இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இத்தகவல் கிடைத்து, தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் மொன்னையன் கொட்டாய் சாந்தி வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் நந்தி நகர் ரேவதி வீட்டிற்கு சென்று எஸ்பி விசாரித்தார். இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த இரண்டு வீடுகளிலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும், கைரேகை பதிவுகளையும் சேகரித்தனர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. நாய் சிறிது தூரம் ஓடி நின்றது. இந்நிலையில் தர்மபுரி எஸ்பி உத்தரவின்பேரில், 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை போலீசார் கைப்பற்றி பார்த்து விசாரித்து வருகின்றனர்.

கொள்ளையர்கள் 4பேரும் தப்பி செல்லுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 3 தனிப்படை போலீசாரும் கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நடந்த வீட்டின் சிறிது தூரத்தில் சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தேசிய நெடுஞ்சாலையின் வழியாக சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தர்மபுரியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் வீடு புகுந்து பெண்களை தாக்கி நகை, பணம் துணிகர கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,SP ,Stephen Jesupadam ,Dinakaran ,
× RELATED போதை பொருட்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்