×

அழிந்துவரும் கழுகுகளை பாதுகாக்க பாதுகாப்பு மையங்கள் அமைக்க கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், வன விலங்குகள் ஆர்வலருமான சூர்யகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 1980ம் ஆண்டில் இந்தியாவில் நான்கு கோடி கழுகுகள் இருந்த நிலையில் தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே உள்ளன. கழுகுகள் இயற்கையின் சுகாதார பணியாளர்கள். அதனை பாதுகாக்காவிட்டால் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை பாதிக்கப்படும். சமீபகாலமாக கழுகுகள் அதன் கூடுகளை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கழுகுகள் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு நிம்முஸ்லைட், புளுநிக்சின், கார்புரோபென் ஆகிய மருந்துகளை சட்டவிரோதமாக செலுத்துகிறார்கள்.

அவ்வாறு மருந்து செலுத்தப்பட்ட விலங்குகள் இறந்தபிறகு, அவற்றின் மாமிசத்தை சாப்பிடும் கழுகுகள் அதிகளவில் உயிரிழக்கின்றன. எனவே, இந்த நான்கு மாவட்டங்களிலும் மூன்று மருந்துகளையும் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கழுகுகளை பாதுகாக்கும் மையங்கள் அமைக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பி.சொக்கலிங்கம் ஆஜராகி, கழுகுகள் இனம் அழிந்துவருவதற்கு இந்த மருந்துகள் காரணம் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post அழிந்துவரும் கழுகுகளை பாதுகாக்க பாதுகாப்பு மையங்கள் அமைக்க கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Suryakumar ,Chennai High Court ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச்...