×

இந்த வார விசேஷங்கள்

தடைகளை எதிர்கொள்ள சதுர்த்தி
16.12.2023 – சனி

15 திதிகளில் நான்காவது திதியான சதுர்த்தி தினம். விநாயகருக்கு உரிய தினம். சங்கடங்களை அதாவது காரியத்தில் உள்ள தடைகளை நீக்கி காரிய சித்தி பெறச் செய்யும் விரதத்தை இன்று அனுஷ்டிப்பார்கள். காலை முதல் விரதமிருந்து மாலையில் விநாயகர் கோயிலுக்குச் சென்று கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பச்சரிசி புட்டு, வெள்ளரிப்பழம், தேங்காய், வாழைப்பழம் முதலிய நிவேதனங்களைப் படைத்து (அருணகிரிநாதர் சொன்னபடி) அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது அமோகமான சுப பலன்களைச் செய்யும். காரிய வெற்றியைத் தரும்.

தீமைகள் அகல திருவோண விரதம்
16.12.2023 – சனி

27 நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உரிய நட்சத்திரங்கள். “திரு” என்கிற அடைமொழியோடு அமைந்த நட்சத்திரங்கள். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனங்கள் உண்டு. ஒப்பிலியப்பன் கோயிலில், சிரவணத்திற்கு கிரிவலம் போல பிரதட்சணம் உண்டு. அன்று விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால், ‘‘திரு’’ என்று சொல்லக்கூடிய அத்தனைச் செல்வங்களும் நீங்காது நிலைத்திருக்கும். இந்த தினத்தில் விரதம் இருந்து அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி பெருமாளையும், தாயாரையும் வழிபட வேண்டும். முதல்நாள் இரவு திடஉணவு உண்ணக் கூடாது.

திருவோண விரத தினத்தில், காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்துக்கு சென்று துளசி மாலை சாற்றி தரிசித்து வரவேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்கள், ஆழ்வார் பாசுரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தல் வேண்டும். மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு அழகான குழந்தை பாக்கியம் கிட்டும்.

தனுர்மாத (மார்கழி) பூஜைகள் ஆரம்பம்
17.12.2023 – ஞாயிறு

மனிதர்களின் ஒரு வருடகாலம், தேவர்களுக்கு ஒரு தினமாகும். தட்சிணாயனமானது இரவாகவும், உத்தராயனமானது பகலாகவும் கணக்கிடப்படுகின்றது. மார்கழி மாதமானது தேவர்களுக்கு விடியற்காலையாகும். ஆதலால், நமது எல்லா தோஷங்களும் நீங்க அவசியம் இந்த மாதத்தில் தினமும் விடியற்காலையில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாடி பூஜை செய்ய வேண்டும். விடியற்காலையில், ஸ்ரீமஹாவிஷ்ணுவை பூஜை செய்து வெண் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும் என்று பிரஹ்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மார்கழி மாதம், விடியற்காலையில் ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஒரு நாள் பூஜித்தால், ஆயிரம் ஆண்டு பூஜித்த பலன் ஏற்படும். மார்கழி மாதத்தில், ஸ்ரீருத்ரபிரச்னத்தை சொல்லி ஸ்ரீபரமேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து, எருக்கம் பூ மற்றும் பில்வங்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்தால், உலகத்தில் ஏற்படும் எல்லா அழிவுகளும் நீங்கும். வீட்டிலும் திருப்பாவை திருவெம்பாவை சொல்லி இந்த பூஜையைச் செய்யலாம்.

சம்பா சஷ்டி
18.12.2023 – திங்கள்

கார்த்திகை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை திதியில் இருந்து, ஆறு நாட்கள் சம்பக சஷ்டி உற்சவம் நடைபெறும். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்டை பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர், ஆகிய அஷ்ட பைரவர்களுக்கும் ஒரே சமயத்தில் விசேஷமான வழிபாடுகள் நடைபெறும்.

