×

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகப்படுத்த திட்டம்: கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தலாம்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்ட் முலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வகையில் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் பேருந்துகளையே போக்குவரத்துக்கு பயன்படுத்த விரும்புகின்றனர். அதிலும் அதிகம்பேர் அரசு பேருந்துகளில் தான் பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 72 சதவீதம் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் மட்டுமே இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு விரவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, கும்பக்கோணம், நெல்லை, மதுரை போக்குவரத்து கழகங்கள் என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் மாநகர போக்குவரத்து கழகம் சென்னை மாநகரில் மட்டும் பேருந்துகளை இயக்குகிறது, மற்ற போக்குவரத்து கழகங்கள் அந்தந்த மண்டலங்களிலும் வெளியூர்களுக்கும் பேருந்துகளை இயக்குகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் நீண்ட தூர பயணத்திற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், வர்த்தக இடங்கள், வழிபாட்டு மற்றும் சுற்றுலா தலங்களுக்கும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்கி வருகிறது.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், அதேபோல வெளியூர்களில் இருந்து சென்னைக்கும் தினசரி 2,100 பேருந்துகளை அனைத்து போக்குவரத்து கழகங்களும் இணைந்து இயக்குகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிநவீன மிதவை பேருந்து, குளிர்சாதன பேருந்து, குளிசாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, குளிசாதனமில்லா படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, கழிப்பறை வசதி கொண்ட பேருந்து ஆகியவை இயக்கப்படுகின்றன. ஒரு மாதத்திற்கு முன்பே இணையதளம், செல்போன் செயலி மூலம் மின்னணு முன்பதிவு செய்யும் வசதிகள் உள்ளது.
இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பின் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிப்பதற்காக தினமும் 15,000 பேர் முன்பதிவு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பயணிகளின் வசிதிக்காகவும், தொழில்நுட்ப வளர்ச்சியை பயண்படுத்தும் விதமாகவும் யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்த வசதியாக மின்னணு டிக்கெட் இயந்திரம் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 22 பணிமனைகளில் மொத்தம் 1,078 பேருந்துகள் உள்ளன.

அண்டை மாநிலங்களை இணைக்கும் விதமாக 251 வழித்தடங்களிலும், தமிழ்நாட்டில் 139 வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களுக்கு செல்ல, நீண்ட தூர பயணத்திற்கு பொரும்பாலான மக்கள் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 2010-11 முதல் மின்னணு பயணச்சீட்டு சாதனங்கள் வாயிலாக பயணச்சீட்டுகள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது.

சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் முதலில் இந்த மின்ணணு பயணச்சீட்டு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு, புறநகர் பேருந்துகளிலும் மின்னணு டிக்கெட் வழங்கும் சாதனம் பயன்பாட்டுக்கு வந்தது. கையடக்கமாக உள்ள இந்த சாதனத்தில், கட்டண விகிதங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதன்மூலம் பயணச்சீட்டுகளை வழங்குவது எளிதாக இருந்தது.

மேலும், பயணச்சீட்டு விற்பனை விவரங்களையும் உடனடியாக பார்த்துக் கொள்ளும் வசதியும் இருந்ததால், நடத்துநர்கள் மத்தியில் இந்த முறை வரவேற்பை பெற்றது. பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் நடத்துநர்கள் தங்கள் பணிகளை விரைவாக முடிக்க இந்த சாதனம் உதவியாக இருந்தது. ஆய்வாளர்களுக்கும் பேருந்துகளில் ஆய்வு நடத்தவும் எளிமையாக இருந்தது. ஆனால், புறநகர் பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர பேருந்துகளில் அதிகப்படியான பயன்பாடு காரணமாக இந்த சாதனங்களை பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தது.

இதன் காரணமாக மாநகர பேருந்துகளில் இந்த சாதனத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டு மீண்டும் வழக்கமான டிக்கெட் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் மின்னணு டிக்கெட் சாதனம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட்களை பெரும் விதமாக மின்னணு டிக்கெட் இயந்திரம் விரைவில் பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்காக எஸ்பிஐ வங்கியிடம் இயந்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ளோம், வங்கி தரப்பில் இயந்திரங்களை தயாரித்து கொடுக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இந்த இயந்திரத்தின் சோதனைகள் முடிவடைந்துள்ளது. இயந்திரங்களை எந்த விலையில் எவ்வளவு வாங்குவது உள்ளிட்ட ஆலோசனைக்கு பிறகு அரசு ஒப்புதல் வழங்கிய பின் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். இந்த புதிய இயந்திரம் மூலம் டிக்கெட் பெறும் முறை எளிமையாகிறது.

மேலும் நேரடியாக வங்கி கணக்குக்கு பணம் செல்லும். பணம் கையாளுதல் குறைவதால் பாதுகாப்பு அதிகரிக்கிறது. நடத்துநர்கள் ஒரு பணிமனையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே பணிமனைக்கு வருவர், இந்த நேரத்தில் இரண்டு டிரிப்புக்கான டிக்கெட் கட்டணத்தை கையில் வைத்திருப்பர். தற்போது நேரடியாக வங்கி கணக்குக்கு செல்லும் என்பதால் அவர்களுக்கு கையில் பணம் உள்ளதே என்ற பயமில்லாமல் இருப்பர். மேலும் சில்லரை பிரச்னை இருக்காது. இது பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

* யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யாமல் பயணிப்பவர்களுக்கு தற்போது பணம் கொடுத்து டிக்கெட் வாங்க முடியும். இந்த புதிய மின்னணு இயந்திரம் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலமாகவும், மின்னணு பணப்பரிவர்த்தனை(யுபிஐ) செயலிகள் மூலமாகவும் பணம் செலுத்த முடியும்.

* பாதுகாப்பு அதிகரிப்பு
டிக்கெட் கட்டணம் நேரடியாக வங்கிகளுக்கு செலுத்தப்படுவதால் பணம் கையாள்வது குறையும். இதனால் நடத்துநர்களுக்கு திருட்டு பயம், பணம் தொலையும் அபாயம் போன்றவை இருக்காது. இதனால் பணப்பாதுகாப்பு அதிகரிக்கிறது.

The post அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகப்படுத்த திட்டம்: கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தலாம் appeared first on Dinakaran.

Tags : UPI ,Government Rapid Transport Corporation ,Chennai ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு...