×

தீர்க்க சுமங்கலி பாக்கியமருளும் நாமம்!

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

கர்ப்பூர வீடிகா ஆமோத ஸமாகர்ஷத் திகந்தரா இதற்கு முன்னர் சொன்ன நாமங்களில் காதுகள், கன்னம், உதடுகள், பற்கள் என்று பார்த்துக் கொண்டே வந்தோம். அம்பிகையினுடைய திருவாய்ப் பகுதியின் வர்ணனையைத்தான் இப்போது பார்த்துக் கொண்டே வருகின்றோம். அந்த வாய்ப்பகுதியினுடைய வெளிப்பகுதி உதடுகள். அந்த உதடுகளுக்குள் மறைந்திருக்கக் கூடியது பற்கள். இப்போது அந்த பற்களுக்கும் உள்ளே நாக்கு இருக்கின்றது. அந்த நாக்கை வர்ணிக்க வேண்டும்.

ஆனால், வசின்யாதி வாக் தேவதைகள் நாக்கை நேரடியாக வர்ணிக்கவில்லை. அப்படி வர்ணிக்காமல் அதற்குப் பதிலாக அந்த நாக்கு செய்யக் கூடிய செயல் இருக்கிறதல்லவா… நாக்கிற்கு என்ன செயலெனில், இரண்டு செயல்கள். ஒன்று சுவைத்தல். சுவைக்கக் கூடியது நாக்கு. இன்னொன்று பேசக் கூடியது. அதாவது இந்த சுவையை உணர்ந்து செய்யும் ஞானேந்திரியமாக நாக்கு செயல்படுகிறது. அதே நாக்கு கர்மேந்திரியமாகவும் செயல்படுகின்றது. பேசுதல் என்கிற செயலான கர்மேந்திரியமாகவும் செயல்படுகின்றது. இப்போது நாக்கிற்கு இருக்கக் கூடிய இரண்டு செயல்களை வசின்யாதி வாக் தேவதைகள் வர்ணிக்கிறார்கள்.

இப்போது கர்ப்பூர வீடிகா ஆமோத ஸமாகர்ஷத் திகந்தரா என்கிற இந்த நாமாவானது, அம்பிகையினுடைய நாக்கையும் அது சுவைக்கக் கூடிய தாம்பூலத்தை வர்ணிக்கின்றது. இதற்கு அடுத்த நாமா அம்பிகை பேசக்கூடிய சொல் இருக்கிறதல்லவா… அந்தச் சொல்லினுடைய இனிமையை வர்ணிக்கின்றது. இந்த வீடிகா என்றால் தாம்பூலம் என்கிற பொருள் வந்தாலும், சாதாரணமான தாம்பூலம் கிடையாது. ஏனெனில், இந்த வெற்றிலைக்குள் வெறும் பாக்கு மட்டுமில்லாமல் சில விசேஷமான பொருட்களெல்லாம் சேர்த்து கற்பூரம், குங்குமப் பூ, வறுத்த அரிசி என்று அனைத்தையும் சேர்த்து கூம்பாக மடித்து அம்பாளுக்கு சமர்ப்பணம் செய்வதற்கு வீடிகா என்று பெயர். மராட்டியத்தில் இந்த வீடிகாவை கோவிந்த பீடா என்பார்கள்.

ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் அம்பாளுக்கு தாம்பூலம் அளித்தல் என்பது மிகவும் முக்கியமாகும். அதனாலேயே நாம் சுமங்கலிப் பெண்களை அம்பாளாக பாவித்து தாம்பூலம் தருகின்றோம். இதில் கற்பூரம் அதிகம் இருப்பதால், கற்பூர வீடிகா என்று பெயர். மிகுந்த நறுமணம் உடையது. அப்படிப்பட்ட இந்த தாம்பூலத்தை அம்பிகை உவந்து ஏற்றுக்கொண்டு பற்களால் மென்று, தன்னுடைய நாவால் சுவைக்கிறாள். இந்த கற்பூர வீடிகா எப்போது அம்பிகையின் நாவால் சுவைக்கப்பட்டதோ, ஏனெனில் மிகுந்த நறுமணம் உடையது அம்பாளால் சுவைக்கப்பட்டு விட்டது. சாதாரண நறுமணமாக இருந்தது இப்போது எங்கு பார்த்தாலும் அந்த நறுமணம் பரவி நிற்கின்றது.