பிள்ளையார் நோன்பு
18.12.2023 – திங்கள்

தொன்றுதொட்டு நகரத்தார் பிள்ளையார் நோன்பு நோற்று வருகின்றனர். ஒவ்வொரு சமூகமும் அதற்குரிய அடையாளங்களோடு சில விரதங்களையும் விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். அப்படி குறிப்பிடத்தக்க ஒரு நோன்புதான் நகரத்தாரால் கொண்டாடப்படும் பிள்ளையார் நோன்பு. கார்த்திகை மாதம் சஷ்டி திதி சதய நட்சத்திரம் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கு அடுத்த நாள் ரோகிணி நட்சத்திரத்தில் இந்த நோன்பு தொடங்கி, சதய நட்சத்திரம் அன்று நிறைவுபெறும்.

இது குறித்த செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு. நகரத்தார்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகச் செல்வர்களாக விளங்கிய காலம். வியாபார விஷயமாக வணிகம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு கார்த்திகை தீபம் அன்று அவர்களுடைய கப்பல் கடலில் புயலில் மாட்டிக் கொண்டது. தங்கள் குலதெய்வமான மரகதப் பிள்ளையாரை நினைத்து வேண்டினர். சூறாவளியில் சிக்கினாலும் எந்த ஆபத்தும் இன்றி கப்பல் அங்குமிங்கும் தடுமாறி 21 நாட்கள் கழித்து ஒரு தீவின் கரையை அடைந்தது.

அன்றைய தினம் சஷ்டி திதி சதய நட்சத்திரம். அங்கேயே அவர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் கொண்டு வந்திருந்த அரிசி மாவு, நெய், வெல்லம், முதலிய பொருள்களைக் கலந்து மாவுப் பிள்ளையார் பிடித்து, 21 நாட்களுக்கு, ஒரு நாளுக்கு ஒரு நூலாக 21 நூல்களை திரியாகத் திரித்து தீபம் ஏற்றினர். அதன் பிறகு சொந்த ஊர் அடைந்து தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லி பிள்ளையாருக்கு இனி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு, இருபத்தோராம் நாள் சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும் கூடும் நாளில் ஆவாரம்பூ அரிசிமாவு பிள்ளையாரும் புத்தம்புது வேஷ்டியில் நூலில் செய்யப்பட்ட திரியையும் கொண்டு விளக்கு ஏற்றி வணங்குவார்கள். பிறகு, அந்த மாவு பிள்ளையாரை பிரசாதமாக உண்டு மகிழ்வார்கள்.

நாச்சியார்கோயில் கல்கருட சேவை
19.12.2023 – செவ்வாய்

சோழநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநறையூரில் (நாச்சியார் கோயில்) மார்கழி பிரம்மோற்சவம் விசேஷமானது. அதில் நடைபெறும் நான்காம் நாள் கல்கருட சேவையும் அற்புதமானது. திருநறையூரில் ஐந்து உருவங்களிலும் தாயார் பெருமாளை மணந்து கொள்கிறார். இந்த பெருமாள், திருமங்கை ஆழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆசாரியர் என்று கருதப்படுகிறார்.

அதனால்தான் திருமங்கையாழ்வார் மற்ற எந்த திவ்ய தேசங்களுக்கும் இல்லாமல் திருநறையூர் என்கின்ற நாச்சியார் கோயிலுக்கு 110 பாசுரங்களை அருளிச் செய்திருக்கிறார். இந்த திவ்யதேசத்தில் மார்கழி, பங்குனி என இரண்டு முறை கல்கருட சேவை புறப்பாடு உண்டு. முதலில் கருடன் புறப்பட்டு தரிசனம் தருவார். அதற்குப் பிறகு, அதன் மேல் பெருமாள் ஆரோகணித்து வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். `பட்சிராஜன்’ என்ற பெயரோடு இத்தலத்தில் உள்ள கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒன்பது நாமங்களுடன் காட்சி கொடுக்கிறார்.

இவர் பெரிய வரப்ரசாதி. ஏழு வாரங்கள் தொடர்ந்து இவரை வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்துவந்தால், நினைத்த காரியம் நடக்கும். கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர்
உருவம் அமைந்துள்ளது. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம் முதலியவற்றை வாழைச் சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றி இவருக்கு பூஜை செய்தால், நாகதோஷம் நீங்கும். திருமணத்தடை விலகும். நாள் வாழ்வு கிடைக்கும். வியாழக்கிழமை தோறும் பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் கலந்து செய்யப்படும் அமுதக் கலசம் என்ற பிரத்யேக நைவேத்யம் செய்யப்படுகிறது.

