×

இன்று 2வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு; பதிலடி கொடுக்குமா தென் ஆப்ரிக்கா?

எபேஹா: இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் 2வது ஒருநாள் போட்டி, செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. ஜோகன்னஸ்பர்க், தி வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

அந்த போட்டியில் அர்ஷ்தீப், ஆவேஷ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய தென் ஆப்ரிக்கா வெறும் 116 ரன்னுக்கு சுருண்டது. எளிய இலக்கை துரத்திய இந்தியா 16.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் அரை சதம் விளாசி அசத்தினர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி எபேஹா, செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. இப்போட்டியில் வென்று 2-0 என முன்னிலை பெறுவதுடன் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

அதே சமயம், ஜோகன்னஸ்பர்க் தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் 1-1 என சமநிலை ஏற்படுத்தி தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைக்க மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இந்தியா: ராகுல் (கேப்டன்), அகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், யஜ்வேந்திர சாஹல், ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயாஸ் அய்யர், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அக்சர் படேல், ரஜத் பத்திதார், சாய் சுதர்சன், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர்.

* தென் ஆப்ரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), பார்ட்மேன், பர்கர், ஸோர்சி, ஹெண்ட்ரிக்ஸ், கிளாஸன், மகராஜ், மில்லர், மிஹ்லாலி போங்வானா, முல்டர், பெலுக்வாயோ, ஷம்சி, வாண்டெர் டுஸன், கைல் வெரைன், லிஸாட் வில்லியம்ஸ்.

The post இன்று 2வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு; பதிலடி கொடுக்குமா தென் ஆப்ரிக்கா? appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,Ebeha ,St George's Park ,Dinakaran ,
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...