×

மசாலாக்களின் மறுபக்கம்… பெருங்காயம்!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

பெருங்காயத்தின் இயற்பியல் பெயர் ஃபெரு லா அசஃபோடிடா உயிரியல் வகைப்பாட்டில் அம்பலிஃபெராயி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. 4-5 ஆண்டுகள் வயதுடைய பெருங்காயத் தாவரங்களின் வேரும் தண்டும் சேரும் இடம் வெட்டப்பட்டு, அதிலிருந்து வடியும் பிசின்போன்ற பொருளே பக்குவப்படுத்தப்பட்டு, பெருங்காயமாகப் பயன்படுத்தப்படுகிறது. பெர்சிய நாட்டில் “கடவுளின் உணவு” என்று அழைக்கப்படும் பெருங்காயம், பிரெஞ்சுக்காரர்களால், பிசாசு அல்லது ‘சாத்தானின் மலம்’; என்று அழைக்கப்படுகிறது. காரணம், அவர்களுக்கு பெருங்காயத்தின் சல்பர் மணம் அறவே பிடிக்காது என்பதுதான்.

பெருங்காயத்தை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு இந்தியா என்றாலும், அவை வளருவதற்கான சரியான தட்பவெப்பநிலை இங்கு இல்லாததால், வெகுகாலமாகப் பெருங்காயச் செடிகள் நம் நாட்டில் பயிரிடப்படாமல் இருந்தன. பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பெருங்காயச் செடிகள் விளைவிக்கப்படுகின்றன. இருப்பினும், 90% பெருங்காயம் ஆப்கானிஸ்தான், ஈரான், துர்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. பால் பெருங்காயம் மற்றும் சிவப்புப் பெருங்காயம் என்ற இருவகைகளில், பால் பெருங்காயமே அதிக அளவில் பயன்படுத்தப்படுவதுடன், மருத்துவக் குணங்களும் நிறைந்தது.

பெருங்காயத்தின் மருத்துவப் பயன்கள்

வாயுப்பிடிப்பு அல்லது வேறு செரிமானக் கோளாறு என்றாலே, கண்களும் கைகளும் பெருங்காயத்தைத்தான் தேடிச்செல்லும் என்பது தென்னிந்திய மக்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த அளவிற்கு வீட்டு வைத்திய முறைகளில் பெருங்காயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆஸ்த்துமா, சுவாசக்கோளாறு, நெஞ்சுச்சளி, கக்குவான் போன்றவற்றை சரி செய்வதற்கு மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றெரிச்சல், வயிறு உப்புசம், அபானவாயுத்தொல்லை போன்றவற்றிற்கு உடனடி நிவாரணமாகப் பயன்படுத்தப்படும் பெருங்காயம், வாயுப்பிடிப்பு, தசைப்பிடிப்பு போன்றவற்றையும் சரி செய்கிறது.

இவை மட்டுமல்லாமல், பல்லில் ரத்தக்கசிவு, பல்வலி, பல்சொத்தை போன்றவற்றிற்கு மருந்தாகவும், பற்பொடியில் கலந்தும் பயன்படுத்தப்படுகிறது.கணையத்தில் செல்களைத் தூண்டி இன்சுலின் சுரப்பிற்கு உதவிசெய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளைப்படுதல், கருக்கலைப்பால் ஏற்படும் வலி, வலியுடன் கூடிய மாதவிடாய் போன்றவற்றை சரி செய்வதற்கும் பெருங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள். கால் ஆணியைக் குணப்படுத்துவதற்கும் பெருங்காயம் பயன்படுகிறது. இவையெல்லாம் தவிர, பெருங்காயமானது, பன்றிக்காய்ச்சலுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்
பட்டிருக்கிறது.

பெருங்காயத்திலுள்ள வேதிப்பொருட்கள்

பெரும்பான்மையாக கார்போஹைட்ரேட்டைக் (68%) கொண்டுள்ள பெருங்காயத்தின் வேதிப்பொருட்கள் மூன்று வகைப்படும். அவை மிட் ரெசின் (40 – 64%) கம் (25%) எசென்சியல் ஆயில் (10-17%). மேலும் மிக முக்கியமான மூன்று சல்பர் பொருட்களாக (R)-2-பியூடைல்-1-புரோனைல் டைசல்பைடு, 1(1-மெத்தில் தயோ புரோபைல்)1-புரோபினைல் டை மற்றும் 2-பியுடைல்-3- வாழை மெத்தில் தயோ அலைல் போன்றவை இருக்கின்றன. இவற்றுடன் சேர்ந்து, அம்பலிப்ரெனின், கவுமரின்,கவுமரின் எஸ்டர்ஸ், செஸ்குய்டர்பென்ஸ், மோனோடெர்பன்ஸ்,பைடோஈஸ்
ட்ரொஜென் போன்ற பைடொகெமிகல்ஸ் நுண்பொருட்களும் பெருங்காயத்தில் இருக்கின்றன. பெருங்காயத்தில் இருக்கும் அதிகப்படியான நுண்சத்து கால்சியம்தான். 100 கிராம் பெருங்காயத்தில் சுமார் 690 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.

பெருங்காயத்திலுள்ள நுண்பொருட்கள், செரிமானத்திற்கு உதவும் பான்கிரியாடிக் லிபேஸ் என்னும் நொதி சுரப்பதற்கு வெகுவாக உதவுகிறது என்பதால்தான், செரிமானக் கோளாறுகளுக்கு சிறப்பாக நிவாரணம் அளிக்கிறது. மேலும், இதிலிருக்கும் ஓலியோ கம் ரெசின், அம்பலிப்ரெனின் மற்றும் கவுமாரின் என்னும் பொருட்கள், உடலிலுள்ள மென்மையான தசைகள், சுரப்பிகள், நுரையீரல், கணையம் மற்றும் மூளையில் இருக்கும் மஸ்காரினிக் ரிசப்டர்ஸ் என்னும் ஏற்பி செல்களைத் தூண்டுகின்றன. இந்தத் தூண்டுதல், தசைப்பிடிப்பைப் போக்குவதுடன், சுவாசப்பாதையின் தசைகளை நெகிழ்வடையச் செய்து, சளி, இருமல் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.

பெருங்காயத்தில் கலப்படம்

உணவாக மட்டுமல்லாமல், மருந்தாகவும் பயன்படும் பெருங்காயம் கலப்படத்திற்கு உள்ளாகிறது என்பது வேதனைதான். களிமண், வெள்ளைக்கணிமண், சாக்பீஸ் பவுடர், சோளத் தக்கை, கோதுமைமாவு போன்றவற்றை பெருங்காயத்துடன் கலப்படம் செய்கிறார்கள். எளிதில் தண்ணீரில் கரையாத பெருங்காயம், மைதா, கோதுமை மாவு கலந்து போலியாகத் தயாரிக்கப்படும்போது, நீரில் கரைகிறது. பயன்படுத்தும் பெருங்காயம் உண்மையானதாக இல்லாத நிலையில், அதன் பயனும் கிடைக்காமல் போய்விடுவதுடன், கலப்படம் செய்யப்படும் பொருட்களால் வேறு சில பக்கவிளைவுகளும் உடலில் ஏற்படுவதற்கு வாய்புள்ளது. எனவே தரமான பெருங்காயம்தானா என்று கவனத்துடன் வாங்குவது முக்கியம்.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

மனிதர்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு 250 மி.கி (0.25 கி) அளவில் இரண்டு முறைகள் பெருங்காயம் சாப்பிடுவது பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு தேக்கரண்டி பெருங்காயப்பொடி எடுத்தால், அது 4 கிராம் அளவிற்குச் சமம். இரண்டு விரல்களின் முனையில் பெருங்காயப்பொடியைக் கிள்ளி எடுக்கும்போது அதன் அளவு 0.58 கிராம். அதாவது ஒரு நாளைக்கு ½ கிராம் போதுமானது என்றால், கால் தேக்கரண்டி அளவிற்குப் பெருங்காயம் உணவில் அல்லது மருந்தாகச் சேர்த்துக் கொள்ளலாம். தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், பிரசவித்த பெண்களுக்கு செரிமானம் சரியான நிலையில் இருக்கவும், உடலில் வாயுப்பிடிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும் இரவு உணவு முடித்ததும், தினமும் பெருங்காயம் சாப்பிட வேண்டும் என்ற பழக்கம் உள்ள நிலையில், இந்த அளவையும் கவனத்தில் கொள்ளலாம்.

பெருங்காயம் சாப்பிடும் முறை

உணவு சாப்பிட்ட பிறகுதான் பெருங்காயம் சாப்பிட வேண்டும். அதையும்கூட நேரடியாக அப்படியே விழுங்குவதையும், மென்று சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. காரணம், பலருக்குப் பெருங்காயம் நேரடியாக சாப்பிடும்போது, அதன் காரத்தன்மையும் வீரியமும், உதடுகள் மற்றும் வாயின் உள்பகுதிகளில் தடிப்பையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதற்குப் பதிலாக, வெதுவெதுப்பான நீரில் கரைத்தோ அல்லது பெருங்காயத்தைக் கொதிக்க வைத்து, நீரை வடிகட்டியோ மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இருப்பினும், சாம்பார், குழம்பு, ரசம், பிற தாளிப்புகளில் சேர்த்து உணவாகப் பயன்படுத்துவதுதான் சரியான முறை. அவசர மருத்துவத்திற்கு, மோரில் பெருங்காயத்தைக் கரைத்துக் குடிப்பதும், ஒரு கைப்பிடி சோறு அல்லது வாழைப்பழத்தில் பெருங்காயத்தை வைத்து விழுங்குவதும் நடைமுறையில் இருக்கும் பழக்கம்தான் என்பதிலிருந்து, பெருங்காயத்தை வேறு ஒரு பொருளுடன் சாப்பிடுவதுதான் நலம் என்பதையும் நன்கு அறியலாம்.

யாரெல்லாம் பெருங்காயம் சாப்பிடக்கூடாது?

பெருங்காயத்தினால் கிடைக்கும் பயன்கள் பல இருந்தாலும், அதிக அளவில் சாப்பிடுவதும், சில நோய்நிலைகளில் சாப்பிடுவதும் தவிர்க்கப்பட வேண்டும். எந்த சிறு உபாதை என்றாலும் பெருங்காயத்தைத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், குடல் எரிச்சல்; அதிகமாகும். வாய் மற்றும் உதட்டுப்பகுதி வீக்கமடையும். அதிக அளவுப் பெருங்காயம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளதால், வலிப்புநோய் (Episepsy) உள்ளவர்கள் தவிர்க்கலாம். மீறினால், கை கால்களில் நடுக்கம் ஏற்பட்டு, நோயும் தீவிரமடையும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தம் தொடர்பான நோய்கள் இருக்கும்போது, தாய்ப்பால் புகட்டும் தாய், அதிக பெருங்காயம் தொடர்ச்சியாகச் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. மேலும், பெருங்காயத்தின் வேதிப்பொருட்கள், சிறு குழந்தைகளின் ரத்தத்துடன் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது என்றும், இதனால், உடலிலுள்ள திசுக்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் Methemoglobinemia என்னும் நிலை ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், நடுத்தர வயதினரின் ரத்தத்துடன் இந்த வேதிவினை நிகழ்வதில்லை. எனவேதான், சிறு குழந்தைகளுக்கு அதிக அளவிலோ அல்லது தொடர்ச்சியாகவோ பெருங்காயம் கொடுக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

பெருங்காயம் ரத்தம் உறைதலைத் தடுக்கிறது என்பதால், அளவான பெருங்காயமோ அல்லது அதிக அளவு பெருங்காயமோ, ரத்தம் உறைதலுக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களும், அறுவை சிகிச்சை முடித்தவர்களும் சாப்பிடக்கூடாது. அதுமட்டுமல்லாமல், அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருப்பவர்கள், 2 வாரங்களுக்கு முன்பே பெருங்காயத்தை நிறுத்தி விட வேண்டும். அருமையான மருத்துவக் குணங்களைக் கொண்ட பெருங்காயத்தையும் அளவாகச் சாப்பிடுவதே அனைவருக்கும் நல்லது.

The post மசாலாக்களின் மறுபக்கம்… பெருங்காயம்! appeared first on Dinakaran.

Tags : Kumgum ,Dr. ,Dietitian Vantarkuzali ,
× RELATED சிறுநீரக புற்றுநோய்… வருமுன் காப்போம்!