கற்பூர வீடிகா என்கிற வார்த்தைக்கு அடுத்து ஆமோதம் எனும் வார்த்தை வருகின்றது. இந்த வார்த்தைக்கு ஆனந்தம் என்று பெயர். எப்படி ஒரு பிரம்ம ஞானியினுடைய ஆனந்தம் எல்லா இடத்திலும் பரவுமோ அதுபோல, கற்பூர வீடிகாவினுடைய நறுமணம் எல்லா இடத்திலும் பரவுகின்றது. சௌகந்தி கலஸத்கசா… என்கிற நாமத்தில் சௌகந்தி எனும் மலர் பிரம்ம ஞானியின் ஆனந்தத்தின் வெளிப்பாடு என்று பார்த்தோம். இதற்கு அடுத்து முக்கியமான வார்த்தை வருகின்றது. ஸமாகர்ஷத் திகந்தரா – திகந்தரா என்பது திக்கு அந்தரம். அதாவது திசைகளையும் திக்குகளையும் சேர்த்து திகந்தரா என்கிறோம்.

எல்லா திக்குகளிலும் திசைகளிலும் அந்த நறுமணம் பரவிக் கொண்டேயிருக்கின்றது. அது எப்படி வியாபிக்கின்றதெனில் ஸமாகர்ஷத் திகந்தரா… எல்லா திக்குகளுக்கும் பாரபட்சமில்லாமல் சமமாக பரவிக் கொண்டிருக்கிறது. எட்டு திக்குகளும் சமமாக அந்த நறு மணத்தை ஆகர்ஷித்துக் கொள்கிறது. கொஞ்சம் மனக் கண்ணை கொண்டு வாருங்கள். நடுவில் அம்பாள் இருக்கின்றாள். அதைச் சுற்றியுள்ள திக்குகள் தங்களுக்குள் நறுமணத்தை சமமாக பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஸமாகர்ஷத் திகந்தரா எனும் வார்த்தையின் இன்னொரு சூட்சுமம் என்னவென்று பார்ப்போமா? நாம் திசை எப்படி என்று கண்டுபிடிக்க வேண்டுமெனில், சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. மறையும் திசை மேற்கு என்று நாம் இருக்கும் இடத்தை வைத்து திக்குகளை கணக்கிடுகின்றோம். ஆனால், அம்பிகையானவள் திக்குகளுக்கும் திசைகளுக்கும் அப்பாற்பட்டவள். விராட் சொரூபிணீ.

இந்த விராட் சொரூபத்திற்கும் திகம்பரி என்று பெயர். திகம்பரி என்றால், ஆடை அணியாதது என்பது மட்டும் பொருளல்ல. திக்குகளையே அம்பரமாக போர்த்திக் கொண்டிருப்பவள். அம்பரம் எனில் போர்வைபோல போர்த்திக் கொண்டிருப்பவள். அதனால்தான் ஞானியரை திகம்பரர் என்கிறோம். அவரை எந்த திக்கோ திசையோ கட்டுப்படுத்தாது. எல்லாவித திசைகளையும் கடந்து விட்டவர். அதுபோல அம்பாள் திக்குகளையெல்லாம் கடந்தவள்.

She is not confined to directions. She cannot me confined to any direction. அவளை எந்த திசைக்குள்ளேயும் அடக்க முடியாது. அதற்கு அர்த்தம் என்னவெனில் அவள் காலம், இடம் என்று எல்லாவற்றையும் கடந்து நிற்கிறாள். அப்படி விராட் சொரூபிணியாக இருக்கக் கூடிய அம்பாள் சுவைக்கக் கூடிய தாம்பூலம். அந்த தாம்பூலத்தினுடைய நறுமணம் எல்லா திக்குகளிலேயும் சமமாக பரவ வேண்டுமென்று சொல்லி, இந்த திக்குகள் அம்பாளைச் சுற்றி ஒரு குழந்தையைப்போல் அமர்ந்திருக்கிறார்கள்.

இன்னும் சொல்ல வேண்டுமெனில் அஷ்ட திக் பாலகர்களும் அம்பிகையைச் சுற்றி அம்பாளுக்கு கட்டுப்பட்டு அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே சரி செய்து கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இன்னொரு சூட்சுமம் என்னவெனில், இந்த வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோமெனில், கிழக்கு பார்த்து உட்காருங்கள் என்று சொன்னால் நாம்தான் கிழக்கு பார்த்து உட்கார வேண்டும். நாம் மேற்கு பார்த்து உட்கார்ந்துவிட்டு கிழக்கு என்னைப் பார்த்து வரவேண்டுமெனில் வராது.

