×

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

வெற்றிக்கொரு வித்து

ஒரு விளையாட்டில் வெற்றி என்பதைத் தீர்மானிப்பது எது? பல்வேறு நுட்பங்கள், கணக்குகள் இருந்தாலும், தோற்றுவிட்ட அணியைவிட வென்ற அணியிடம் இருந்த ஒரு துளி நிறைவு எது? விளையாட்டில் மட்டுமல்ல, நம் அன்றாடத்திலும் அந்த ஒரு துளியே நம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது.

கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு இறுதிப் போட்டியுமே, ஒரு உன்னத அனுபவமே. உதாரணமாக, 2011ல் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியர்களுக்கு அலாதியான அனுபவத்தைத் தந்த ஒன்று. அதில் இலங்கை அணி இரு நூற்று எழுபத்தினான்கு ரன்கள் எடுத்து இரு நூற்று எழுபத்தைந்து ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்திருந்தது. முதல் ஓவரிலேயே ஷேவாக் மாதிரியான நம்பிக்கை நட்சத்திரங்கள் விக்கெட் இழக்க, மொத்த இந்திய அணியும் தடுமாறிக்கொண்டிருக்கும். ஒருவழியாக கடைசி பத்து ஓவர்களில் இந்தியாவின் கை ஓங்கிவிடும்.

அதிலும் மஹேந்திரசிங் தோனி வந்தபின் ஆட்டத்தின் போக்கும், வெற்றியும் நிர்ணயிக்கப்பட்டு, கடைசி இரண்டாவது ஓவரில், தோனியின் பிரத்யேகமான ஒரு சிக்ஸரால் இந்திய அணி வெற்றி பெறும்.இதில் என்ன நிகழ்ந்தது? இலங்கை அணி வலுவான நிலையில் இருந்த போதும் எது பிழைத்தது? தோனி அந்த கடைசி ஓவரில் எதனால் உந்தப்பட்டு அப்படி ஒரு சிக்ஸரை அடித்தார்?
இது போன்ற ‘வெற்றி’ எனும் நிலையின் வித்தாக, காரணியாக மனிதரில் இருப்பது எது?

அந்த நிலையை ‘ரஜோ குணம்’ என்கிறது மரபு. வெற்றி பெற்ற மனிதர்கள் மட்டுமல்ல நம் அனைவருள்ளும் இருப்பதும், நம் வாழ்வை இன்று நடத்திக்கொண்டிருப்பதற்கு காரணமும், நாம் இன்று அடைந்திருக்கும் செல்வம், பெயர், குடும்பம், சமூகத்தில் ஒரு இடம் என அனைத்துக்கும் பின்னால் இருந்து நம்மை இயக்குவது அது.இங்கே நாம் வெல்வதற்கும் மோசமான ஒரு நிலையிலிருந்து எழுவதற்கும், இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் வாய்ப்பு, ரஜோ குணம்.

தமோ குணம் மிகும் பொழுதும், செயலின்மை எனும் நிலையில் தேங்கிவிடும் பொழுதும் நேரடியாக ஒருவர் அமைதியான, சாந்தமான, தெய்வீக நிலை பற்றி எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. செயலின்மையும் பயமும் பதற்றமும் கொண்ட ஒருவர் தியானிக்க முடியாது என்பதே உண்மை. முதலில் செயலின்மையில் இருந்து செயலுக்குத் தன்னை ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

அப்படிச் செயல் நோக்கிச் செல்வதை செயலில் நம்மை கரைத்துக்கொள்வதை, அதிலிருந்து நாம் மேலும் மேலுமென உயர்வதை ரஜோ குணம் மட்டுமே நமக்கு வழங்க முடியும்.
எந்த குணமும் தனித்து இயங்க முடியாது என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். இங்கே ரஜோ குணத்துடன் செயலின்மை அல்லது அதீத செயல்பாடு எனும் தாமச குணம் கலக்கும் பொழுது, நேர்மறைப் பண்புகள் கொண்ட, வெற்றி பெறும் குணமான ரஜோ குணம், தன்முனைப்பும், அகங்காரமும் மிக்க அதிகாரத்தை அடைய விரும்புகிறது அதன் விளைவாக சர்வாதிகாரம் எனும் நிலைக்குத் தன்னை தயார் செய்கிறது. இப்படிப் படிப்படியாக வளரும் ரஜோ குணம் இறுதியில் ஏகப்பட்ட சேதாரங்களை ஏற்படுத்தி, சில அழிவுகளைச் செய்து பின்னர் அரைகுறையாகவோ, முழுமையாகவோ வெற்றியடைகிறது.

இப்படி தன்முனைப்பாலும், அகங்காரத்தாலும் அடைந்த வெற்றி என்பது எப்பொழுதும் கைநழுவிச் சென்றுவிடுமோ எனும் பதட்டத்துடன் மட்டுமே இருக்கிறது. ஆகவே, கிடைத்தவற்றை மேலும் இறுக்கப்பற்றிக்கொள்கிறது, அதன் விளைவாக மறுதரப்பை அடக்கி வைக்கிறது. வேதனைப்பட வைக்கிறது.இது ஏதோ ஒரு நாடு, விளையாட்டு, நிறுவனம், அமைப்பு என்கிற பெரிய அளவில் மட்டும் நடப்பதில்லை. மிகச்சாதாரணமாக நமது அன்றாடத்தில், குடும்பங்களில், உறவுகளில்கூட நடப்பதுதான்.

நம் ரஜோ குணம் சரியாக இயங்கும் காலகட்டத்தில் மட்டுமே, நாம் சரியான திட்டமிடுதலையும், அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அபரிமிதமான ஆற்றலையும் பெறுகிறோம். வாழ்வின் முதல் இரண்டு பகுதிகளான, குழந்தை பருவம் முதல் நடுவயது வரை ரஜோ குணத்தால் நாம் வழிநடத்தப்படுகிறோம். ஆகவே, உலக மக்களில் பெரும் பகுதியினர் இந்தக் காலகட்டத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், இலட்சியங்களுடனும் ,அவற்றை அடைவதற்கான செயல்களுடனும் இருப்பர். அப்படி அடைந்தவைதான் நாம் இங்கே காணும் மக்களின் செல்வமும் வாழ்க்கைத்தர உயர்வும். ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையைவிட மேலும் மேலும் வெற்றிகளை செல்வங்களை, சுகங்களைக் குவிக்கிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, அப்படி அடைந்த வெற்றிகளின் பின்னர் சிறு சறுக்கல்கள், தோல்விகள், வந்தால்கூட அவற்றை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனோடு போராடவும் வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்கிற ஆசையும் இணைந்து, தன்முனைப்பை கிளறிவிடுகிறது. தன்முனைப்பு கிளர்ந்தவுடன் மீதியிருக்கும் வாழ் நாளெல்லாம் அடைந்ததைத் தக்கவைக்கவே போராட மக்கள் துணிகின்றனர்.

இந்த இடத்தில்தான், மேற்கொண்டு செய்ய வேண்டியதை முன்மொழிகிறது நமது மரபு. ரஜோ குணம் மிகுந்து அனைத்தையும் வென்றெடுத்தாலும், ஒவ்வொரு மனிதனும் நடுவயதை கடக்கையில், ஒரு நிறைவின்மையை, போதாமையை உணர்வான். இது இயற்கை. அப்படி உணர்பவனுக்கு சலிப்பும் வெறுப்பும் மிஞ்சும். ,அப்போது சத்வ குணம் அவனை மீட்டெடுக்கும் என்கிறது நம் மரபு.

தன்முனைப்பை அடுத்தவர் நலனுக்கான ஒரு செயலாக மாற்றிக்கொள்ள, சுயநலத்தைப் பொது நலமாக மாற்றிக்கொள்ள, யோகமரபும் கர்ம யோகம் போன்ற மிக நீண்ட பாடத்திட்டத்தை வைத்திருக்கிறது. அதன்படி, இருளும் எதிர்மறை பண்பும் மிகுந்த தமோ குணத்திலிருந்து ரஜோ குணம் மேலெழ ஒருவர் பயிற்சிகளின் மூலம் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதே வேளையில் ரஜோ குணத்தில் தேங்கி, தன்முனைப்பும், அகங்காரமும் கொண்டு, சுயநலத்துடன், தன் வாழ்க்கை, தன் குடும்பம் என வாழ்வை சுருக்கிக்கொள்ளாமல், பெற்ற ஆற்றலை, வெற்றியை, செல்வத்தை, ஆரோக்யத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு வாழ்வியல் முறை.

தனக்கென எதுவும் பலன் கருதாமல், தன் ஆற்றலை, நேரத்தை, அறிவை பிறர் பொருட்டு உகந்தளித்தல், சான்றோருடன் பயணித்தல், தீவிரமான பயிற்சிகளின் வழியாக, அபரிமிதமான ரஜோ குணத்தை அளவான ரஜோகுணமென மாற்றிக்கொள்ளுதல் அவசியம். ஏனெனில், ரஜோ குணத்தின் மேன்மைகளுள் முதன்மையானது உள்ளும் புறமும் மகிழ்ச்சியாக இருத்தல். ஆகவே, சுயநலம் எனும் நிலையிலிருந்து தன்னிறைவு எனும் நிலைக்கு உயருதலின் பொருட்டு யோக மரபு பல படிநிலைகளாகப் பயிற்சிகளை வடிவமைத்து வைத்திருக்கிறது.

ரஜோ குணமே சாதனா செய்வதற்கான அடிப்படை தகுதி, சாதனாவில் நீடிக்கும் ஒருவரே, அதன் அனுபவமான நீடித்த மகிழ்ச்சி எனும் நிலையை அடைவார். அப்படி அகம் மகிழும் ஒருவர் தன்னை சுற்றி இரவும் பகலும் மகிழ்ச்சியைப் பரப்பிக்கொண்டே இருப்பார். அந்த வகையில், ரஜோ குணத்திற்கான ஆசனங்கள் முதல் பிராணாயாமம், தியானம் என ஒரு பாடத்திட்டம் இங்குள்ளது, ஏற்கெனவே ரஜோ குணத்தில் இருக்கும் ஒருவர், தவறான, வேகமான பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர், அக்குணத்தால் மேலும் பாதிப்புக்கே உள்ளாவார். மேலும் பதட்டத்தை அடைவார். அவருக்கே நல்லாசிரியரின் உதவி தேவை.

அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்

இந்தப் பகுதியில் நாம் அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம் எனும் பயிற்சியைப் பார்க்கலாம். வயிற்றுப் பகுதி தசைகளை வலுவடைய செய்யவும், ஜீரண மண்டலம் முழுவதையும் சீராக இயங்க வைக்கவும், முதுகெலும்பு மற்றும் அங்கிருக்கும் நரம்புமண்டலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வாகவும் இதை ஒருவர் பயிலலாம்.

கால்களை நீட்டி அமர்ந்து ஒருகாலை மடித்து உடலை ஒட்டி வைத்து மறுகாலை தொடையின் பக்கவாட்டில் வைத்து பின்புறமாகத் திரும்பி சுவரைப் பார்க்கவும். இறுதி நிலையில் மூன்று மூச்சுகள் வரை இருந்துவிட்டு நேராக அமரவும். இதை போல இரண்டு பக்கமும் செய்யவேண்டும், ஐந்து சுற்றுகள் வரை செய்யலாம்.

The post ங போல் வளை… யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Selandararajan.ji ,
× RELATED தியாகிகளா அம்மாக்கள்!