×

இடிந்து விழும் அபாயம் பயமுறுத்தும் பயணிகள் நிழற்குடை: சீரமைக்க மக்கள் கோரிக்கை

 

சிவகாசி, டிச.22: சிவகாசி அருகே பழுதாகி எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்குடை, அங்கு வரும் பயணிகளை பயமுறுத்தி வருகிறது. நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். சிவகாசி அருகே செங்கமலபட்டி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பணிகள் காரணமாக செங்கமலபட்டி, ஆலமரத்துபட்டி கிராம மக்கள் அரசு பேருந்துகளில் நாள்தோறும் சென்று வருகின்றனர்.

இப்பகுதியில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. பின்னர் அந்த நிழற்குடை முறையான பராமரிப்பின்றி, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மேற்கூரை உள்பட சுற்றுச்சுவர்களில் ஆங்காங்கே கட்டிட விரிசல்களுடன் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு பேருந்து ஏறவரும் பயணிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.

இதை அறியாமல் ஏராளமான முதியவர்கள், அங்கு படுத்து ஓய்வெடுத்து வருகின்றனர். மேலும், மழை காலத்தின்போது பேருந்துக்காக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் நிழற்குடைக்குள் அச்சத்துடனேயே காத்திருக்கின்றனர். எனவே, இந்த சேதமான பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post இடிந்து விழும் அபாயம் பயமுறுத்தும் பயணிகள் நிழற்குடை: சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Nilakudai ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி