×

ஐரோப்பிய கிறிஸ்துமஸ் மரம் சென்னையில்!

நன்றி குங்குமம் தோழி

கிறிஸ்துமஸ் பண்டிகையின் அடையாளம், வீட்டு வாசலில் வண்ண விளக்குடன் தொங்கப்படும் ஸ்டார் லைட் மற்றும் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம். இவை அனைத்தும் அப்படியே ரெடிமேடாக மார்க்கெட்டில் அனைத்து ஃபேன்சி கடைகளிலும் கிடைக்கிறது. அவை எல்லாம் கிறிஸ்துமஸ் காலம் போது மட்டும்தான் விற்பனையில் இருக்கும். ஆனால் சென்னை அடையாரில் உள்ள சான்டா ஸ்டோர் என்ற இடத்தில் வருடத்தில் 365 நாட்களுமே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான அனைத்து அலங்காரப் பொருட்களும் கிடைக்கின்றன. இதன் உரிமையாளர் சோஃபியா தன் வீட்டில் உயர்ரக கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வைக்க விருப்பப்பட்டு, அது கிடைக்காத காரணத்தினால், அதற்காகவே உயர் ரக கிறிஸ்துமஸ் பொருட்களுக்கான இந்தக் கடையினை துவங்கியுள்ளார்.

‘‘நான் அடிப்படையில் சாஃப்ட்வேர் துறையை சேர்ந்தவள். என் வேலை காரணமாக நான் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. அங்குதான் நான் இது போன்ற கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை பார்த்தேன். அந்த மரம் ரெடிமேட் என்றாலும், பார்க்கும் போது அப்படியே உண்மையான கிறிஸ்துமஸ் மரம் போல் இருப்பதை உணர்ந்தேன். அதன் இலைகள் எல்லாம் பார்க்க மிகவும் அழகாகவும் சரியான முறையில் வடிவமைக்கப்பட்டும் இருந்தது. நான் சென்னை வந்த பிறகு அதே போன்ற மரம் ஒன்றை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தேடினேன். ஆனால் நாங்க இங்கு பார்த்தது எல்லாம் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையில் உள்ள மரங்கள்தான்.

அதனை பார்க்கும் போதே எனக்கு அதன் தரத்தில் நிறைய வித்தியாசங்கள் இருப்பது தெரிய வந்தது. இங்கு பல கடைகளில் நான் அதே போன்று மரங்களை தேடிப் பார்த்தேன். ஆனால் எங்கும் நாங்க தேடிய அந்த தரத்தில் மரம் கிடைக்கவில்லை. அப்போது தான் இதற்காகவே ஏன் பிரத்யேகமான கடை ஒன்றை ஆரம்பிக்கக் கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. உடனே அதற்கான தேடலில் ஈடுபட ஆரம்பிச்சேன். அந்தத் தேடலில் உருவானதுதான் சான்டா ஸ்டோர்.

இந்தக் கடை ஆரம்பிச்சு 15 வருஷமாகிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அனைத்து பொருட்களும் கிடைக்கும். கிறிஸ்துமஸ் மரம் முதல் அதனைஅலங்கரிக்கும் பொருட்கள், மேரி மாதா பிரசவிக்கும் மாட்டுத் தொழுவ பொம்மைகள், சான்டா கிளாஸ் உடைகள், ரெயின் டீர் பொம்மைகள், விளக்கு அலங்காரப் பொருட்கள் என அனைத்தும் இங்கு கிடைக்கும். சொல்லப்போனால், கிறிஸ்துமஸ் சார்ந்த பொருட்கள் மட்டும்தான் இங்கு இருக்கும். அதற்காக சென்னையில் இயங்கும் ஒரே பிரத்யேக கடை என்று சொல்லலாம்’’ என்றவர் இதற்கான பொருட்களை சீனாவில் இருந்து இம்போர்ட் செய்து வருகிறார்.

‘‘பொதுவாக சீன பொருட்கள் என்றால் தரத்தில் குறைந்தது என்ற எண்ணம்தான் எல்லோருடைய மனதிலும் இருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து உயர் ரக போன்கள் எல்லாம் அங்குதான் தயாரிக்கப்படுகிறது. அங்கு ஒவ்ெவாரு தரத்திற்கு ஏற்ப பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்பவும் அவர்கள் கேட்கும் தரத்திற்கு ஏற்ப பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த கிறிஸ்துமஸ் மரங்களையே எடுத்துக் கொள்வோம்.

அதிலேயே பல ரக மரங்கள் அங்கு தயாரிக்கப்படுகிறது. அதாவது பல உயர் ரக மரங்கள் எல்லாம் ஐரோப்பியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தயாரிக்கின்றனர். அதிலேயே கொஞ்சம் தரம் குறைந்த மரங்களும் அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. உயர் ரக மரங்கள் எல்லாம் விலை அதிகம். அதே சமயம் அவை நீடித்து உழைக்கும். மேலும் அதன் இலைகள் எல்லாம் அடர்த்தியாக இருக்கும். இதனை முறையாக பராமரித்து வந்தால் 15 வருடங்கள் வரை அப்படியே புதிது போல் இருக்கும். அதே சமயம் தரத்தில் குறைவான மரங்கள் இவ்வளவு நீண்ட காலம் உழைக்காது.

அதன் இலைகளும் குச்சிகுச்சியாக இருக்கும். இது போன்ற மரங்கள் இங்கு சென்னையில் ஃபேன்சி ஸ்டோர் கடைகளில் கூட கிடைக்கும்.கிறிஸ்துமஸ் மரங்களிலேயே இவ்வளவு வித்தியாசம் இருப்பதை நான் புரிந்து கொள்ளவே எனக்கு சில காலங்கள் ஆனது. அதற்காக நான் சீனாவிற்கு பயணம் செய்ய வேண்டி இருந்தது. அங்கு சென்ற போதுதான் அங்கு தயாரிக்கப்படும் இந்த பொருட்களை பார்த்து நான் பிரமித்துப் போனேன். தரத்திற்கு ஏற்ப அங்கு ஒவ்வொரு பொருட்களும் தயாரிக்கப்படுகிறது.

அதற்காகவே அங்கு பெரிய அளவில் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. நான் அங்கு சென்று தரத்தில் மிகவும் உயர் ரக மரங்களை தேர்வு செய்து ஆர்டர் செய்தேன். இங்கு நாம் நேரடியாக பொருட்களை மொத்த விலையில் வாங்குவதால், பல்க் ஆர்டர் தான் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பொருட்களை சப்ளை செய்வார்கள். அதனால் முதலில் ஒரு ஆர்டரை கொடுத்துவிட்டுதான் நான் சென்னைக்கு வந்தேன். குறிப்பாக ஐரோப்பியா நாட்டிற்கு செல்லக்கூடிய கிறிஸ்துமஸ் மரங்களைதான் நான் ஆர்டர் செய்து வந்தேன். அதன் பிறகு இங்கு முதலில் இதனை ஆன்லைனில்தான் விற்பனை செய்தேன்’’ என்றவர் தற்போது சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் இந்த கடையின் கிளைகளை நிர்வகித்து வருகிறார்.

‘‘இந்த மரங்களை நம்மால் இங்கு தயாரிக்க முடியாது. அப்படியே தயாரித்தாலும், அதற்கான மூலப் பொருட்களை நாம் வெளிநாட்டில் இருந்துதான் வாங்கணும். அதன் பிறகு அதை தயாரிக்க வேண்டும் என்றால் அதன் விலை மிகவும் அதிகம். அதனால் இதனை இங்கு தயாரிக்க முடியாது என்பதால் நாங்க இம்போர்ட் செய்ய ஆரம்பித்தோம். வீட்டில் வைக்கவும், பெரிய மால்களில் வைக்க என ஐந்து அடி முதல் 30 அடி உயரத்தில் மரங்கள் உள்ளன. ஆர்டரின் பெயரில் நாங்க வாங்கித் தருவோம். சிலர் வெள்ளை நிறத்தில் கிறிஸ்துமஸ் மரம் வேண்டும்னு கேட்பாங்க. அவங்களுக்கு தனிப்பட்ட முறையில் கஸ்டமைஸ் செய்து தருகிறோம். முதலில் ஆன்லைன் மூலம் நண்பர்கள், உறவினர்கள் என்று வாங்கினார்கள்.

அதன் பிறகு அவர்கள் மூலமாக அவர்களுக்கு தெரிந்தவர்கள் வாங்க முன் வந்தாங்க. B2C என்றுதான் எங்களின் பிசினஸ் முதலில் துவங்கியது, அதன் பிறகு அதனை B2Bயாகவும் மாற்ற நினைத்தோம். அதன் அடிப்படையில் தனிப்பட்ட மார்க்கெட்டிங் குழு அமைத்து, கார்ப்பரேட் நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் மால்களில் எங்களின் மரங்களை சப்ளை செய்ய ஆரம்பித்தோம். சிலர் சான்டா கிளாஸ் அல்லது ரெயின்டீர் வண்டியும் உடன் கேட்பார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதனையும் செய்து தருகிறோம். சென்னையில் உள்ள முக்கிய மால்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பல பிரபலங்களின் இல்லங்களில் எங்களின் மரங்கள்தான் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் போதும் அலங்கரித்து வருகின்றன’’ என்றவர் 365 நாட்களும் இவர்களுக்கு பிசினஸ் இருப்பதாக தெரிவித்தார்.

‘‘பொதுவாக கிறிஸ்துமஸ் ஒரு வாரம்தான் நட்சத்திரங்கள் வீட்டின் முன் அலங்கரிக்கப்படும். அதே போல் வீட்டிலும் கிறிஸ்துமஸ் மரங்களை வைப்பது வழக்கம். ஆனால் அதற்கான வேலை எங்களுக்கு வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பித்துவிடும். ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் எங்களிடம் தான் பொருட்கள் வாங்கினாலும், ஒவ்வொரு வருடமும் புதுப்புது ஆர்டர்கள் அமைக்க வேண்டும், அதே சமயம் பழைய வாடிக்கையாளர்களையும் புதுப்பிக்க வேண்டும். மேலும் அனைத்தும் இம்போர்ட் செய்யப்படுவதால், நாங்க முன்கூட்டியே அதற்கான ஆர்டர்களை தயாரிக்க வேண்டும். அடுத்து அவை எங்களுக்கு சீனாவில் இருந்து வர வேண்டும்.

இங்கு வந்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு அதனை நாங்க பேக்கிங் செய்து அனுப்ப வேண்டும். அதற்கே 15 நாட்களாகும் என்பதால் நாங்க வருட கடைசியில் நடக்க இருக்கும் வேலைக்காக ஒவ்வொரு வருடம் துவங்கும் போதே ஆரம்பித்துவிடுவோம். இவை அனைத்தும் டிஸ்மான்டல் செய்யப்பட்டு மீண்டும் பொருத்திக் கொள்ளும்படி இருப்பதால், அதனை சரியாக மடித்து நாங்க கொடுத்திருக்கும் கவர்களில் பராமரித்து வந்தாலே போதும். மேலும் எங்களின் பொருட்களை எங்க இணையத்தில் பெறலாம் அல்லது எங்களின் கடைக்கு ேநரடியாக வந்து பெற்றுக் கொள்ளலாம். இதனை மற்ற ஷாப்பிங் தளங்களில் பெற முடியாது’’ என்றார் சோஃபியா.

தொகுப்பு: ரிதி

The post ஐரோப்பிய கிறிஸ்துமஸ் மரம் சென்னையில்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Christmas ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...