ஆனால், அம்பிகையானவள் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பதால் அனைத்து திக்குகளும் அவளைப் பார்த்து இருக்கும். திசைகளும் திக்குகளும் யாரைப் பார்த்து தங்களை சரி செய்து கொள்ளுமோ அந்த அம்பிகையினுடைய கர்பூர வீடிகாவின் நறுமணம் எல்லா பக்கமும் நிறைந்திருக்கிறது. அதாவது, இதனுடைய சூட்சும அர்த்தம் அம்பிகையின் ஞானம் என்கிற நறுமணம் எல்லா இடத்திலும் பரவியிருக்கின்றது. அந்த நறுமணத்தை எல்லா திக்குகளும் போட்டி போட்டுக்கொண்டு சமமாக எடுத்துக் கொண்டுள்ளன. அதாவது அம்பிகையினுடைய ஞான நறுமண சர்வ வியாபித்துவம் இங்கு காட்டப்படுகின்றது.

சிதானந்தர் தாம்பூலத்திற்கு ஒரு விளக்கம் அளிக்கின்றார். அதாவது, மனம், புத்தி, அந்தக்கரணம் என்று எவையெல்லாம் மனம் என்பதை உருவாக்கி உலகத்தை காட்டுகின்றதோ இவை அனைத்தையும் சின்மாத்திரமாக நீக்கி அதாவது, அம்பிகையினுடைய ஞானத் திருவடியில் வைத்து இந்த மூன்றையும் சுருட்டி தாம்பூலமாக அளிக்க வேண்டுமென்கிறார், அதாவது, தன்னுடையது அல்லாத தான் அல்லாத இந்த மனதை சுருட்டி அம்பாளின் பாதத்தில் சரணடைவதே தாம்பூலம் என்கிறார். என்னுடையதல்ல என்கிறபோதே அதை அம்பிகை பார்த்து விடுகின்றாள்.

அப்போது அம்பிகையின் அருளுக்கு பாத்திரமாகின்றது. அதை அப்படியே தாம்பூலமாக அம்பாள் தரிக்கின்றபோது மனம் மனமாக இல்லாமல் அம்பிகையின் ஆத்ம சம்மந்தம் பெற்று விடுகின்றது. இப்போது அந்த சம்மந்தத்தினால் எல்லா பக்கமும் அந்த தாம்பூலம் நறுமணம் கமழ்கின்றது. இன்னொன்று தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என மூன்றையும் தனித்தனியாகச் சேர்த்தால் சிவப்பு என்கிற நிறம் வருகின்றது. ஒரு நிறத்தோடு இன்னொரு சேர்ந்தாலும் தன் நிறத்தை அது இழந்து சிவப்பு என்கிற நிறம் மட்டுமே நிற்கும்.

இங்கு சிவப்பு என்பதை ஏற்கனவே சமாதி அவஸ்தை என்று பார்த்தோம். எனவே, நம் மனதை சமர்ப்பித்து விட்டால் அதையே தாம்பூலமாக ஏற்றுக் கொண்டு ஜீவன்களுக்கு சமாதி அவஸ்தையை அருளுகிறாள். நம்மை பொறுத்தளவில் மனதை அளித்து விட்டு அமர்ந்தால் அவளின் நறுமணம் நம் அகம் முழுதும் பெருகி திக்கெங்கிலும் விரவி அதையும் தாண்டிச் செல்லும்.

இந்த நறுமணமானது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனாலும், வசின்யாதி வாக்தேவதைகள் நமக்குத் தெரிந்த நறுமணத்தைக் காட்டி அதையும் விஞ்சும் ஆத்ம சுகந்தத்தை சுட்டிக் காட்டுகின்றார்கள். நம்முடைய சொரூபத்தை நமக்கு காண்பிக்கிறார்கள். நேரடியாகவே தாம்பூலம் என்று இந்த நாமத்தில் வருவதால், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் தாம்பூலத்தின் மூலம் ஆசுகவியானார் காளமேகப் புலவர். அவளின் தாம்பூலத்தினால் சாதாரணராக இருந்தவர் பெரும் கவியாக மாறினார். அதுவென்ன என்று பார்ப்போமா!

திருவரங்கத்து கோயிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோயிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள்.

கோயிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோயிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலிதான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.

(சக்தி சுழலும்)

The post தீர்க்க சுமங்கலி பாக்கியமருளும் நாமம்! appeared first on Dinakaran.

Tags : Posh Sumangali ,Lalita Sahasranamas ,Ramya Vasudevan ,Krishna Garbhura Veedika ,Ambika ,
× RELATED தீர்க்க சுமங்கலி வரம் தரும் காரடையான் நோன்பு