×

மியாவ் – குட்டிக்குட்டி குட்டீஸ் கதைகள்

நன்றி குங்குமம் தோழி

தனது முகநூல் முகப்பில் எதை எழுதினா லும் அதில் ஒரு நகைப்பு… சிலேடை என கலந்து கட்டி நட்பு வட்டங்களை ‘மியாவ்’ எனக் கலாய்க்கும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கவிஞர் யாழினிஸ்ரீக்கு நகைச்சுவை இயல்பாய் வருகிறது. இவர் வெளிப்படுத்துகிற பதிவுகள் எதுவாயினும் அதில் காமெடி கலந்திருக்கும்.முகநூலில் மட்டும் இவருக்கு 8 ஆயிரத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் மற்றும் நட்பு வட்டம் இருக்கின்றனர். சொந்தமாக இவருக்கு வலைப்பக்கமும் உண்டு. சில பல கவிதை சார்ந்த முகநூல் குழுக்கள்…

இலக்கிய வட்ட நண்பர்கள் என யாழினிஸ்ரீ ஆல்வேஸ் பிஸி.கழுத்தைத் திருப்ப முடியாத நிலையில், எழுந்து நடக்க முடியாதவராக, ருமைட்டாய்ட் ஆர்தெடிக்ஸ் (rheumatoid arthritis) மூட்டு முடக்குவாதம் நோய் மற்றும் கைஃபோஸ்காலியாஸிஸ் (Kyphoscoliosis) என்கிற முதுகுத்தண்டுவட பாதிப்பில், வீல் சேரில் இருந்த நிலையிலேயே, டேபிள்மேட் மீது மடிக் கணினி வைத்து, விசைப் பலகையில் வார்த்தைகளை கோர்த்து, விரல்களால் மாயாஜாலங்களை நிகழ்த்துகிறார் இந்த க்யூட் கவிஞர்.

கவிஞர் யாழினியின் படைப்புகளாக, “மரப்பாச்சியின் கனவுகள்”, “வெளிச்சப்பூ”, “ஐஸ்க்ரீம் அருவி”, “தீண்டாக்கனி”, “எழுத்துமி” என்கிற தலைப்புகளில், ஐந்து கவிதைப் புத்தகங்களை பொன்னுலகம் பதிப்பகம் வழியே அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட்டு வாசிப்பு உலகத்தினரிடையே பிரமிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார். மிகச் சமீபத்தில் இவர் வெளியிட்டு ஆச்சரியத்தை நிகழ்த்தியிருக்கும் குழந்தைகளுக்கான கதைப் புத்தகம், “மியாவ் – குட்டிக்குட்டி குட்டீஸ் கதைகள்.” மிக எளிய நடையில் யாழினி உருவாக்கியிருக்கும் கதாபாத்திரங்களான எலி, முயல், நரி, சிங்கம், ஓநாய் போன்றவற்றுக்கு டீனா, ஜூஜூ, மூசா, லக்கி, கீமு, சிட்டி, சிம்பா போன்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களுடன் குழந்தைகளின் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுவதுடன், கதைக்குள் குழந்தைகளை குதூகலமாகவே நடைபோட வைக்கிறார்.

மேலும் ஒவ்வொரு கதைக்குள்ளும் கதையில் வரும் விலங்குகளின் கதாபாத்திரங்கள் கோட்டு ஓவியமாக இடம் பெற்றிருக்கிறது. கதையை படிக்கும் வாண்டுகள், ஓவியத்தில் இருக்கும் கதாபாத்திரத்திற்கு தங்கள் கற்பனையை கலந்துகட்டி வண்ணம் தீட்டலாம். புத்தகத்தின் சிறப்பம்சமாய், ஒவ்வொரு கதையின் இறுதியிலும், கதைகளை வாசித்து குழந்தைகள் எந்த அளவுக்கு புரிந்துகொண்டார்கள் என்பதை அவர்கள் தங்கள் கைகளால் எழுதும் வகையில் இடம் கொடுத்து பக்கங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆசிரியரின் பக்கங்கள்…

‘‘சில வரிகளுக்கும் பல பக்க கதைகளை சொல்லும் கவிதையை நான் நேசித்தாலும், கவிதைக்குள் அடங்காத எண்ணங்களை கதைகளாக வடிப்பதும் எனக்குப் பிடிக்கும். சிறுவயது முதல் இப்போது வரையிலான எனது வாழ்க்கையில், என் முதல் கதைசொல்லி அம்மாதான். அடுத்து அப்பா மற்றும் பாட்டி. மூவருமே தங்கள் வாழ்வியல் கதைகளையும் சொல்லுவார்கள். அவற்றைக் கேட்டு வளர்ந்த நானும் குழந்தைகளுக்கான கதை சொல்லியாக, 50 பக்கங்களில் 10 சிறிய கதைகளை படங்களுடன் புத்தகமாக்கி வெளியிட்டு இருக்கிறேன்.

நமது வாசிப்புக் காலத்தில் நாம் படித்த ஷெர்லக் ஹோம்ஸ், அம்புலி மாமா, துப்பறியும் சாம்பு, சிஐடி சங்கர்லால் கதைகள் இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் எடுபடவில்லை. காரணம், இன்றைய குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாமலே போய்விட்டது என்பதே பலரின் குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. இன்றைய தலைமுறை புத்தகங்களைவிட ஸ்மார்ட் போன்களில் நேரத்தைச் செலவழிக்கின்றனர்.

புத்தகம் வாசிக்கும் திறன், குழந்தைகளின் கற்பனை உலகத்தையும், அறிவுத் திறனையும் திறக்கக்கூடிய வல்லமை பெற்றது. குழந்தைகளின் கவனத்தை வாசிப்பின் பக்கம் திசைதிருப்ப மனதைக் கவரும் கதைகள், விலங்குகள், பறவைகளின் கதாபாத்திரங்கள், கண்கவரும் விளக்கப் படங்கள் அதிகம் நிறைந்த புத்தகங்கள், அனிமேஷன் புத்தகங்கள், வண்ணத் துணியினால் ஆன புத்தகங்கள் என வித்தியாசமான புத்தகங்களை அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்து அல்லது அவர்களையே தேர்ந்தெடுக்க வைத்து, வாசிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் விளையாட்டாய் புத்தகங்களை வாசித்து வண்ணம் தீட்டி தங்கள் கற்பனைத்திறனை வளர்த்துக்கொள்ள ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எனது முயற்சியாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது. இத்துடன் தமிழ் வாசிப்பு பழக்கத்தையும், தமிழ் உச்சரிப்பையும் மெருகேற்றவும், ஆங்கிலவழிக் கல்வியில் பயிலும் குழந்தைகளுக்கு தமிழ் உச்சரிப்பை பொழுதுபோக்காய் கற்றுக்கொள்ளவும் இந்தக் கதைப் புத்தகம் நிச்சயம் உதவும்.

குழந்தைகளுக்கு நன்னெறிக் கருத்துகளை எடுத்துச் சொல்லி, கைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடக்கும் அவர்களை, ஹைடெக் சாதனங்களிடமிருந்து திசை திருப்பும் முயற்சியாகவும் இது வெளிவந்திருக்கிறது. குறிப்பாக நமது குழந்தைகள் உதாரணங்கள் மூலமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்வார்கள். குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர் தங்களையே உதாரணமாக்கி புத்தகங்களை அடிக்கடி படிக்கும்போது குழந்தைகளும் புத்தகங்களை வாசிக்க முயற்சிப்பார்கள்.

ஆதலால் குடும்பமாக புத்தகம் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்குவதுடன், வீடு முழுவதும் புத்தகங்கள், வாசிப்பு பொருட்கள் இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். “மியாவ் ட்ரீம்ஸ்” என்கிற பெயரில் எனது சுய வெளியீடாக வெளிவந்துள்ள ‘‘மியாவ் – குட்டிக்குட்டி குட்டீஸ் கதைகள்” உங்கள் வீட்டுக் குழந்தைகள் கரங்களில் தவழ்ந்தால் அதுவே என் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post மியாவ் – குட்டிக்குட்டி குட்டீஸ் கதைகள் appeared first on Dinakaran.

Tags : Miao ,Little ,Saffron ,Dinakaran ,
× RELATED சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து குறைவு