×

சிபிசிஎல் எண்ணெய் கழிவு பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் எண்ணூர் உர ஆலையில் அமோனியா கசிவு: கடும் மூச்சுத் திணறலால் 50க்கும் மேற்பட்டோர் மயக்கம்

சென்னை: எண்ணூரில் உள்ள தனியார் ரசாயன உர தொழிற்சாலையின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அமோனியா வாயு திடீரென வெளியேறியது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வடசென்னையில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கன மழையின்போது எண்ணெய் கழிவு வெளியேற்றப்பட்ட நிலையில், அமோனியா வாயு கசிந்த சம்பவம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொழிற்சாலையை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை எண்ணூர், பெரியகுப்பம் அருகே கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற தனியார் ரசாயன உரத்தொழிற்சாலை 1963 முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் 270 நிரந்தர ஊழியர்கள், 375 தற்காலிக ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் என 600க்கும் மேற்பட்டோர் 3 ஷிப்ட்டுகளாக வேலை செய்கின்றனர். இங்கு ரசாயன உரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கன்டெய்னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த உரம் தயாரிப்புக்கான அமோனியா வாயு , அரபு நாடுகளான ஈரான், சவூதி அரேபியாவில் இருந்து கப்பல் மூலம் திரவ வடிவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் கிழக்கு பக்கமாக நேர் எதிரே கப்பல்கள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சுமார் 2.5 கிமீ தூரத்துக்கு, கடலுக்கு அடியில் சுமார் 8 இன்ச் அளவுள்ள பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் தனியார் உர நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது.

இது அங்குள்ள சுமார் 15 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட பிரதான தொட்டியில் சேமிக்கப்படுகிறது. பின்னர் சிறுக சிறுக அமோனியா திரவத்தை வெளியே எடுத்து ரசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த நிறுவனத்துக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அரபு நாட்டிலிருந்து கப்பல் மூலம் அமோனியா திரவம் வர இருக்கிறது. இதை தொடர்ந்து, கடந்த 36 மணி நேரமாக அமோனியா திரவம் வரும் குழாய்களை குளிர்விக்கும் முன்னேற்பாடு பணிகளில் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அமோனியா திரவம் கொண்டு வரப்படும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் கடல் நீர் வெள்ளையாக மாறியது. இந்நிறுவனத்தை சுற்றியுள்ள பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்பட சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அமோனியா வாயு கசிவால் பயங்கர துர்நாற்றம் வீசியது. அப்பகுதிகளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் அமோனியா வாயு கசிவால் திடீரென மூச்சுத் திணறல், இருமல் மற்றும் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதில் பலர் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர்.

தகவலறிந்து எண்ணூர் போலீசார், தீயணைப்பு துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல், மீன்வளத்துறை மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்த 50க்கும் மேற்பட்டோரை துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, திமுக பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன், கவுன்சிலர் கோமதி சந்தோஷ், சிவகுமார், தீயணைப்பு மற்றும் போலீசார் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாநகராட்சி இணை ஆணையர் சமீரன், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, உதவி ஆணையர் நவேந்திரன் உள்பட பல்வேறு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டனர். சம்பவ இடத்துக்கு ஆவடி இணை ஆணையர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். உரத் தொழிற்சாலை நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து, குழாய் உடைப்பால் அமோனியா வாயு வெளியேறுவதை அதிகாரிகள் கட்டுப்படுத்தினர். மேலும் பாதுகாப்பு கருதி பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தவர்கள் மாநகர பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டு கேவிகே குப்பம் மற்றும் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தகவலறிந்ததும் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், உலகநாதபுரம், சத்தியவாணிமுத்து நகர், காமராஜர் நகர் போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வீட்டிலிருந்து வெளியேற முற்பட்டனர். அங்கு செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் வந்து, அமோனியா வாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டது. யாரும் பயப்பட வேண்டாம் என்று உறுதி அளித்தார். தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உத்தரவின்பேரில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட பகுதிகளில் சாம்பிள்களை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் பரவிய காற்றில் வழக்கத்தைவிட அமோனியா வாயு கசிவின் அளவு அதிகமாக இருப்பதை ஆய்வில் கண்டறிந்தனர். எண்ணூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழை வெள்ளத்தில், முகத்துவார பகுதிகளில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் கலந்ததால் ஏராளமான மீனவ மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், தற்போது இதே பகுதியில் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிவானால் மீண்டும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அமோனியா வாயு கசிந்த கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் தனியார் தொழிற்சாலையை உடனடியாக மூட வலியுறுத்தி தொழிற்சாலை வளாகம் மற்றும் காமராஜர் சாலையில் நேற்று காலை 500க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அந்த தனியார் ரசாயன உரத்தொழிற்சாலையின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவைக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், தொழிற்சாலையை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு சென்றது. இதுதொடர்பாக அனைத்து உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

மிகவும் ஆபத்தானது

அமோனியா வாயு கசிவு குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் உரத் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து அமோனியா திரவ வாயு செல்லும் குழாய், கடலில் அமைத்திருக்கும் முறை பாதுகாப்பற்றது. கடலில் வார்ப்புகள் அமைத்து, அதன் அடிப்படையில் கப்பலில் இருந்து குழாய்க்கு அமோனியா வாயு செல்லும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்கு உலகளாவிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அமோனியா மூலப்பொருள் விஷவாயு தன்மையுடையது. இது கசிவது என்பது சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகவும் ஆபத்து.

இத்தனை காலம் இந்த முறையிலேயே அமோனியா வாயுவை நிறுவனம் கையாண்டிருப்பதும் அதை மாசுகட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல், தொழில்துறை, மீன்வளத்துறை போன்ற ஒன்றிய, மாநில அரசு சார்ந்த துறைகள் கண்காணிக்காமல் இருந்ததும் மிகவும் வேதனைக்குரியது. தற்போது கடலில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் ஏற்பட்டுள்ள அமோனியா திரவ வாயு கசிவின் காரணமாக கடல் நீர் வாழ் உயிரினங்களும் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கும். எனவே, இதுகுறித்து தமிழக அரசு உரிய குழுவை நியமித்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை 10 மணியளவில் அந்நிறுவனம் அமைந்துள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post சிபிசிஎல் எண்ணெய் கழிவு பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் எண்ணூர் உர ஆலையில் அமோனியா கசிவு: கடும் மூச்சுத் திணறலால் 50க்கும் மேற்பட்டோர் மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Oilur ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்