×

வி.கோட்டா அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்

*பல லட்சம் மதிப்புள்ள பயிர்கள் நாசம்

*நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருமலை : வி.கோட்டா அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 13 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, பயிர்களை நாசப்படுத்தியுள்ளது. பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடக மாநில எல்லையோர கிராம பகுதியில் இருந்து இரவோடு இரவாக 70 காட்டு யானைகள் கூட்டம் ஆந்திர மாநிலம் எல்லையான குப்பத்தில் புகுந்துள்ளது. இதனால் ஆந்திர மாநில எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் உஷார்படுத்தப்பட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வந்தனர். மேலும், இரவு நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம், வீட்டில் இருந்து யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சித்தூர் மாவட்டம், வி.கோட்டா மண்டலத்தில் ஒரு வாரமாக யானைகள் கூட்டம் சுற்றி வருகிறது. குறிப்பாக கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள மோட்லப்பள்ளி, கோனுமாகுலப்பள்ளி, தெட்டுபண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் 13 யானைகள் கூட்டம் சுற்றி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. வாழை, நெற்பயிர், தென்னைமரம் உள்ளிட்டவற்றை அதிகளவில் நாசப்படுத்தியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், யானைகள் எந்த திசையில் இருந்து கிராமங்களை நோக்கி வரும் என தெரியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூறுகையில், ‘யானைகள் கூட்டமாக வந்த பயிர்களை நாசப்படுத்தி செல்வதால் எங்களுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் விரட்ட முயன்றால் எதிர்தாக்குதல் நடந்த வருவதால் விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யானைகள் சேதப்படுத்திய பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என கூறினர்.

The post வி.கோட்டா அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Krishnapuram panchayat ,V. Kota ,Tirumala ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு