×

‘நீர்வழிப் படூஉம்’ நாவல் தேர்வு; எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது

சென்னை: ஒன்றிய அரசு சார்பில் இந்த ஆண்டு நீர்வழிப் படூஉம் நாவலை எழுதிய ஈரோடு மாவட்ட எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் சார்பில் ஆண்டுதோறும் எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மொழியிலும் அவர்கள் எழுதிய சிறந்த புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படுகிறது. தற்போது தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டையை சேர்ந்த தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” என்ற நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு சாகித்ய அகாடமி விருது அறிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியராக தம் பணியை தொடங்கி அவர் பின்னர் முழுநேர எழுத்தாளராக கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு கதை, சிறுகதை, நாவல்களை எழுதி வருகிறார்.

மக்களின் வாழ்வியலை தன் எதார்த்தமான நடையில், எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதும் ஆற்றல் படைத்தவர். ஒவ்வொரு மொழியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சால்வை, செப்புப் பட்டயம் அடங்கிய சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும். 2024ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்டவரான எழுத்தாளர் தேவிபாரதி கடந்த 40 ஆண்டு காலமாக எளிய மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு நாவல் எழுதி வருகிறார். அவரது மூன்றாவது நாவல் தான் ‘நீர்வழிப் படூஉம்’. இந்த நாவலுக்கு தற்போது தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

பாராட்டு: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதிக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

The post ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் தேர்வு; எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது appeared first on Dinakaran.

Tags : Devibharathi ,Chennai ,Erode district ,Devibharathiku Sahitya ,Union Government ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது