×

தொடர் விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும், குறைந்த செலவில் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.

குறிப்பாக, அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணைக்கு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் கொடிவேரி அணைக்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்தனர். குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அருவி போல் கொட்டும் தண்ணீரில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பெண்கள், குழந்தைகள் குளித்தும், கடற்கரை போன்ற மணற்பரப்பில் அமர்ந்து சுவையான மீன் வகைகளை வாங்கி சாப்பிட்டும் மகிழ்ந்தனர்.

அணையின் மேல் பகுதியில் உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். அதே போன்று அணையின் மேல் பகுதியில் குடும்பம் குடும்பமாகவும், இளைஞர்களும், இளம்பெண்களும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து பங்களாபுதூர் மற்றும் கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அணைக்கு வருபவர்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். மது அருந்தியவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.

The post தொடர் விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kodiveri Dam ,Gobi ,Dinakaran ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது