×

ஏன் எதற்கு எப்படி?: நாடி ஜோதிடத்தை எப்படி கணிக்கிறார்கள்?

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

நாடி ஜோதிடத்தை எப்படி கணிக்கிறார்கள்?
– சீதாராமன், ஸ்ரீரங்கம்.

தங்களை நாடி வருகின்ற நபர்களின் கைரேகைகளைக் கொண்டு, அவர்களிடம் உள்ள ஓலைச் சுவடிகளில் எது ஒத்துப் போகிறதோ, அந்த ஓலைச் சுவடியில் உள்ள பலன்களை உரைப்பதுதான் நாடிஜோதிடம் என்று அழைக்கப்படுகிறது. அந்த ஓலைச் சுவடியில் என்ன சொல்லப் பட்டிருக்கிறதோ, அதனை அப்படியே வருபவர்களிடம் சொல்லிவிடுவார்கள்.

? புதிதாக திருமணமான தம்பதியருக்கு எந்த திசை அறை நல்லது?
– விஸ்வநாதன், பெரியகுளம்.

நம்மூரைப் பொறுத்த வரை தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் அறை நல்லது. வடக்கிலிருந்து வீசும் காற்றை வாடைக்காற்று என்றும், தெற்கிலிருந்து வீசும் காற்றை தென்றல் என்றும் அழைப்பார்கள். தென்மேற்கு பருவக்காற்று வீசும் உத்தராயண காலத்தில் திருமணம் நடத்துவது நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் கூறும். தென்மேற்கு மூலையில் ஜன்னல் இருந்து, அது வழியாக வீசும் தென்றல் காற்று என்பது புதுமண தம்பதியருக்கு உற்சாகத்தைத் தரும் என்பதால், அந்த திசையில் அமைந்திருக்கும் அறை முக்கியத்துவம் பெறுகிறது.

? மூடிய கிணற்றின் மேல் வீடு கட்டலாமா?
– கே. குணவதி, ராஜபாளையம்.

முதலில் கிணற்றை மூடலாமா என்பதை அறிந்து கொள்வோம். தண்ணீர் உள்ள கிணற்றினை மூடக்கூடாது. அதே போல, நீர் நிலைகள் ஆன குளம் மற்றும் ஏரிகளை தூர்த்து அதன் மேல் வீடு கட்டுதலும் தவறுதான். நீர் என்பதுதான் இவ்வுலகின் ஆதார சக்தி. நீர் நிலைகளின் மேல் வீடு கட்டுவது என்பது முற்றிலும் தவறு. ஜோதிடவியல் ரீதியாக நீர் நிலைகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் கோள் சந்திரன் ஆகும். இந்த சந்திரனைத்தான் ஜோதிடத்தில் மனோகாரகன் என்று அழைப்பார்கள். இதுபோல் நீர்நிலைகளின் மேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி களில் குடியிருப்போரின் குடும்பங்களில் எவரேனும் ஒரு உறுப்பினரின் மனநிலை என்பது பாதிக்கப்படுகிறது என்பதை அனுபவ பூர்வமாக கண்டிருக்கிறேன்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பாதிப்பு அதிகமாக இருப்பதை நம்மால் காணமுடியும். தண்ணீர் உள்ள கிணற்றினை மூடி அதன்மேல் வீடு கட்டுவது என்பது எதிர்மறையான பலனைத் தந்துவிடும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, அந்த மனையில் கிணறு அமைந்திருக்கும் பகுதி சரியில்லை என்றாலும், வேறு வழியே இல்லை மூடித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் உண்டானாலும், அதற்குரிய பரிகார பூஜைகளை நடத்திவிட்டு, மூன்று மாதங்கள் கழித்து அந்த மனையில் வீடு கட்டத் துவங்க வேண்டும்.

அந்த மூன்று மாத காலத்திற்குள் அந்த மனையின் சொந்தக்காரர் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில், மேலும் ஏதேனும் பரிகாரங்கள் தேவைப்படுகிறதா என்பதையும் ஆராய்ந்து, அதற்கு ஏற்றார்போல் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக, தண்ணீர் உள்ள கிணற்றை மூடிவிட்டு அதன்மேல் வீடுகட்டுவது என்பது கூடாது.

? குழந்தை பிறக்க வாஸ்து உதவுமா?
– ஜி.குமரேசன், சோளிங்கர்.

