×

திருக்குறளில் நடைபயிலும் அன்னம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருக்குறளில் காகம், மயில் போன்ற பறவைகள் ஒன்றுக்கு மேற்பட்ட குறட்பாக்களில் இடம்பெறுகின்றன. அன்னப் பறவை ஒரே ஒரு குறட்பாவில் மட்டும் நடைபயில்கிறது.

‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.’
(குறள் எண் 1120)

மென்மையான அனிச்ச மலரும் அன்னப் பறவையின் மெல்லிய இறகும்கூட மாதர்களின் பாதத்தில் பட்டால் நெருஞ்சி முள்போல் குத்தக் கூடும் எனச் சொல்லி, பெண்களின் மெல்லியல்பைக் காமத்துப் பாலில் போற்றுகிறார் திருவள்ளுவர்.

அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், நீரை விட்டுவிட்டுப் பாலை மட்டும் அருந்துமாம். கல்வி கற்பதிலும் அதுபோல்தான் நாம் இயங்க வேண்டும். எல்லா நூல்களையும் படிக்காமல் தேவைப்பட்ட சிறந்த நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பயில வேண்டும் என்கிறது நாலடியாரில் இடம்பெறும் ஒரு வெண்பா.

‘கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கிற் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.’

அன்னப் பறவையைப் பழந்தமிழ்ப் புலவர்களான பரணர், பிசிராந்தையார் உள்ளிட்டோர் தூது அனுப்புவதாகப் பாடியுள்ளார்கள். தற்காலத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கவிஞர் மீரா, ‘அன்னம் விடு தூது’ என்ற தலைப்பில் ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். மகாபாரதத்தில் நளனையும் தமயந்தியையும் இணைத்து வைக்கும் பறவையாக அன்னம் இடம்பெறுகிறது. அது நளனுக்கும் தமயந்திக்கும் இடையே பறந்து பறந்து சென்று அவர்களிடையே காதல் வளரவும் அதன்மூலம் கதை வளரவும் உதவுகிறது.

பிரபல ஓவியர் ரவிவர்மா வரைந்த தமயந்தி ஓவியத்தில் அன்னப் பறவையுடன் தமயந்தி பேசும் காட்சி சித்திரிக்கப் பட்டுள்ளது. நடையில் சிறந்த அன்னம், தான் எப்படி அழகாக நடக்க வேண்டும் என தமயந்தியிடம் பயிற்சி பெற்றதாக நளசரிதம் விவரிக்கிறது.

திருதராஷ்டிரர் மகாபாரதப் போரில் துரியோதனன் உள்ளிட்ட தன் நூறு பிள்ளைகளையும் பறிகொடுத்தார். அவர் மனமும் அவர் மனைவி காந்தாரியின் மனமும் அளவற்ற புத்திரசோகத்தில் தளும்பித் தத்தளித்தன.முக்காலமும் அறிந்த கடவுளேயான ஸ்ரீகிருஷ்ணரிடம் தங்களுக்கு ஏன் இத்தகைய மாபெரும் துயரம் நேர்ந்தது என திருதராஷ்டிரர் வினவினார். திருதராஷ்டிரரின் கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் கனிவுடன் பதில் சொல்லலானார்;

‘திருதராஷ்டிரரே! இந்தப் பிறவியில் உள்ளது போலவே சென்ற பிறவியிலும் நீங்கள் இருவரும் ராஜாவாகவும் ராணியாகவும்தான் இருந்தீர்கள். ஆனால், திருமணமாகிப் பல்லாண்டுகள் ஆகியும் மகப்பேறு அமையாத கவலை உங்கள் இருவரையும் வாட்டி வதைத்தது. ஒருநாள் நடந்துசெல்லும் போது குளத்தில் நீந்தும் ஓர் அன்னப் பறவையையும் அதன் நூறு குஞ்சுகளையும் பார்த்தீர்கள். கடும் பொறாமை கொண்ட நீர், அந்த நூறு குஞ்சுகளையும் அம்பெய்து ஒவ்வொன்றாக அழித்தீர்! தாய்ப் பறவையான அன்னம் ஒவ்வொரு குஞ்சு கொல்லப்பட்ட போதும் இறக்கைகளை அடித்துக் கொண்டு செய்வதறியாது பதறித் துடித்தது. ஆனால், அந்தப் பறவையின் வேதனையை அப்போது நீங்கள் பொருட்படுத்தவில்லை.

அந்த அன்னப் பறவையின் தாளமுடியாத துயரமே உங்களின் இந்தப் பிறவியில் உங்களுடைய நூறு குழந்தைகளையும் ஒருசேர அழித்தது. ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு. இது வாழ்க்கை நியதி. இதை உணர்ந்து அமைதி கொள்ளுங்கள்!’ கிருஷ்ணரின் ஆறுதல் வார்த்தைகள் திருதராஷ்டிரரையும் காந்தாரியையும் சாந்தப்படுத்தின என்கிறது மகாபாரதம்.

கம்பராமாயணம் அன்னத்தை மையப் படுத்தி ஓர் அருமையான காதல் நாடகத்தை நடத்திக் காட்டுகிறது, அன்னம் (ஓதிமம்) நடப்பதைப் பார்த்து மனத்தில் சீதையின் நடையோடு அன்ன நடையை ஒப்பிட்டு ராமன் ஒரு மெல்லிய புன்முறுவல் பூத்தானாம்.

சீதை ஆண் யானை (போதகம்) நடப்பதைப் பார்த்து ராமபிரானின் கம்பீரமான நடையை அதோடு ஒப்பிட்டு, தானும் மெலிதாய் ஒரு முறுவல் பூத்தாளாம். இந்த அழகிய காட்சியைத் தம் பாடலொன்றில் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுகிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

‘ஓதிமம் ஒதுங்க, கண்ட
உத்தமன், உழையள் ஆகும்
சீதை தன் நடையை நோக்கி,
சிறியதோர் முறுவல் செய்தான்;
மாது அவள் தானும், ஆண்டு
வந்து, நீர் உண்டு, மீளும்
போதகம் நடப்ப நோக்கி,
புதியதோர் முறுவல் பூத்தாள்.’

நீரில் வாழ்ந்தாலும், அன்னத்தின் இறகுகளில் ஒரு துளி நீர்கூட ஒட்டாது என்று சொல்லப்படுகிறது. அதுபோல, இந்த உலகில் வாழ்ந்தாலும் பந்த பாசங்கள் ஞானிகளின் மனத்தில் ஒட்டுவதில்லை.

அன்னப் பறவை தண்ணீரிலிருந்து பாலைப் பிரித்தறிவது போல் மெய்ஞ்ஞானிகள் உலக மாயையிலிருந்து இறைச் சக்தி என்ற உண்மையைப் பிரித்தறிவார்கள். அதனாலேயே அவர்கள் உயர்ந்த அன்னப் பறவை போன்றவர்கள் எனப் பொருள்படும் வகையில் பரமஹம்சர் என அழைக்கப் பட்டார்கள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், பரமஹம்ச யோகானந்தர், முக்தானந்த பரமஹம்சர் என்றெல்லாம் மெய்ஞ்ஞானிகள் அழைக்கப் படுவதன் காரணம் இதுவே. ராமகிருஷ்ண மடத்து இலச்சினையில் மெய்ஞ்ஞானம் அடைவதே வாழ்வின் குறிக்கோள் என்பதைப் புலப்படுத்தும் வகையில், மெய்ஞ்ஞானத்தின் வடிவான அன்னப் பறவை இடம் பெற்றிருக்கிறது. அவ்வையாரின் மூதுரையில் அன்னத்தை உவமையாகச் சொல்லும் ஓர் அழகிய வெண்பா இடம்பெற்றுள்ளது.

‘நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.’

‘நல்ல தாமரைக் குளத்தை நாடிச் செல்லும் அன்னப் பறவை. அதுபோல் கற்றாரைக் கற்றார்தான் மதிப்பர். கல்வியறிவில்லாத மூர்க்கரை மூர்க்கரே விரும்புவர். மயானத்தில் பிணத்தைக் காக்கைகள் கொத்துமல்லவா, அந்தக் காக்கை போன்றவர்கள் மூர்க்கர்கள்!’ என்கிறார் தமிழ் மூதாட்டி அவ்வையார். திருவண்ணாமலையில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் சிவன் ஜோதி வடிவாகக் காட்சி தந்த நிகழ்வே `அடிமுடி தேடிய கதை’ எனப்படுகிறது.

சிவபெருமானின் அடியையும் முடியையும் காணும் எண்ணத்தில் புறப்பட்டார்கள் திருமாலும் பிரம்மனும். திருமால் வராக அவதாரமெடுத்து பூமியைப் பிளந்துகொண்டு அடியைக் காண்பதற்காகச் சென்றார், பிரம்மன் அன்னப் பறவையின் வடிவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே பறந்து சென்று, சிவனின் முடியைக் காண முயற்சி செய்தார்.

ஆனால், இருவராலும் சிவபெருமானின் அடியையோ முடியையோ காண இயலவில்லை. அவர்கள் இருவரும் பக்தியோடு பிரார்த்தனை செய்தபோது சிவன் ஜோதி வடிவாய் அவர்களுக்குக் காட்சி தந்தான் என்கிறது சிவ புராணம், திருமால் லட்சுமியின் கணவர். எனவே செல்வத்தின் அதிபதி. பிரம்மதேவன் சரஸ்வதியின் கணவர். எனவே கல்வியின் அதிபதி.

செல்வத்தாலோ கல்வியாலோ முழுமுதல்வனான இறைவனை அறிய முடியாது. பக்தியால் மட்டுமே இறைவனை உணர முடியும் என்பதை விளக்கும் கதை இது. கல்வியறிவால் இறைவனை அறிய இயலாது என்று ராமகிருஷ்ண பரமஹம்சரும் அறிவிக்கிறார். ‘பஞ்சாங்கத்தில் மழை எப்போது வரும் என்று போட்டிருக்கும். ஆனால் பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது!’ என்று நகைச்சுவையுடன் அறுதியிட்டுக் கூறுகிறார் அவர்!

`ஹம்ச கீதை’ என்றே ஒரு கீதை உண்டு. அர்ச்சுனனுக்கு பகவத் கீதையைச் சொன்ன கிருஷ்ணர்தான் இந்த ஹம்ச கீதையையும் அருளியவர். நான்கு முகங்கள் கொண்ட பிரம்மதேவனின் மனத்திலிருந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு புதல்வர்கள் தோன்றினார்கள். அந்த நால்வருக்கும் யோகத்தின் சூட்சுமங்களை உபதேசம் செய்ய விரும்பினார் ஸ்ரீகிருஷ்ணர்.

அதன்பொருட்டு அவர் ஓர் அன்னப் பறவையின் வடிவை எடுத்துக் கொண்டார். சனகாதி முனிவர்களான அந்த நால்வருக்கும் யோக சூட்சுமங்களை உபதேசம் செய்தது அந்தக் கிருஷ்ணப் பறவை.அந்த கீதையை உபதேசம் செய்யும் போது கிருஷ்ணர் அன்னத்தின் வடிவத்தில், அதாவது ஹம்ச வடிவில் இருந்ததால், அந்த கீதை ஹம்ச கீதை என்றே அழைக்கப் படுகிறது. செறிவான பல நீதிக் கருத்துகளை உள்ளடக்கியது ஹம்ச கீதை.

சரஸ்வதியின் வாகனம் அன்னம்தான். அன்ன வாகன தேவி என்றே அவள் அழைக்கப் படுகிறாள். கலைவாணி தொடர்பான அனைத்தும் வெண்மையானவை. ‘வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்’ என்கிறார் பாரதியார். சரஸ்வதி வெண்தாமரையில் வீற்றிருக்கிறாள். வெண்மை நிறமுள்ள ஆடையையே தரித்திருக்கிறாள், அவற்றிற்கெல்லாம் பொருத்தமாக வெண்மை நிறமுடைய அன்னமே அவள் வாகனமாகவும் அமைந்திருக்கிறது,

‘வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப்
பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் –
வெள்ளை
அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
சரியாசனம் வைத்த தாய்.’

– என்பது காளமேகப் புலவர் எழுதிய வெண்பா.

காயத்ரீ வகைகளில், `ஹம்ச காயத்ரீ’ என்றே ஒரு காயத்ரி மந்திரம் உண்டு. ‘நம் ஆத்மனில் உறையும் ஹம்சத்தை உணர்வோமாக. அந்தப் பரமஹம்சமான பரமாத்மாவை தியானிப்போம். அது நம் அறிவைத் தூண்டட்டும்’ என்பது ஹம்ச காயத்ரி மந்திரத்தின் பொருள். கோயில்களில் அன்னப் பறவையின் அழகிய வடிவம் சிற்பமாக அமைந்திருப்பதைக் காணலாம். அதுமட்டுமல்ல, பிரகாரங்களில் மேலே உள்ள விதானத்தில் அன்னப் பறவைகள் அழகிய சித்திரங்களாகவும் தீட்டப் பட்டுள்ளன.

இப்போது புடவைத் தலைப்புகளில்கூட அழகிய அன்னப் பறவையின் வடிவங்கள் தீட்டப் பட்டு ஆடையின் வனப்பைக் கூட்டுகின்றன. அன்னப் பறவை இடம்பெற்றுள்ள தலைப்போடு கூடிய சேலைகளை அணிந்து நடக்கும் பெண்களை அவர்கள் அன்ன நடை நடக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் மறுத்துச் சொல்ல முடியாது!அன்னப் பறவையின் வடிவத்தை மேலே தாங்கிய குத்துவிளக்குகள் உண்டு. விளக்கில் இடம்பெறும் பெருமை அன்னத்திற்கும் மயிலுக்கும் மட்டுமே உண்டு. மங்கலமான விளக்கை கொக்கு காகம் போன்ற பறவைகள் அலங்கரிப்பதில்லை.

இமயமலையில் உள்ள புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஏரி மானசரோவர் ஏரி. கடல்போல் பரந்த அந்த ஏரியில் இப்போதும்கூட மாபெரும் தங்க நிற அன்னங்கள் தென்படுவதாகச் சொல்கிறார்கள். அவை நீந்தும் அழகைப் பார்ப்பது தனி ஆன்மிகப் பரவசத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகிறார்கள்.

இமய மலைக்கு யாத்திரை சென்று வந்தவர்கள் இந்தச் செய்தியை உறுதிப்படுத்துகிறார்கள். தமிழ்த் திரைப்பாடல்களும் அன்னத்தைப் போற்றுகின்றன. `பாவை விளக்கு’திரைப்படத்தில் மருதகாசி எழுதி கே.வி.மகாதேவன் இசையமைப்பில், சி.எஸ்.ஜெயராமன் குரலில் ஒலிக்கும் வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்ற புகழ்பெற்ற திரைப்பாடலில் வரும் அழகிய வரிகள் இதோ;

‘அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடைபயிலும்
ஆடல்கலை இலக்கணத்தை அறியவரும் மயிலும்
இன்னிசையைப் பாடம்கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்!’

மெய்ஞ்ஞானத்தின் குறியீடே அன்னப் பறவை. சாதாரண மானிடனாகப் பிறந்த ஒருவன் ஆன்மிக எழுச்சி பெற்று தியானத்தாலும் தவத்தாலும் பரமஹம்சமாக உயர்ந்து ஆன்மிக வானில் நீந்த வேண்டும் என்பதே நம் ஆன்மிகத்தின் இலக்கு.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post திருக்குறளில் நடைபயிலும் அன்னம்! appeared first on Dinakaran.

Tags : Thirukkural ,
× RELATED திருக்குறள், தமிழ் பண்பாடு...