×

பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்; கேரள கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம்


திருவனந்தபுரம்: பொறுப்பில்லாமலும், புரோட்டக்காலை மீறியும் செயல்படும் கவர்னர் ஆரிப் முகம்மது கானை திரும்ப அழைக்க வேண்டும் என்று கூறி ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும், அரசுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களை பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்தார். தொடர்ந்து கவர்னருக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்பிறகு அவர் சில மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் கேரள பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினர் பதவிக்கு ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்புக்கு தொடர்புடையவர்களை நியமிப்பதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ, கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வந்த கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கு கண்டனம் தெரிவித்து பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்எப்ஐ அமைப்பினர் பேனர்கள் கட்டினர். அந்த பேனர்களை போலீசை வைத்து கவர்னர் அவிழ்த்தார். ஆனால் அதன் பிறகு மீண்டும் எஸ்எப்ஐ அமைப்பினர் பேனர்களை கட்டி போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் கோழிக்கோடு நகரில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் திடீரென காரிலிருந்து இறங்கி ரோட்டில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணூரில் நடந்த பல அரசியல் கொலைகளில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக ஆரிப் முகம்மது கான் கூறியதும் கேரள அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பது: கவர்னர் ஆரிப் முகம்மது கான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறார். அவர் அரசியல் சாசனப் பணிகளை முறையாக செய்வதில்லை.

அடிக்கடி புரோட்டோக்காலை மீறுவதால் அரசுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே கேரளாவில் ஆட்சிப் பணிகள் சுமூகமாக நடைபெற கவர்னர் ஆரிப் முகம்மது கானை கவர்னர் பதவியிலிருந்து திரும்ப அழைக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்; கேரள கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : KERALA ,GOVERNOR ,MINISTER ,BINARAI VIJAYAN ,PRESIDENT ,THIRUVANANTHAPURAM ,ARIB MOHAMMED KHAN ,Chief Minister ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...