×

திருப்பத்தூர் அருகே திக்…திக்…திக்… சுடுகாடு சாலையை கடந்த அமானுஷ்ய உருவம் செல்போனில் படம் எடுத்தவருக்கு காய்ச்சல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நேற்றிரவு அமானுஷ்ய உருவத்தை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் அருகே நேற்றிரவு தனியாக சென்ற வாலிபர் ஒருவர் அமானுஷ்ய உருவத்தை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது. அதுபற்றிய விவரம்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர்.

இவர் நேற்றிரவு 10 மணியளவில் பணி முடிந்து மொபட்டில் வீடு திரும்பினார். சுண்ணாம்புக்குட்டை அருகே உள்ள சுடுகாடு ஒட்டிய புளியமர தோப்பை அவர் கடந்தபோது திடீரென ஒரு உருவம் அந்த சாலையை கடந்துள்ளது. இதனால் நிலைகுலைந்த வாலிபர், தனது மொபட்டை நிறுத்திவிட்டு செல்போனில் அந்த உருவத்தை போட்டோ எடுத்துள்ளார். அந்த உருவம் உடல் முழுவதும் நீளமான முடியுடன், பெரிய விரல்களுடன் உயரமான தோற்றத்தில் இருந்துள்ளது.

மேலும் மெதுவாக சாலையை கடந்து புளியமரத்தின் அருகே சென்றதும் மறைந்து விட்டதாம். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், அந்த வழியாக செல்ல அச்சமடைந்து வந்த வழியாக திரும்பி மாற்றுப்பாதையில் தனது வீட்டை அடைந்துள்ளார். பேயை பார்த்ததாக தனது குடும்பத்தாரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் கூறியுள்ளார்.

ஆனால் முதலில் அதை நம்ப மறுத்த அவர்களிடம், செல்போனில் எடுத்த போட்டோவை காண்பித்துள்ளார். இதை பார்த்து அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த புகைப்படத்தை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அந்த புகைப்படம் நள்ளிரவு முதல் நாட்றம்பள்ளி பகுதியில் வைரலாகி வருகிறது. இதனிடையே பேயை கண்டதாக கூறப்படும் அந்த வாலிபருக்கு, நள்ளிரவு முதல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருப்பத்தூர் அருகே திக்…திக்…திக்… சுடுகாடு சாலையை கடந்த அமானுஷ்ய உருவம் செல்போனில் படம் எடுத்தவருக்கு காய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Chudugadu road ,Tirupattur ,Tirupathur ,Chudugadu ,
× RELATED விஷச் சாராயம் பற்றி தகவல் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு..!!