×

பொன்னாங்கண்ணி கீரை!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

நமது உடல் சிறப்பாக செயல்பட மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருத்தல் அவசியம். அப்படி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த அன்றாட உணவில் ஏதாவதொரு வகையில் கீரையை சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. குறிப்பாக ஒரே வகை கீரையை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் வெவ்வேறு வகையான கீரைகளை ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பு. ஏனெனில் கீரைகள் பெரும்பாலும் பலவகையான சத்துகளை கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கீரைக்கும் தனிச்சிறப்பு உண்டு என்பதை நாம் அறிவோம். அந்தவகையில் பொன்னாங்கண்ணி கீரைக்கென தனி சிறப்புகள் உண்டு.

பொன்னாங்கண்ணி கீரை, கண்களை பாதுகாப்பதில் சிறந்து விளங்குகிறது. அதேபோல் உடலுக்கு பொன் போன்ற பொலிவினை தரக்கூடியதாகவும், தங்கத்தினை போன்ற மதிப்பினையும், பயன்களையும் தரக்கூடியதாகவும் இக்கீரை திகழ்கிறது. மேலும், பொன்னாங்கண்ணி எனப்பெயர் பெற்றதற்கு இதன் பண்பே காரணமாகும்.பொன்னாங்கண்ணி கீரை அமரந்தேசியே எனும் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் அல்டர்நேந்திரா சிசிலிஸ் ஆகும். இக்கீரைக்கு சீதை கொடுப்பை, சீதேவி எனப் பல பெயர்கள் உண்டு.

இக்கீரை நன்கு வளமான பகுதிகளிலும், நீர்வளம் நிறைந்த இடங்களிலும் செழிப்பாக வளரக்கூடியது. பொன்னாங்கண்ணி கீரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, பிரேசில், அர்ஜென்டினா, எகிப்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வர்த்தக நோக்கிலும், பயன்பாட்டிற்காகவும் வளர்க்கப்படுகிறது.

பொன்னாங்கண்ணி கீரை நாட்டு பொன்னாங்கண்ணி மற்றும் சீமை பொன்னாங்கண்ணி என இருவகைப்படும். நாட்டு பொன்னாங்கண்ணி பச்சைநிற இலைகளையும், சீமை பொன்னாங்கண்ணி சிவப்புநிற இலைகளையும் கொண்டிருக்கும். இரண்டு வகை கீரைகளுமே சிறந்த ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதாக திகழ்கிறது.

பொன்னாங்கண்ணி கீரையில் காணப்படும் சத்துகள்:

இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் பொன்னாங்கண்ணி கீரையில் உள்ளது. மேலும் இக்கீரையில் சிட்ரோஸ்டிரால், கேம்ப்ஃளடிரால், லூபியால், கரோட்டினாய்டுகள், பிளேவோனாய்டுகள், சாபோனின், டானின், டெரிபினாய்டுகள், சைட்டோஸ்டிரால் உள்ளிட்ட பல்வேறு நன்மை பயக்கும் மூலக்கூறுகள் உள்ளன. மேலும் அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகளை கொண்டதாகவும் பொன்னாங்கண்ணி திகழ்கிறது.

பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ பண்புகள்

பல்வேறு வகையான கண் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் பொன்னாங்கண்ணிகீரை சிறந்து விளங்குகிறது. இதற்கு காரணம் இதில் காணப்படும் வைட்டமின் ஏ ஆகும். பொதுவாக, வைட்டமின் ஏ நிறைந்த உணவு வகைகள் மாலைக்கண் நோயினை தடுக்கவும் ரெட்டினா செல்களை மேம்படுத்தவும் உதவும். அந்த வகையில் பொன்னாங்கண்ணி கீரை கண்களை பாதுகாப்பதில் முக்கியமான உணவாக உள்ளது.

பொதுவாக கீரைகள் அனைத்துமே வைட்டமின் சி நிறைந்ததாக உள்ளது. இதன் காரணமாக சரும பொலிவினையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க முடியும்.பொன்னாங்கண்ணி கீரை, கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை உள்ளடக்கியதால் உடல் வலிமையையும், எலும்புகளை வலிமையாக்கவும் கூடும். மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தவும், ரத்த சோகையை தவிர்க்கவும் உதவும். மேலும் இதில் உள்ளடங்கிய தாவரமூலக்கூறுகளின் காரணமாக பல்வேறு வகையான காய்ச்சலுக்கு மருந்தாகவும், ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தவும் பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது. மேலும், தலைமுடி உதிர்தல் பிரச்னை உடையவர்கள் அடிக்கடி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அந்த வகையில் பொன்னாங்கண்ணி கீரையும் தலைமுடி உதிர்தல் பிரச்னைக்கு ஒரு தீர்வாக உள்ளது. குறிப்பாக உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை உடலுக்கு அளிக்கிறது. நமது உடலின் முக்கியமான உறுப்புகளாக செயல்படும் இதயத்திற்கும், மூளைக்கும், புத்துணர்வு அளிக்கக் கூடியதாக பொன்னாங்கண்ணி கீரை திகழ்கிறது. இவ்வாறு பல்வேறு பயன்களை இக்கீரை கொண்டுள்ளதால் பொன்னாங்கண்ணி கீரை, கீரைகளின் ராஜா என்றழைக்கப்படுகிறது.

அதுமட்டுல்லாமல் இக்கீரையின் பயன்களை கிராமப்புறங்களில், போன கண்ணும் திரும்பும் பொன்னாங்கண்ணியே என்று இயல்பாக கூறுவது உண்டு. நன்மை வாய்ந்த கீரையை வாரம் ஒருமுறையாவது பொரியல், கூட்டு அல்லது குழம்பாகவோ சமைத்து உட்கொள்ளுதல் நலம். மேலும், இக்கீரையின் நன்மைகளை பதார்த்த குணபாடத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல்

காசம் புகைச்சல்
கருவிழிநோய்
வாதமனல்
கூசும் பீலீகம்
குதாங்குர நோய் பேசி
வையால்
என்னாங்
காணிப்படிவம் எமம்
செப்ப லென்னைப்
பொன்னாங்கண்ணிக்
கொடியைப் போற்று.

The post பொன்னாங்கண்ணி கீரை! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kungum ,R. Sharmila ,Dinakaran ,
× RELATED சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான் கீரை!