×

அர்ஷ்தீப் வேகத்தில் சரிந்தது தென் ஆப்ரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இந்தியா

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து கோப்பையை பகிர்ந்துகொண்டது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. தி வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது.

ஹெண்ட்ரிக்ஸ், டோனி டி ஸோர்ஸி இணைந்து தென் ஆப்ரிக்க இன்னிங்சை தொடங்கினர். அர்ஷ்தீப் சிங் – ஆவேஷ் கான் வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய தென் ஆப்ரிக்கா அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. ஹெண்ட்ரிக்ஸ், வாண்டெர் டுஸன் இருவரும் அர்ஷ்தீப் பந்துவீச்சில் டக் அவுட்டாகி சரிவை தொடங்கி வைத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த டோனி ஸோர்ஸி 28 ரன் எடுத்து அர்ஷ்தீப் வேகத்தில் விக்கெட் கீப்பர் ராகுல் வசம் பிடிபட்டார்.

கிளாஸன் 6, கேப்டன் மார்க்ரம் 12, மில்லர் 2 ரன்னில் வெளியேற, ஆவேஷ் கான் வேகத்தில் முல்டர் கோல்டன் டக் அவுட்டானார். தென் ஆப்ரிக்கா 13 ஓவரில் 58 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து பரிதாப நிலையை எட்டியது. மகராஜ் 4, பெலுக்வாயோ 33 ரன் (49 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), பர்கர் 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, தென் ஆப்ரிக்கா 27.3 ஓவரில் 116 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஷம்சி 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் 10 ஓவரில் 37 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஆவேஷ் கான் 8 ஓவரில் 3 மெய்டன் உள்பட 27 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் 1 விக்கெட் எடுத்தார். அடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 16.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ருதுராஜ் 5, ஷ்ரேயாஸ் 52 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினர். சாய் சுதர்சன் 55 ரன் (43 பந்து, 9 பவுண்டரி), திலக் வர்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அர்ஷ்தீப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி எபேஹா, செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நாளை நடக்கிறது.

The post அர்ஷ்தீப் வேகத்தில் சரிந்தது தென் ஆப்ரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Arshdeep ,South Africa ,India ,Johannesburg ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...