×

பாஜவுடன் கூட்டணி இல்லை என்று பழனிசாமி போடும் நாடகத்தை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்: பேரிடர் காலத்தில் அரசுக்கு உதவாமல் அரசியல் செய்கிறார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பாஜவுடன் கூட்டணி இல்லை என்று பழனிசாமி போடும் நாடகத்தை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேற்று பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட அன்பின் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா 2023ல் கலந்து கொண்டு பேசியதாவது: அன்பின் கிறித்துவ சகோதர சகோதரிகள் அனைவர்க்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். எந்த மதமும் வேறுபாட்டைப் போதிப்பது இல்லை. அதனால் தான் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடக்கும் இந்தக் கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்கு எல்லா மத நம்பிக்கையாளர்களும் வந்திருக்கிறார்கள். மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பால சுவாமிகள், முன்னாள் நீதியரசர் என்.பாஷா என்று நாம் எல்லோரும் ஒற்றுமையாக சகோதரர்களாக இருக்கிறோம்.

இந்த ஒற்றுமை உருவாக இன்றைக்கு நாம் கூடியிருக்கிறோம். ஆனால், இந்த ஒற்றுமை உருவாவதைச் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை, அரசியல் லாபங்களுக்காக மதத்தை பயன்படுத்துபவர்களால் மத ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்த ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தப் பாடுபடும் திமுகவையும் அந்த வகுப்புவாத சக்திகளுக்குப் பிடிக்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் எல்லாப் பிரிவு மக்களும் அமைதியாக நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியாய்த் தவிக்கிறது.ஆனால் உண்மை என்னவென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த கூட்டத்தால் இந்த மண்ணில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது.

உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடு என்பது தான் பகிர்தல். இதையெல்லாம் தான் கிறிஸ்தவம் சொல்கிறது. மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்று அறிவித்தோம். 98% கொடுத்துவிட்டோம். மீண்டும் 5 லட்சம் பேர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையும் விரைவில் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும். இடையில் தென்மாவட்டங்களிலும் மழை வெள்ளம் வந்தது. அந்த மக்களுக்கும் இழப்பீடு அறிவித்திருக்கிறேன். அவர்களுக்கும் விரைவில் கொடுக்கப் போகிறோம். இந்த மாதிரி நேரத்திலும் மலிவான அரசியல் செய்ய முன்னால் வந்து விடுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் அதிமுக தான் என்று பேசி இருக்கிறார்.

சிறுபான்மை மக்கள் மேல் அவருக்கு திடீர் என்று பாசம் பொங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் என்று எல்லா சட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர் பழனிசாமி. கூட்டணி தர்மத்திற்காக ஆதரிக்க வேண்டியதாக இருந்தது என்று சப்பைக்கட்டு கட்டினார். இப்போது தான் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று ஒரு கபட நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறாரே. பாஜவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? இல்லையே. இவரின் நாடகத்தை எல்லாம் பார்த்து மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள். இந்தியா கூட்டணி தான் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய அளவில் ஆட்சியை அமைக்கும். இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைய நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post பாஜவுடன் கூட்டணி இல்லை என்று பழனிசாமி போடும் நாடகத்தை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்: பேரிடர் காலத்தில் அரசுக்கு உதவாமல் அரசியல் செய்கிறார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Palaniswami ,BJP ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,CM ,Stalin ,
× RELATED வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல்...