×

வலங்கைமான் அருகே சாலையில் வாகன ஓட்டிகளுக்கான பலகைகள் திருட்டு

*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்ட சாலையின் பக்கவாட்டில் வாகன ஓட்டிகளின் கவனத்திற்காக வைக்கப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை பலகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஒன்றிய, மாநில அரசு நிதிகளின் மூலம் சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் ஆதிச்சமங்கலம் மற்றும் வேதாம்பரை கிராமத்தினை இணைக்கும் விதமாக சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் கடந்த 2020-2021ம் நிதி ஆண்டில் தார் சாலை அமைக்கப்பட்டது.அப்போது புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையில் ஆங்காங்கே ஆறு சிறிய பாலங்கள் மற்றும் 150 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டன இந்நிலையில் பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகள் முடிவுற்றதையடுத்து சாலையின் பக்கவாட்டில் ஆங்காங்கே சாலையின் வளைவுகள் சாலையின் பிரிவுகள் பாலங்கள் உள்ளிட்டவைகளை குறிக்கும் விதமாக இரும்பினால் ஆன பதாகைகள் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டு பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத இப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கான்கிரீட்டை உடைத்து பத்துக்கும் மேற்பட்ட அறிவிப்பு பலகைகளை திருடி சென்றுள்ளனர்.
சிலர் இப்பதாகைகளை உடைத்து ஆட்டோக்களில் ஏற்றி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பயன்பெறும் விதமாக வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளை பணத்திற்காக ஆசைப்பட்டு சில மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வலங்கைமான் அருகே சாலையில் வாகன ஓட்டிகளுக்கான பலகைகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Walangaiman ,Valangaiman ,Adichamangalam Panchayat ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணி வெற்றி பெற அயராது...