×

ஆன்மிகம் பிட்ஸ்: திருமண வரம் தரும் குரு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தாமரையில் சூரியன்

சென்னை பாரிமுனை லிங்கி செட்டித் தெருவில் உள்ளது மல்லிகேசுவரர் ஆலயம். இத்தலத்தில் உள்ள அம்மனின் திருவுரு, பச்சை நிற மரகதக் கல்லினால் ஆனது. அம்பிகை நான்கு திருக்கரங்களோடு மரகதாம்பிகை எனும் பெயரில் அருள்கிறாள். இத்தல நவகிரக மூர்த்தங்களில் நடுநாயகமாக ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அருணன் ஓட்ட, அதில் தாமரை பீடத்தில் சூரிய பகவான் வீற்றிருக்க, மற்ற கிரகங்கள் அவரவர்களுக்குரிய வாகனத்தில் அமர்ந்து காட்சியளிப்பது மிகவும் விசேஷமானது.

திருமண வரம் தரும் குரு

திருப்பத்தூரை அடுத்துள்ள பட்டமங்கலம் என்னும் சிற்றூரில் ஆலமரத்தின் கீழ் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, (வழக்கமாகப் பிற ஆலயங்களில் இவர் தெற்கு நோக்கி தரிசனம் தருவார்) வரமளித்து பக்தர் வாழ்வில் வளம் சேர்ப்பவர். வியாழக்கிழமை அன்று இவரை 108 முறை வலம் வந்து, அர்ச்சனை செய்தால் (முடிந்தால் அபிஷேகமும் செய்தால்) நீண்ட நாள் தடைப்பட்ட திருமணங்கள் விரைவாக நடந்தேறும். இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி நாடி ஜோதிட சுவடிகளில் குறிப்புகள் உள்ளனவாம்.

நான்கடி உயர ஞானமூர்த்தி

பொன்மான் வடிவில் வந்த மாரீசனை ராமர் வதைத்த ஊர், கொல்லுமாங்குடி. திருவாரூர் மாவட்டம் பேரளத்திற்கு மேற்கே மூன்றாவது கிலோ மீட்டரில் உள்ளது. இங்கு மகா காளநாத சுவாமி ஆலயம் பிரசித்தி பெற்றது. மகாகாளர் எனும் சித்தர் இங்குதான் முக்தி பெற்றார். இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி நான்கடி உயரத்தில் தரிசனம் அளிக்கிறார். வியாழக்கிழமைகளில் விசேஷமாக வழிபடப்படும் வரப்பிரசாதி இவர்.

லிங்கத்தில் தீச்சுடர்

வேதாரண்யத்தில் மூலவராக சிவகொழுந்தீசர் அற்புத தரிசனம் தருகிறார். நெருப்பில் தோன்றிய நாதன் என்பதைக் குறிக்கும் வகையில் அந்த லிங்கத்தில் தீச்சுடர்கள் காணப்படுவது பிரமிக்க வைக்கும் காட்சி.

கழுகாசல கிரிவலம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிசங்கரன் கோயில் சாலையில் 21 கி.மீ தொலைவில் உள்ளது கழுகுமலை. சம்பாதி எனும் கழுகுவடிவ முனிவர் தன் சாபவிமோசனத்திற்காக இத்தல முருகனை வணங்கி பேறு பெற்றதால் இத்தலம் கழுகாசலம் ஆனது. மூலவர் சிவசுப்ரமண்யராக ஒரு முகம், ஆறு கரங்களுடன் உள்ளார். மயில்மீது அமர்ந்த போர்க் கோலத்தில் விளங்குகிறார் முருகன். குரு, செவ்வாய் கிரக தோஷ நிவர்த்தித் தலமாக இது விளங்குகிறது. கழுகுமலையை பௌர்ணமியன்று கிரிவலம் வந்தால் முருகப்பெருமான் அருளால் நன்மைகள் பெருகி, தோஷங்கள் தொலைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

தொகுப்பு: ஜெய செல்வி

The post ஆன்மிகம் பிட்ஸ்: திருமண வரம் தரும் குரு appeared first on Dinakaran.

Tags : Kunkum Anmikam Sun ,Lotus Mallikesuvarar Temple ,Parimuna Lingi Chetti Street, Chennai ,
× RELATED முத்துக்கள் முப்பது-சித்திரை மகளே வருக! சீர் நலம் எல்லாம் தருக!