×

சென்னையில் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: டி.டி.வி தினகரன்

சென்னை: கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக நேரில் சென்றபோதுதான் நாம் எண்ணியதை விட பல மடங்கு பாதிப்பு கடுமையாக இருப்பதை அறிய முடிந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நகரம், கிராமம் என எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து பகுதிகளையும் உருக்குலையச் செய்திருக்கும் வெள்ள நீரில், சிறுகச் சிறுகச் சேமித்து கட்டப்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்படும் போது பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை அவர்களை நேரில் சந்திக்கும் போது தெரிய வந்தது. விளைநிலங்கள் மழைநீரிலும், விவசாயிகள் கண்ணீரிலும் மிதக்கும் சூழலை பார்க்கும் போது ஊருக்கே உணவளிக்கும் உழவனையும் விளைநிலங்களையும் பாதுகாக்க தவறிய அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு பாதிக்கப்பட்ட மக்களை கோபமடையச் செய்திருப்பதைப் பார்க்க முடிந்தது என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

அடிப்படை அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், பால் மற்றும் ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பொதுமக்களைப் பார்க்கும் போது, அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதே இத்தருணத்தில் முதன்மையான பணி, அந்த வகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை கழகத்தினருடன் சேர்ந்து மேலும் சில நாட்கள் தங்கியிருந்து வழங்குவதென திடமான முடிவை எடுத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நாம் திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு நாள் நிகழ்ச்சிகள் உட்பட நான் கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு மேலும் சில நாட்கள் கழகத்தினருடன் இங்கேயே தங்கியிருந்து இம்மக்களுக்கு துணையாய் இருப்பதே இந்நேரத்தில் அவசியம் என கருதுகிறேன். அதே நேரத்தில் நம் புரட்சித்தலைவர் 36ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அந்தந்தப் பகுதிகளில் புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலைக்கு நினைவு அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்காக கழகம் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டிய தேவை அதிகரித்திருப்பதால் கழகத்தினர் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

The post சென்னையில் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: டி.டி.வி தினகரன் appeared first on Dinakaran.

Tags : Chennai ,DTV Dhinakaran ,Tirunelveli ,Tuticorin ,DTV Dinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...