×

பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தில் முளைப்பு திறனற்ற நெல் விதை விநியோகம்

*விவசாயிகள் புகார்

பெரணமல்லூர் : பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலமாக முளைப்பு திறனற்ற நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழக முதல்வர் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக விவசாயிகளுக்கு தேவையான விதை ரகங்கள், இடுபொருட்கள் மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையம் மூலமாக அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகத்தில் பெய்து வரும் பருவ மழையால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரி, குளம், கிணறுகளில் விவசாயம் செய்வதற்கான தண்ணீர் நிரம்பி உள்ளது.

இதனால் விவசாயிகள் பின் சம்பா பட்டத்திற்கு ஆயுத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், பெரணமல்லூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பலர் பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கோ 51 ரக நெல்விதைகளை சம்பா பட்டத்தின் விதைக்க அதிகளவு வாங்கி சென்று விதைத்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு இந்த மையத்தின் மூலமாக வாங்கி சென்ற விதை நெல்கள் முளைப்புத்திறனற்று காணப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:விவசாயத் தொழிலை ஆண்டிற்கு சொர்ணவாரி பட்டம், சம்பா பட்டம், நவரை பட்டம் என 3பட்டங்களாக பிரித்து வைத்து பயிர் தொழில் செய்து வருகிறோம். சொர்ணவாரி பட்டத்தில் மகசூல் அதிகம் கிடைக்கும். சம்பா பட்டத்தில் அதிக லாபம் பார்க்க முடியாது. நவரை பட்டத்தில் ஓரளவு மகசூல் கிடைக்கும். தற்போது பருவமழை தொடங்கி மாவட்ட அளவில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயத்துக்கு ஏற்ற வகையில் தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் பலர் பின்சம்பா பட்டத்தினை குறி வைத்து விளைநிலங்களில் விதைகளை விதைக்க தயாராகி வருகிறோம்.

குறிப்பாக இந்த பட்டத்திற்கு கோ 51 வகை நெல் விதைகளை அதிகளவு வேளாண்மை விரிவாக்க மையத்தில் மூட்டை ₹1300 என்ற அளவில் வாங்கி விதைத்துள்ளோம். இந்த கோ 51 ரக நெல் விதைகளை பயன்படுத்தும் போது முதலில் வயலில் அதற்கான நெல் விதைகளை பெட்டி வடிவில் உள்ள பிளாஸ்டிக் பாக்ஸில் போட்டு விடுவோம். மேலும், சூரிய வெளிச்சம் அதிகம் படாமல் இருக்க புடவையை முளைக்கும் நாற்று மீது மூடி விடுவோம்.

இதனை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் கழித்து வளர்ந்த நாற்றை பிடுங்கி வயலில் நடுவோம். மேலும் இந்த ரக நெல் விதைகள் குறிப்பிட்ட சில நாட்களிலேயே வளர்ந்து விடுவதாலும், ஆட்கள் பற்றாக்குறையினால் மிஷின் மூலம் நடவு செய்வதற்கும் இந்த வகை ரகங்கள் நன்றாக உள்ளது. தற்போது வாங்கி விதைத்துள்ள இந்த விதை நெல் முளைப்பு திறனற்று உள்ளதால் நடவு செய்ய முடியாமல் திண்டாடி வருகிறோம்.

இதுகுறித்து நாங்கள் பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் வாங்கிய விதைநெல் முட்டைகளுக்கு உரிய பில் கொடுக்க மறுக்கின்றனர். வயலில் நடவு செய்வதற்கான ஆயத்து பணிகளை செய்து முடித்த பின் முளைப்பு திறனற்ற விதையால் விவசாயிகள் பலர் சம்பா பட்டத்தில் நஷ்டத்தினை அடைய கூடும். இதுகுறித்து நாங்கள் மாவட்ட அதிகாரியிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தில் முளைப்பு திறனற்ற நெல் விதை விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Peranamallur Agricultural Extension Centre ,Peranamallur ,Peranamallur Agricultural Extension Center ,Dinakaran ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...