×

கலாஷேத்ரா நடன ஆசிரியர் மீது முன்னாள் மாணவி அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச.23: பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தவும், அதில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கைதான கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த நிலையில், சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு நடனம் கற்று கொடுப்பதாக கூறி மற்றொரு நடன ஆசிரியரும் தன்னிடம் தவறான முறையில் நடத்து கொண்டதாக மற்றொரு மாணவி சென்னை காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பெயரை குறிப்பிடாமல் அந்த மாணவி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், நடன ஆசிரியருக்கு காவல்துறையில் செல்வாக்கு உள்ளதால் தனது புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, மனுதாரர் அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி அடிப்படை முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரியை நியமித்து விசாரணையை 60 நாட்களுக்குள் முடித்து காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விளம்பரத்திற்காக புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தால் புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.

The post கலாஷேத்ரா நடன ஆசிரியர் மீது முன்னாள் மாணவி அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Chennai ,Kalashetra College ,Dinakaran ,
× RELATED சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள்...