×
Saravana Stores

நான் யார்?: ஸ்ரீரமண மகரிஷி ஜெயந்தி

28.12.2023

கிரி உருவில் உள்ள அருணாசலம் வேங்கடராமன் எனும் திருப்பெயரில் மதுரைக்கு அருகிலுள்ள திருச்சுழி எனும் தலத்தில் அவதரித்தது. பகவான் ஸ்ரீரமணரின் அவதார நோக்கத்தை உற்று நோக்க நமக்கு கிடைப்பது ஒரேயொரு பதில்தான். அதாவது, பகவான் தமது வாழ்வு முழுவதும் ஒரேயொரு உபதேசத்தை கூறிக் கொண்டேயிருந்தார். அதுதான் ‘நான் யார்?’’ எனும் ஆத்ம விசாரம். தன்னை அறிவது.

ஏன் நான் யார்? என்பதை அறிய வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலைத்தான் விதம்விதமாக பல பாடல்களிலும், உபதேச நூல்கள் மூலமாகவும் உணர்த்தியபடி இருந்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மௌன உபதேசத்தின் மூலமாக ஆலமர் கீழ் விளங்கும் தட்சிணாமூர்த்தமாக அமர்ந்தும் பிரம்மத்தை போதித்தார். மௌனத்தினால்தான் பிரம்மம் பிரகடனம் செய்யப்படுகிறது என்று உபநிஷதம் கூறியதையே தன் அனுபூதியில் நின்று காட்டினார். அல்லது ஞானியின் அனுபூதி நிலையை உபநிஷதம் அப்படிச் சொன்னது என்றும் கொள்ளலாம்.

‘‘எதற்கெடுத்தாலும் நான்… நான்… நான்… என்று சொல்கிறாய் அல்லவா. அந்த நான் யார்? என்று சற்று உள்ளே பாரேன். இந்த நான் எனும் எண்ண விருத்தி எங்கிருந்து வருகிறது என்று கவனத்தை உள்முகமாகத் திருப்பேன். இந்த உடலை நான் என்று சொன்னால் தூக்கத்தில் உடலைக் குறித்த நினைவு இல்லையே. ஆனால், சுகமாகத் தூங்கினேன் என்று மறுநாள் சொல்கிறாய். அப்போது இந்த தூக்கத்தை யார் அனுபவித்தது.

விழித்திருக்கும்போதும் இந்த நான் உள்ளது. உடலும், உலகமும் மறைந்த தூக்கத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. எனவே, இந்த நான் எனும் உணர்வு எங்கு உற்பத்தியாகிறது என்று தேடினால் மெல்ல இந்த நான் தன்னுடைய பிறப்பிடமான ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும்’’ என்று விளக்கினார்.

‘‘பகவானே, மூர்த்தி வழிபாடு, பூஜை, மந்திரங்கள் என்று எத்தனையோ இருக்கிறதே’’

‘‘இவையெல்லாமும் சித்த சுத்தி தரும். மனதில் ஏகாக்கிரகம் என்கிற மன ஒருமையை உண்டாக்கும். மனம் ஏகாக்கிரகமனால் ஆத்ம வித்தை எளிதாக சித்திக்கும். எப்படி வைத்தாலும் மீண்டும் தன்னிடத்தேதான் வரவேண்டும்’’ என்று பதில் பகன்றார்.

பகவான் ஸ்ரீரமணரிடம் ஒரு சாதகர், ‘‘பகவானே… இந்த மனம் தானாகவே சென்று ஆத்ம ஸ்தானத்தில் சென்று உட்கார்ந்து கொள்ளக் கூடாதா’’ என்று இயலாமையின் சோகத்தோடு கேட்டார்.

பகவான் அமைதி காத்தார். அருகே அணில் ஒன்று நிறைய குட்டி போட்டிருந்தது. அங்கும் இங்கும் தலையை தூக்கி ஓட எத்தனித்தது. மகரிஷி அதை ஒவ்வொன்றாக எடுத்து சிறு குடுவையில் பத்திரமாக வைத்து உணவும் கொடுத்தார். எதிரே இருந்தவர் முகம் மலர்ந்தது. பகவான் புரிகிறதா… என்பதுபோல பார்த்தார்.

‘‘இந்த அணில் குஞ்சுகளுக்கு நாம வெளியபோனா நம்மள பூனையோ, வேறு பிராணியோ கொத்தி தூக்கிண்டு போயிடும்னு தெரியாது. அதுக்கா அந்த விவேகம் வரதுக்கு வரைக்கும் நாமதான் அதை உள்ள போட்டுண்டே இருக்கணும். அதுமாதிரிதான் மனசுக்கு வெளிய போறதுனால துக்கம் வரும்கற விஷயம் தெரியாது. மனசுக்கா தெரியற வரைக்கும் நாமதான் அதை வெளியிலிருந்து உள்ள பிடிச்சு போட்டுண்டே இருக்கணும்’’ என்று எளிமையாக கூறினார்.

எந்த சாதனையும் செய்ய முடியவில்லையே, நீங்கள் சொல்வதும் புரியவில்லையே என்று கூறிய அன்பர்களுக்கு, ‘‘இதோ இந்த அருணாசலத்தை வலம் வாருங்கள். போதும். இதுவே சிவம்’’ என்று கூறியதோடு மட்டுமல்லாது, ‘‘நாம் எவ்வாறு உடலை நான் என்று அபிமானிக்கிறோமோ அவ்வளவு பிரியமாக சிவபிரான் இந்த அருணாசல மலையை தனது தூல வடிவத் திருமேனியாக ‘நான்’ என்று அபிமானிக்கிறார்’’ என்று மலையின் மகிமையை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு ஒவ்வொரு யுகங்களிலும் மகரிஷிகள் அவதரித்த வண்ணம் இருப்பர். அவர்கள் காட்டும் மார்க்கத்தை இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: கிருஷ்ணா

The post நான் யார்?: ஸ்ரீரமண மகரிஷி ஜெயந்தி appeared first on Dinakaran.

Tags : Sriramana Maharishi Jayanti ,Arunachalam Venkataraman ,Giri ,Thiruchuzhi ,Madurai ,Lord ,Sri Rama ,God ,Sri Ramana Maharishi Jayanti ,
× RELATED பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’