×

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இசிஆர், ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட 30 இடங்களில் தீவிர சோதனை: ஆேலாசனை கூட்டத்தில் எஸ்பி தகவல்

திருக்குழுக்குன்றம், டிச. 28: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இசிஆர், ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட 30 இடங்களில் தீவிர சோதனை நடத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள், மேலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் ஓட்டல் உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டார்.

அதில் 31ம் தேதி பிற்பகல் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள பல முக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் மாவட்டத்தில் சுமார் 180க்கும் மேற்பட்ட மிக முக்கிய இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்கு மொத்தம் 961 காவல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எஸ்பி தெரிவித்தார். கூட்டத்தில் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் உட்பட் பல்வேறு காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், மேலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு கொண்டாட்ட கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தும் விடுதி உரிமையாளர்கள் காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அனுமதி பெற்றிருக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பதிவு செய்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சம்பந்தப்பட்ட விடுதி மேலாளர்கள் தங்களிடம் முன்பதிவு செய்த விருந்தினர்களின் ரசீதை நிகழ்ச்சிக்கு வரும்போது சோதனைச் சாவடியில் காண்பிக்க முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். முன்பதிவுக்கான ரசீது இல்லாத நபர்களின் வாகனங்களை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்க இயலாது. நிகழ்ச்சி நடைபெறும் விடுதியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அல்லது முன்பதிவு செய்யாத நபர்களை அனுமதிக்க கூடாது.

நிகழ்ச்சியானது குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்து இரவு 1 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போதைப் பொருட்களை அனுமதிக்கக் கூடாது. விருந்தினர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். மேலும் தற்காலிக ஓட்டுநர்களை போதிய அளவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களின் வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

நிகழ்ச்சிக்கு வருகை தரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர்கள் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். விருந்தினர்கள் கடலுக்குள் இறங்குவதை உரிய நபர்களை நியமித்து தடுத்திட வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தடுப்பான் உபகரணங்கள் இருப்பதையும், அவசர மருத்துவ சேவைக்கு மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் இருக்குமாறும் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அரங்கத்திற்குள் வரையறுகப்பட்ட நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மேற்படி விதிமுறைகளை மீறும் பட்சத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்து, காவல் துறை மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களை குடித்துவிட்டு ஓட்டுதல், வரையறுக்கப்பட்ட நபர்களுக்கு மேல் பயணம் செய்வது மற்றும் வேகமாக வாகனத்தை இயக்குவது ஆகியவை கண்டறியப்பட்டால் மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புத்தாண்டு கொண்டாடத்தின்போது பொது இடங்களில் மது அருந்துவது, கூச்சல் இடுவது மற்றும் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நீச்சல் குளம் அருகில் மேடை கூடாது
நிகழ்ச்சி நடைபெறும் விடுதியில் நீச்சல் குளங்கள் இருக்கும் பட்சத்தில், அதன் மேல் மேடை அமைப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். மேலும் நீச்சல் குளம் இருக்கும் இடத்திற்கு அருகே விருந்தினர்கள் செல்லாமல் இருக்க போதிய பாதுகாப்பு அலுவலர்களை நியமிக்கப்பட வேண்டும்.

வாண வேடிக்கைக்கு தடை
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வாண வேடிக்கை பொருட்களை பயன்படுத்துவது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதிக ஒலி எழுப்பக் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.

The post புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இசிஆர், ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட 30 இடங்களில் தீவிர சோதனை: ஆேலாசனை கூட்டத்தில் எஸ்பி தகவல் appeared first on Dinakaran.

Tags : ECR ,OMR Road ,New Year ,Thirukkhatkunram ,New Year's Eve ,
× RELATED ண்டும், குழியுமாக காட்சியளித்த குலசை இசிஆர் சாலை சீரமைப்பு