×

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை சொர்க்க வாசலில் பக்தர்களுக்கு அனுமதி: டோக்கனுக்கு நள்ளிரவிலும் பக்தர்கள் அலைமோதல்

திருமலை: திருப்பதியில் ஜனவரி 1ம்தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் நான்கு மாட வீதியில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். தொடர்ந்து சுவாமி தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் ஜனவரி 1ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதையொட்டி ஏற்கனவே ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனத்திற்காக ஒரு நாளைக்கு 43 ஆயிரம் டோக்கன்கள் என 10 நாட்களுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச சர்வ தரிசன டோக்கன்கள் நேற்று மதியம் 2 மணி முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் இந்த டோக்கன்களை பெற நேற்று முன்தினம் மாலை முதலே ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு வர தொடங்கினர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணி முதல் இலவச டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.

10 நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து தரிசன டோக்கன் வழங்கப்படுவதால் நேற்றுமுன்தினம் இரவு 27ம் தேதி வரையிலான டோக்கன்களை பக்தர்கள் வாங்கி சென்றனர். பக்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக திருமலைக்கு வர வேண்டும். தரிசன டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இருப்பினும் திருமலைக்கு அனுமதிக்கப்படும் கோயில் வெளியே கோபுர தரிசனம், மொட்டையடிப்பது, திருமலையில் வராக சுவாமி உள்ளிட்ட இதர சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை சொர்க்க வாசலில் பக்தர்களுக்கு அனுமதி: டோக்கனுக்கு நள்ளிரவிலும் பக்தர்கள் அலைமோதல் appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi ,Tirupati ,Heaven's Gate ,Tirumala ,Heaven Gate ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!