×

சூரியன் + புதன் என்ற நிபுணத்துவ யோகம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கு நிபுணத்துவம் என்பதாகும் அல்லது அத்துறையை பற்றிய ஞானம் என்று பொருள். இந்த நிபுணத்துவத்தை முழுமையாக பெற வைப்பது சூரியன் + புதன் என்ற கிரகத்தின் இணைவாகும். தனித்த புதன் அல்லாமல் சூரியனோடு இணைந்த புதன் மிகுந்த நுண்ணறிவை வழங்குகிறது. இதற்கு `நிபுணத்துவ யோகம்’ அல்லது `புதஆதித்ய யோகம்’ என்றும் சொல்லுவர். பல அறிஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இந்த கிரக இணைவு இருப்பது நிபுணத்துவ யோகத்தை குறிக்கிறது.

சூரியன் + புதன் இணைவு

நவகிரகங்களில் தலையாய கிரகமாக இருப்பது சூரியன். அதற்கு நிர்வாகத்திறன் உண்டு. அறிவாக இருப்பது புதன் ஆகும். இந்த நிர்வாகத்திறனும் நுட்பமான அறிவும் இணைந்து இந்த நிபுணத்துவ யோகத்தை தருகிறது. சூரியன் + புதன் என்ற இரு கிரகங்களும் 10 பாகைக்குள் இருக்கும் போது நிபுணத்துவம் ஏற்படுகிறது. சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் இணைந்திருப்பது சிறப்பான நிபுணத்துவத்தை தருகிறது. இந்த ராசிகளில் சூரியன் அல்லது புதன் வலிமையாக இருப்பதால் இந்த நிபுணத்துவம் யோகம் ஏற்படுகின்றது.

சூரியன் + புதன் பலன்கள்

* லக்னத்திற்கு நான்காம் பாவத்தில (4ம்) மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ராசியாக அமைந்திருந்தால் சிறந்த பட்டப்படிப்பையும், புள்ளியியல் மற்றும் ஆடிட்டிங் துறையில் சிறப்பாக அமையும்.

* சிலருக்கு பள்ளி படிப்பு இல்லாமலேயே ஒரு துறையைப் பற்றி சிறந்த ஞானமும் அறிவும் மிகுந்திருக்கும்.

* சூரியன் + புதன் கிரகங்களை வியாழன் பார்வை செய்யும் போது இந்த யோகம் மேலும் வலிமை பெறுகிறது.

* சூரியன் + புதன் இணைவு பெற்று அதில் புதன் வலிமை பெற்றவர்களுக்கு கையெழுத்து அழகாக இருக்கும்.

* இந்த யோகத்தால், இவர்கள் வீட்டில் எண்ணிலடங்கா புத்தகங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதை இந்த கிரகத்தின் இணைவுகளில் அறிந்து கொள்ளலாம். இவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்குவது சிறப்பை தரும்.

* நிபுணத்துவ யோகத்தால், வியாழன் பார்வை செய்து ஏழாம் பாவத்திலோ (7ம்), பதினோராம் பாவத்திலோ (11ம்) சூரியன் + புதன் சேர்க்கை உண்டானால் இவர்களுக்கு ராஜேஷ், ரமேஷ், சுரேஷ், சிவராமகிருஷ்ணன், நடராஜன், ஜானகிராமன் போன்ற பெயர்களுடன் நண்பர்கள் அல்லது நபர்கள் தொடர்பில் இருப்பர்.

* நிபுணத்துவம் யோகம் உள்ளவர்கள் எழுத்துத் துறையிலும் வழக்கு தொடர்பான ஆலோசனை துறையிலும் மற்றும் ஆடிட்டிங் துறையிலும் சிறப்பு பெறுவர்.

* நிபுணத்துவம் யோகம் 11-ம் பாவத்தில் அமர்வது சிறப்பானதாக உள்ளது. வெற்றி ஸ்தானத்தில் இந்த கிரகம் உள்ளதால் வெற்றிக்கான நிபுணத்துவத்தையும் அதற்கான நட்பு வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டே இருப்பர்.

* மிகுந்த தைரியசாலிகளாகவும் ஆள் பலம் மிக்கவர்களாகவும் பொருள் பலம் மிக்கவர்களாகவும் வியாபாரத்தில் நாட்டம் உள்ளவர்களாகவும் இருப்பர்.

* எதிரிகளை எளிதாக வெற்றிக் கொள்ளும் யுக்தியை தங்களுக்குள் கொண்டிருப்பர்.

* இந்த நிபுணத்துவம் உள்ளவர்களுக்கு வித்யா கர்வம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனை இவர்கள் சுயமாக உணர்ந்து சில பரிகாரங்கள் செய்து கொண்டால் சில இடர்பாடுகளில் இருந்து முன்னேற்றம் காணலாம்.

* இந்த கிரக இணைவு உள்ளவர்கள் பெரும் முதலாளிகளுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பர் என்பது ஜோதிடவிதி.

சூரியன் + புதன் இணைவிற்கான பலவீனங்கள்

* வித்யா கர்வம் ஏற்படும் போது நமக்கு ஏதும் தெரியாது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தங்கள் மனதிற்குள் இவர்கள் தாங்களாகவே விதைத்துக் கொண்டால் சில இடர்பாடுகளை தவிர்க்கலாம். சில விஷயங்கள் இழப்பதையும் தவிர்க்கலாம்.

* வித்யா கர்வம் உண்டாகாமலிருக்க படிக்கின்ற குழந்தைகளுக்கு புத்தகங்கள் தானமாக வழங்குதல் சிறப்பை தரும்.

* சூரியன் + புதனை அசுபகிரகங்கள் பார்வை செய்யும் போது சில பலன்கள் மாறுபடும். அக்கால கட்டங்களில் கபாலீஸ்வரர், பிரகதீஸ்வரரை வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.
சூரியன் + புதன் இணைவிற்கான பரிகாரங்கள்

* நிபுணத்துவ யோகம் உள்ளவர்களும் ராஜேஷ், ரமேஷ், சுரேஷ், சிவராமகிருஷணன், நடராஜன், ஜானகிராமன் பெயர் கொண்டவர்களும், சங்கரநாராயணரை விரதமிருந்து வழிபடுதல் சிறப்பான பலன்களைத் தரும். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் சென்று வருதல் நற்பலன்கள் உண்டாக்கும்.

* வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களில் புதன் கிழமை சென்று வழிபடுதலோ அல்லது விஷ்ணு ஆலயங்களில் ஞாயிற்றுக் கிழமை சென்று வழிபடுவது சிறந்த நற்பலன்களை அளிக்கும்.

* சிவா- விஷ்ணு ஆலயத்தில் சென்று வழிபடுதலும் நன்மை பயக்கும்.

முத்தான முத்துக்களின் ரகசியம்

கடலில் உள்ள முத்துச் சிற்பிகள் ஒரு வகை கடல் வாழ் உயிரினமாகும். இந்த சிற்பிகள் சந்திரன் சுவாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் மழைக்காலத்தில் கடலுக்கு மேல்வந்து சிப்பிகள் தங்கள் ஓடுகளை திறந்து கொண்டு அந்த மழைத்துளிகளை தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டு மீண்டும் கடலுக்கு அடியில் சென்றுவிடும். அந்த மழைத்துளிகளின் மீது ஒரு வகை வேதிப்பொருள் சுரப்பதால் அது முத்தாக உருவெடுக்கிறது என்பது இயற்கை பேரதிசயம். இயற்கையான முத்துக்கள் உருண்டை வடிவத்தில் இருப்பதில்லை. கோள வடிவமாகவோ நெலிந்தும் வளைந்தும் இருக்கும். இதே தொழில்நுட்பத்தை செயற்கையாக செய்து செயற்கை முத்துக்கள் உற்பத்தி செய்கின்றனர்.

The post சூரியன் + புதன் என்ற நிபுணத்துவ யோகம் appeared first on Dinakaran.

Tags : Sun ,Mercury ,Sivaganesan ,
× RELATED வெள்ளி கிரகத்திற்கு விண்கலம் அனுப்பப்படும்: இஸ்ரோ அறிவிப்பு