பழங்காலத்திய இந்திய வாஸ்து சாஸ்திரத்தில், குழந்தை பிறப்பிற்கு நேரடியான தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. வாஸ்து சாஸ்திரம் என்பதே ஆகம நூல்களில், ஆலயங்கள் அமைக்கும் முறையை சிற்ப சாஸ்திரத்தோடு இணைத்து சொல்லப்பட்ட விதிமுறைகளை உள்ளடக்கியது ஆகும். காலப் போக்கில் வாஸ்து பற்றிய ஆராய்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக ஜோதிடர்கள் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் ஒரு சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். இது பற்றிய ஆராய்ச்சி இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. குழந்தை பிறக்க வாஸ்துவைவிட அவரவர் ஜாதகத்தில் உள்ள புத்ரஸ்தானத்தின் வலிமைதான் துணை புரியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

? வீட்டில் குளவிகள், தேனீக்கள் கூடு கட்டுவது நல்லதா, கெட்டதா?
– சு.வேலவன், நாகை.

குடியிருக்கும் வீட்டிற்குள் மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினத்திற்கும் இடமில்லை. பசுமாட்டினைகூட வீட்டிற்குள் பூஜை செய்யும் நேரத்தில் மட்டும்தான் அனுமதிப்போம். மற்ற நேரங்களில் பசுமாடு அதன் கொட்டகையில்தான் இருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகள் என்றழைக்கப்படும் நாய், கோழி, பூனை ஆகியவற்றையும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ளக் கூடாது. அந்த வரிசையில், வீட்டிற்குள் குளவிகள், தேனீக்கள் மற்றும் குருவிகள் எதுவும் கூடு கட்டக் கூடாது. வீட்டிற்கு வெளியே தோட்டம் அல்லது கொல்லைப் புறத்தில் கூடு கட்டலாம். அது நன்மையே.

? இருதய ரேகை என்பது என்ன?
– சந்தானகோபாலகிருஷ்ணன், முகப்பேர்.

கைரேகை சாஸ்திரத்தில் இந்த இருதய ரேகைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஹஸ்த ரேகா சாஸ்திரம் என்ற நூல் கைரேகை பற்றிய அமைப்புகளைத் தெளிவாகச் சொல்கிறது. அதில் ஹ்ருதய ரேகை என்பது சுண்டு விரலுக்குக் கீழே துவங்கி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலை நோக்கிச் சென்றவாறு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இதய ரேகையானது பெரும்பாலும் இவர்களுடைய வாழ்க்கைத்துணையைப் பற்றி அறிய உதவுகிறது. அதே போல தனிப்பட்ட முறையில் அடக்கி ஆளும் தன்மை, அன்பின் மூலமாக மற்றவர்களை தன்வயப்படுத்துதல் போன்ற குணங்களையும் இந்த இதய ரேகையின் அமைப்பைக் கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

? மருத்துவ சிகிச்சைக்கும் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா?
சத்தியராஜன், சின்ன சேலம்.

விபத்து, பிரசவம், வலிப்பு, விஷக்காய்ச்சல் போன்ற எமர்ஜென்சியைத் தவிர, மற்ற காலங்களில் சாதாரணமாக ஒரு மருத்துவ சிகிச்சைக்குச் செல்வதற்கு கண்டிப்பாக நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும். குறிப்பாக, அறுவை சிகிச்சை என்று வரும்போது அதற்கென தனியாக விதிமுறைகள் உண்டு. உதாரணத்திற்கு, செவ்வாய் ஹோரையிலோ அல்லது சந்திராஷ்டம நாட்களிலோ அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. கண்புரை அறுவை சிகிச்சை, மூட்டுமாற்று அறுவை சிகிச்சை போன்ற எமர்ஜென்சி இல்லாத அறுவை சிகிச்சைகளுக்கு, கண்டிப்பாக நாள் நட்சத்திரம் பார்த்துத்தான் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த சிகிச்சைக்கான முழுமையான பலனை அடைய முடியும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன்,ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி?: நாடி ஜோதிடத்தை எப்படி கணிக்கிறார்கள்? appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,KB ,Hariprasad Sharma ,Seetharaman ,Srirangam ,
× RELATED குண்டர் சட்டத்தில் முதியவர் கைது