×

அண்ணனூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் மின்கசிவால் தீ விபத்து

ஆவடி: அண்ணனூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு 11 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கம்ப்யூட்டர், டேபிள், சேர் உள்பட பல்வேறு அலுவலக பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆவடி அருகே அண்ணனூரில் ரயில் நிலையம் உள்ளது. இங்குள்ள நடைமேடையில் டிக்கெட் கவுன்டர் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் டிக்கெட் கவுன்டரில் ஊழியர் வேலைபார்த்து கொண்டிருந்தார்.

அப்போது மின்பெட்டியில் இருந்த பழைய வயர்களில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்தில் வயர் முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதை பார்த்ததும் டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் உள்பட அறையில் இருந்த சிலர் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் டிக்கெட் கவுன்டர் அறை முழுவதும் தீப்பிடித்தது. இதில், அறைக்குள் இருந்த கம்ப்யூட்டர், டேபிள், சேர் உள்பட பல்வேறு அலுவலக பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து, அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி, டிக்கெட் கவுன்டரில் பரவிய தீயை முற்றிலும் அணைத்தனர். இதில், அந்த அறைக்குள் இருந்த அனைத்து அலுவலக பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன. இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post அண்ணனூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் மின்கசிவால் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Annanur railway station ,Avadi ,Dinakaran ,
× RELATED அறநிலைய நில ஆய்வாளர் தங்கிய விடுதியில் சோதனை