கல்கருட சேவை புறப்பாட்டில் சந்நதியிலிருந்து கருடனை 4 பேர் பாதம் தாங்கி தூக்கி வருவார்கள். படிக்கட்டுகளிலிருந்து தூக்கி வரப்படும் கருடாழ்வாரை நீண்ட உருட்டு மரங்களில் கம்பி வளையத்திற்குள் செருகப்பட்டு பதினாறுபேர் சுமந்து வருவார்கள். இப்படி 32, பிறகு 64 பேர் கருடனைச் சுமந்து வருவார்கள். கோயிலுக்குத் திரும்பும்பொழுது இதே வரிசையில் சுமப்பவர்கள் குறைந்து கடைசியாக நான்குபேர் சுமந்து சந்நதியை அடைவார்கள். வேறு எங்கும் காணக் கிடைக்காத கல்கருட சேவை இன்று.

நந்த சப்தமி
19.12.2023 – செவ்வாய்

இந்த நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும். பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள். மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில், மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். அவற்றைக் கொடுமைப்படுத்தினால், பெரும் பாபத்தை அடைந்து, பிறவிகளில் பெருந்துயரை அனுபவிக்க நேரிடும்.

பஞ்சகவ்யம் (பால்,தயிர், நெய்,சாணம்,கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து, வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளையாக `முஹுர்த்த சாஸ்திரம்’ சொல்கிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, `கோ’ தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

சனி வக்ர நிவர்த்தி
20.12.2023 – புதன்

சனி பகவான், சுபஸ்ரீசோபகிருது வருடம் மார்கழி மாதம் நாலாம் தேதி (20.12.2023) புதன்கிழமை, மாலை 5.23 மணி அளவில் அவிட்டம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் சொந்த வீடான
கும்பராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார். அங்கு, 6.3.2026 வரை வீற்றிருந்து பலன்களை வழங்குவார். “கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்” என்ற பழமொழிக்கேற்ப, நீதிமானும் நியாயவானுமான சனி பகவான், தனது ஆட்சி வீடான கும்பராசியில் சஞ்சரிக்கும் பொழுது, நீதி, நியாயம் கிடைக்கும்படியாகச் செய்வார்.

இந்த சனிப் பெயர்ச்சி மூலம், பலன் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்: கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, ஜன.17-ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. ஆனால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த மாதம் 20-ஆம் தேதிதான் சனிப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

வாயிலார் நாயனார் குரு பூஜை
21.12.2023 – வியாழன்

சதாசர்வகாலமும் சிவனை நினைத்து சிவபதம் அடைந்த நாயனார், வாயிலார் நாயனார். சென்னை திருமயிலையில் அவதரித்தவர். இவரைப் பற்றிய பெரிய கதைகளும் வரலாற்று குறிப்புகளும் இல்லை என்றாலும்கூட, இவருடைய சந்நதி மயிலை கற்பகாம்பாள் சந்நதியில் உள்ளது. சுந்தரரும் சேக்கிழாரும் இவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். “வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் எப்பொழுதும் வழங்க வேண்டும்’’ என்று அப்பர் பாடி உள்ளபடி மனதையே ஆலயம் ஆக்கிக் கொண்டு, ஞானத்தை திருவிளக்கு ஆக்கி, ஆனந்தத்தை அவருக்கு தருகின்ற திருமஞ்சனமாக்கி, அன்பு என்கிற திரு அமுது படைத்து பூஜை செய்தவர் வாயிலார் நாயனார்.

மனதில் எப்போதும் சிவசிந்தனையும், சிவபூஜையும் செய்து கொண்டு இருந்ததே இவருடைய பேற்றுக்கு காரணம்.

‘‘மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி,
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.’’

இவரது வழிப்பாட்டின் வலிமையை இந்தப் பாடல் உணர்த்துகிறது. அவருடைய குருபூஜை மார்கழி ரேவதி நட்சத்திரத்தில் அதாவது இன்று நடைபெறுகிறது.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Chaturthi ,Chaturthi Day ,Saturn ,Vinayaka.… ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா